பூச்சி, நோய்க் கட்டுப்பாடு

pest and disease control

இந்தத் தொகுப்பில் பூச்சி நோய் கட்டுப்பாடு போன்றவற்றை பற்றி பார்ப்போம்.

நெல்

மழைக்காலங்களில் நிலவும் காலநிலை நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு, புகையான் பூச்சி தாக்குதலுக்கு சாதகமானதாக உள்ளது.

இலை சுருட்டுப் புழு

தொடர் மழை, பனி மூட்டம் காரணமாக நெல்லில் இலை சுருட்டுப் புழு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. இளம் பயிர்கள், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களை தாக்கும் இந்தப் புழுக்கள் இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும்.

இந்த பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயம் தழைச்சத்து உரங்களை வயலில் இடுவதை குறைக்க வேண்டும். வயலில் புழுவின் அந்தி பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து விளக்கு பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம். தாவர பூச்சிக் கொல்லியான அசாடிரக்டீன் 0.03 சதக் கரைசலை ஏக்கருக்கு 400 மில்லி தெளிக்கலாம். ரசாயன பூச்சிக் கொல்லிகளான கார்ட்ஃப் 50 சதவீத தூளை ஏக்கருக்கு 400 கிராம் (அல்லது) குளோர்பைரிபால் 20 இ.சி. 500 மில்லி உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.

புகையான்

நெல் வயலில் அதிகமாக நீர் தேங்கி வெளியேற்ற முடியாமல் உள்ள இடங்களில் இந்த பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நெல்லின் தண்டுப் பகுதியில் கூட்டமாக அமர்ந்து சாறு உறிஞ்சும் இந்த பூச்சிகளால் நெற்பயிர் முற்றிலுமாக காய்ந்து விடும். தாக்குதல் அதிகம் உள்ள வயல்களில் எரித்தது போன்ற அறிகுறிகள் ஆங்காங்கே தென்படும்.

தழைச்சத்து உரங்களை 3 அல்லது 4 முறை பிரித்து இட வேண்டும். செயற்கை பைரித்திராய்டு, பூச்சிகளின் மறு உற்பத்தியை தூண்டும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த கூடாது.

3 சத வேப்ப எண்ணெய் கரைசலை ஏக்கருக்கு 6 லிட்டர் என்ற அளவில் சோப்பு கரைசலுடன் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சிக் கொல்லிகளான டைக்குளோர்வாஸ் 76 எஸ்.சி. ஏக்கருக்கு 200 மில்லி, (அல்லது) ஃபுப்ரோபசின் 25 எஸ்.சி. ஏக்கருக்கு 325 மில்லி (அ) பிப்ரோனில் 5 சதவீதம் எஸ்.சி. ஏக்கருக்கு 400 மில்லி (அ) இமிடாகுளோபிரிட் 17.8 சதவீதம் எஸ்.எல். 40 மில்லியை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை

கடலோர மாவட்டங்களில் மழைக்காலங்களில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையும் காற்றில் அதிக ஈரப்பதமும் 3 அல்லது 4 நாள்கள் வரை காணப்பட்டால், நெல் பயிரில் குலை நோய் தென்பட அதிக வாய்ப்புண்டு. விவசாயிகள் உடனடியாக 0.1 சதம் ட்ரைசைக்கிலோசோல் அல்லது கார்பண்டாசிம் 50 சதவீதம் டபிள்யு.பி. 1.5 – 3.0 கிலோ – லிட்டர் அல்லது கார்பண்டாசிம் 12 சதவீதம், மேன்கோசெப் 63 சதவீதம் டபிள்யு.பி. கலந்த மருந்தை 5 கிலோ -லிட்டர் என்ற அளவில் நோய் தாக்கிய பயிர்களில் தெளிக்கவும். தேவைப்பட்டால் 10 நாள்கள் இடைவெளியில் மீண்டும் தெளிக்கவும்.

பாக்டீரியா இலை நோயை கட்டுப்படுத்த கோசைடு 77 சதவீதம் டபிள்யு.பி. என்ற மருந்தை 8.0 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும், தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவும். இலைப் புள்ளி நோயை கட்டுப்படுத்த மான்கோசாப் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம்) 2 முறை நட்ட 40, 55 நாள்களுக்குப் பின்னர் பயிர்களில் தெளிக்கவும்

பருத்தி

சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன் தருமபுரி, விழுப்புரம், தேனி, சேலம் மாவட்டங்களில் மழைக்காலங்களில் அதிகம் தென்படுகின்றன. எனவே, இவற்றைக் கண்காணிக்க விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறி 5 எண்ணிக்கை ஒரு ஏக்கருக்கு வைக்கவும். மேலும், மீன் எண்ணெய் சோப் 1 கிலோவை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு தெளிக்கவும்.

பருத்தியில் சிவப்பு காய்ப் புழுவின் தாக்குதல் தென்பட்டால், விவசாயிகள் இனக் கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும், பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும்.

நிலக்கடலை

இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும். மேலும், சிவப்பு கம்பளிப் பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கவும். தேவைப்பட்டால் வேப்பங்கொட்டை சாறு 5 சதம் நீரில் கலந்து தெளிக்கவும்.

இலைப் புள்ளிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த கார்பண்டாசிம் 200 கிராம் (அ) மான்கோசாப் 400 கிராம் (அ) குளோரோதலானில் 400 கிராமை சரியான விகிதத்தில் கலந்து தெளிக்கவும். தேவைப்பட்டால் 15 நாள்கள் கழித்து மறுபடியும் தெளிக்கவும்.

கரும்பு

இடைக் கணுப் புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராமா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை நான்கு மாத பயிரில் தொடங்கி 15 நாள்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 1 சி.சி. என்றளவில் 6 முறை வெளியிடவும்.

முந்திரி

முந்திரியில் கொசு, ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. கொசு தாக்குதலை கட்டுப்படுத்த புரோமினோபாஸ் (0.05 சதம்) (அ) குளோர் பயிர்பாஸ் (0.05 சதம்) (அ) கார்பாரில் (0.1 சதம்) நீரில் கலந்து தெளிக்கவும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்கம்

Related posts