நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்துவது எப்படி?

Rice_Gall_Midge

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈயின் புழுக்கள் தண்டை துளைத்து குருத்தை தாக்கி சேதம் ஏற்படுத்தும். இந்த ஈக்கள் கொசுவைப்போல நீண்ட கால்களுடன் இருக்கும். இவை இரவு வேளையில் சுறுசுறுப்பாக இருக்கும். தளிர் இலைகளின் அடிப்பரப்பில் தனியாக அல்லது குவியலாக 100 – 300 முட்டைகள் இடும்.

2 – 3 நாட்களில் முட்டையில் இருந்து புழுக்கள் வெளிவரும். இதன் புழுக்கள் தண்டை துளைத்து குருத்தை தாக்கும் போது உட்கருத்தின் இயல்பான வளர்ச்சி தடைபடுகிறது. அதிலிருந்து தோன்றும் இலை உறை, புழு தோற்றுவிக்கும் சில நொதிகளால் நீண்ட குழாய் போன்ற பாகம் வளரும். இதை ஆனைக்கொம்பு என்கிறோம். இப்புழுக்கள் 5 முதல் 6 வார வயதுள்ள இளம்செடிகளை அதிகம் தாக்கும். ஈயாக வெளிவந்த பின், குழாய் காய்ந்துவிடும்.

இதனால் 50 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். கருப்புநிற ‘பிளாட்டிகேஸ்டர் ஒரைசா’ குழவியின் புழு ஒட்டுண்ணி கொண்ட துார்களை சேகரித்து 10 சதுரமீட்டருக்கு ஒன்று என்ற அளவில் வயலில் பரப்ப வேண்டும். இந்த புழு ஒட்டுண்ணி இயற்கையாகவே ஆனைக்கொம்பன் ஈயின் புழுக்களை கட்டுப்படுத்துகிறது. அறுவடை செய்த பின் நிலத்தை உடனடியாக உழ வேண்டும்.
புல்வகை களைச்செடிகள் இன்றி வயல் சுத்தமாக இருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே தழைச்சத்து உரங்களை இடவேண்டும். எக்டேருக்கு புறஊதா விளக்குப் பொறி ஒன்றை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். எக்டேருக்கு 800 முதல் 1000 மில்லி கார்போசல்பான் 25% இ.சி பூச்சிக்கொல்லி தெளிக்கலாம். அல்லது எக்டேருக்கு 1250 மில்லி குளோரோர்பைரிபாஸ் 20% இ.சி மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

Source: Dinamalar

Related posts