ரேஷன் கடை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? குழப்பத்தில் தேர்வர்கள்

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள்(salesman) மற்றும் கட்டுநர் (Packer) பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு நடைபெற்று கிட்டத்தட்ட 3 மாதங்கள் நெருங்கும் நிலையில், இறுதி பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது. தேவையற்ற குழப்பங்களை நீக்க, உரிய கால வரம்பிற்குள் இறுதி பட்டியலை வெளியிட  வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம், கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (salesman) மற்றும் கட்டுநர் (Packer) பதவிகளுக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை ஆட்சேர்ப்பு நிலையங்கள் வெளியிட்டன. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம், மாநிலம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், வெறும் நேர்காணல் மட்டும் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படும் என்பதால், லட்சக்கணக்கான பேர் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர் .

இதற்கான, நேர்காணல் தேர்வு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 15 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், விண்ணப்பதாரரின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர், அன்று மாலையே நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும், கிட்டத்தட்ட 15 -20 நேர்காணல் அறைகள் அமைக்கப்பட்டு, முன்னாள்/இன்னாள் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தேர்வை நடத்தினர்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுநாள் வரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு முடிவுகளை அந்தந்த மாவட்ட வட்டாச்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

கிராம உதவியாளர் பதவியைப் பொறுத்த வரையில், அறிவிப்பு நிலை முதல் இறுதி நியமனம் வரை, அந்தந்த மாவட்ட வட்டாச்சியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று மேற்கொண்டனர். வரப்பெற்ற விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

இதையும் வாசிக்க: ரேஷன் கடை மூலம் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்: அரசின் சூப்பர் யோசனை என்ன தெரியுமா?

ஆனால், நியாய விலைக் கடைகளில் இத்தகைய வெளிப்படைத் தன்மை இல்லை என்று தேர்வர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியல் இதுநாள் வரை இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை. இத்தகைய, பட்டியல் வெளியிடப்படும் என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட வழிக்காட்டுதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment