இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்: மக்களுடன் கலந்துறவாடி வாழும் சிட்டுக்குருவிகள்

உலக சிட்டுக்குருவிகள் தினம்

அலாரம் சப்தத்திற்கு அரக்கப் பறக்க எழுந்திருக்காமல் கீச் கீச் என்ற பறவைகளின் சப்தத்தால் கண்விழித்த நம் முன்னோர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

இன்று நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும்கூட பறவைகளைப் பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. சின்னச் சின்னச் சிட்டுக்குருவிகளும் உலகளவில் அழிந்து வரும் அரிய வகை பறவை இனங்களில் சேர்ந்துவிட்டது.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழும் உரிமையைப் பெற்றுள்ளன. ஆனால் மனிதனின் சுயநலத்திற்காக விலங்குகளையும், பறவை இனங்களையும் அழித்து வருகிறோம்.

இன்று உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினமானது கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பறவைகள் நல ஆர்வலர்கள், சிட்டுக்குருவி இனத்தைக் காப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனர். 

சிட்டுக்குருவியின் தேவையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் அவை, 2010 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது. தில்லி அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சிட்டுக்குருவியைத் தங்கள் மாநிலப் பறவையாக அங்கீகரித்தது.

ஒரு சிட்டுக்குருவியை விளையாட்டுத்தனமாகக் கொன்ற சலீம் அலி என்ற சிறுவன்தான், பின்னர் தனது வாழ்க்கையையே பறவைக்காக அர்ப்பணித்து இந்தியாவின் பறவை மனிதர் ஆனார். 

சிட்டுக்குருவிதானே என சாதாரணமாக எண்ணாமல் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் செல்போன் சிக்னல்களால் இந்த இனம் அழிந்து வருவதை  2.0 என்ற படத்தில் நடிகர்கள் ரஜினி மற்றும் அக்ஷய் குமாரை வைத்து சிட்டுக் குருவியின் முக்கியத்துவத்தை இயக்குநர் சங்கர் கூறியிருந்தார்.

சிட்டுக்குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சார்ந்தவை. தமிழகத்தில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலாங் குருவிகள், ஊர்க் குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இதனைச் சங்க இலக்கியங்களில் மனையுறைக் குருவி, உள்ளுறைக் குருவி மற்றும் உள்ளூர்க் குருவி என்றும் குறிப்பிடுகின்றனர். இவை கிராமங்களிலும், நகரங்களிலும், மக்களோடு சேர்ந்து வாழ்பவை. காடுகளில் தன்னிச்சையாக வாழ்பவை அல்ல. 

சிட்டுக்குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை  8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. இதன் அலகுகள் கூம்பு வடிவமாக இருக்கும். இதன் எடை 27 முதல் 39 கிராம் வரையில் காணப்படும். இதன் நிறம் பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். ஆண் பறவையில் இருந்து பெண் பறவை நிறத்தில் வேறுபட்டு காணப்படும். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல கண்டங்களில் சிட்டுக்குருவிகள் உள்ளன. இவற்றின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகள்.

செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்கிறார்கள்  பறவையியல் ஆராய்ச்சியாளர்கள். தொழிற்சாலைகள் அதிகரிப்பு மற்றும் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்ட காரணத்தால் சிட்டுக்குருவிக்கான வாழ்விடமும் இரை தேடும் இடமும் சுருங்கிவிட்டன. வயல்வெளிகளில் இரசாயனத் தெளிப்பு அதிகரிப்பதால் சிட்டுக்குருவிகளின் உணவான புழு பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. 

சிட்டுக்குருவிகள், பெரும்பாலும் வனப்பகுதியில் வாழ்வதைவிட மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே விரும்பும்.

சிட்டுக்குருவிகள் பொதுவாக வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. இப்போது கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகமாகி விட்டதால் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய இட வசதியில்லை.

world-sparrow-day

சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. நாம் இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்துதல் வேண்டும். இவை வீடுகளிலும், வயல்வெளிகளிலும் சிதறிக் கிடக்கின்ற தானியங்களையும் பயிர்களில் காணப்படும் புழு பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றன.

பண்டைய காலங்களில் வீட்டிற்குத் தேவையான உணவு தானியங்களை வீட்டு முற்றத்திலும், மொட்டை மாடிகளிலும் வெய்யிலில் காய வைப்பார்கள். இவற்றைச் சிட்டுக்குருவிகள் கொத்தித் தின்னும். தற்போது மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உணவு தானியங்களையும் நேரடியாக நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் வாங்கி, சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்துகின்றனர்.

விவசாயம் செய்த தானியங்களை அறுவடைக்குப் பின்னர் வீடுகளுக்கு கொண்டு வந்து சுத்தம் செய்வர். சிதறிய நெல்மணிகள் சிட்டுக்குருவிகளுக்கு உணவாகப் பயன்படும். அறுவடைக்கான எந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு தானியங்களை வீடுகளுக்கு கொண்டு வரும் முறையே  கைவிடப்பட்டுவிட்டது.

கடைகளில் தானியங்களைச் சாக்கு மூட்டைகளில் நேரடியாக வியாபாரம் செய்வர். தானியங்களை எடை போடும் போதும், சுத்தம் செய்யும்போதும் சிதறுகின்ற தானியங்களை சிட்டுக்குருவிகள் நேரடியாக உணவாக எடுத்துக்கொள்ளும். ஆனால், தற்போது அனைத்துக் கடைகளிலும் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

சிட்டுக்குருவிகள் தினம்

பாதுகாப்பு முறை 

முதலில் சிட்டுக்குருவிகளை அழிவு நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற பொது அறிவு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். வீடுகளில் சிறிய கிண்ணங்களில் தானியங்களை நிரப்பி பறவைகளுக்கு உணவாக வைக்க வேண்டும். பெரிய தொட்டிகளில் நீரை நிரப்பி சிட்டுக்குருவிகள் நீர் அருந்தவும், இறங்கிக் குளிக்கவும் ஏற்ற வகையில் நீர்த்தொட்டிகள் அமைக்க வேண்டும். 

Buy Bird Nest From Amazon Store

வீட்டில் சிறிய அட்டைப் பெட்டியில் வைக்கோலை அடைத்து வைத்து வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ அல்லது மரக்கிளைகளிலோ தொங்கவிட்டால்கூட சிட்டுக் குருவிகளுக்குப் போதுமானது. இக்கூடுகளை  மழை நீர் படாமலும்,  பகை விலங்கினங்கள் தொந்தரவு இல்லாத வகையிலும் அமைக்க வேண்டும். 

சிட்டுக்குருவி மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஓர் உயிரினமும் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல்படி என்பதை நாம் என்றும் மறக்கக் கூடாது. 

Related posts