நுண்ணூட்டக் கலவை இயற்கையா, செயற்கையா?

நுண்ணூட்டக் கலவை

‘‘இயற்கை வழியில் விவசாயம் செய்து வருகிறோம். தென்னை மரங்களுக்குத் தனியாக நுண்ணூட்டச்சத்து கொடுத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று வேளாண்மைத் துறையில் சொன்னார்கள். அதன்படி நுண்ணூட்டக் கலவையை வாங்கித் தென்னை மரங்களுக்கு வைத்தோம். ஆனால், அது இயற்கையான பொருள் அல்ல. ரசாயன கலவை என்று ஒரு நண்பர் சொல்கிறார். இது உண்மையா? இயற்கை முறையில் நுண்ணூட்டச் சத்துகளைக் கொடுப்பது எப்படி?’’

வெங்கடேச பெருமாள், சோழவரம்.

தஞ்சாவூரைச் சேர்ந்த மூத்த வேளாண் விஞ்ஞானி முனைவர் அ.உதயகுமார் பதில் சொல்கிறார்.

“வேளாண்மைத்துறை மூலமும் உரக்கடைகள் மூலமும் விற்பனை செய்யப்படும் நுண்ணூட்டக் கலவை (Mineral Mixture) ரசாயனப் பொருள்தான். இயற்கை வழி பண்ணையில் இதைப் பயன்படுத்த வேண்டாம். இதற்கு மாற்றாக இயற்கை இடுபொருள்கள் நிறைய உள்ளன. சத்துக்குறைபாட்டில் உள்ள மனிதனுக்கு வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தும் உடல் நலனைக் காக்கலாம். சத்து நிறைந்த காய்கறி, பழங்கள்… என உணவுகள் வழியாகவும் சத்துக் குறைபாட்டை நீக்க முடியும். வைட்டமின் மாத்திரை கொடுப்பது போன்றதுதான், ரசாயன நுண்ணூட்டக் கலவை. மட்கிய தொழுவுரம் (மட்கிய எரு), மண்புழு உரம், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், இ.எம்… போன்றவை ஆரோக்கியமான முறையில் சத்து களைப் பெறும் வழி முறையாகும். எனவே, இயற்கை நுண்ணூட்டம்தான் சிறந்தது.

இந்த நுண்ணூட்டம் என்ன வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். பயிருக்குக் குறைந்த அளவில் தேவைப்படும் சத்துகளான இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துகள் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும். இரும்புச்சத்து பயிரின் பச்சை தன்மையைச் சீராக வைக்க உதவுகிறது. இதன் குறைபாட்டால் பயிர்கள் வெளிறி மஞ்சள் நிறம் அல்லது வெண்மை நிறத்துடன் காணப்படும். துத்தநாகச்சத்து கணு இடைப் பகுதி வளர்ச்சி, புரதங்களின் சேர்க்கையில் பங்காற்றி மகசூலை அதிகரிக்க உதவுகிறது. இந்தச் சத்து குறைபாட்டால் பயிர்கள் வளர்ச்சி குன்றி குட்டையாகி மகசூல் பாதிக்கும். போரான் சத்து குறைபாட்டால் பூ உதிர்தல், காய், கனிகளின் அளவு சிறுத்து, ஒழுங்கற்ற அமைப்புடன் காணப்படும். தென்னைக்குப் பொதுவாக போரான் சத்து பற்றாக்குறைதான் ஏற்படும்.

தொழுவுரத்தில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துகள் உள்ளன. ஜனவரி, ஜூன் மாதங்களில் மரத்துக்கு 50 கிலோ என்ற அளவில் தொழுவுரத்தை வைக்கலாம். இது கிடைக்க வில்லை என்றால், ஆண்டுக்கு ஒரு முறை மரத்துக்கு 2 கிலோ மண்புழு உரத்தைக் கொடுக்கலாம். பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், இ.எம் போன்ற கரைசல்களைத் தேவைக்குத் தகுந்தபடி தண்ணீரில் கலந்து பாய்ச்சலாம். ஜப்பான், மலேசியா… போன்ற வெளிநாடுகளில் ஹெச்.பி.101 (HB-101) என்ற இயற்கை நுண்ணூட்டக் கலவையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இது தமிழ்நாட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதை ஆண்டுக்கு ஒரு முறை, ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 250 மி.லி கலந்து பாய்ச்சலாம். இதன் விலை 250 ரூபாய். இப்படி இயற்கையில் ஏராளமான மாற்று இடுபொருள்கள் உள்ளன. இதில் உங்களுக்கு எது ஏற்றது என்பதைத் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். இயற்கை உரங்களைத் தொடர்ந்து போது மான அளவுக்குப் பயன்படுத்தி வந்தால், தனியாகப் பேரூட்டம், நுண்ணூட்டச் சத்துகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.’’

தொடர்புக்கு, முனைவர் அ.உதயகுமார், செல்போன்: 94425 42915.

‘‘எங்கள் பண்ணையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பயிர் ரகங்களைச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். நெல் ரகங்கள், பயறு வகைகள், தீவனச் சோளம். விதைகள் எங்கு கிடைக்கும்?’’

ம.சுசீலா, உறையூர்.

‘‘கோயம்புத்தூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கிடைக்கும் இடங்கள்

1. நெல்

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர் – 638451, ஈரோடு மாவட்டம் தொலைபேசி எண்: 04295 240244.

2. பயறு வகைகள்

பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை – 626107. தொலைபேசி எண்: 04566 220562

3. பாசிப்பயறு

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிக்குளம்-628252. தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி எண்: 04630 261226

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம்-604002. தொலைபேசி எண்: 04147 250001

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை-625512 தொலைபேசி எண்: 04546 292615

பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர்-635112 தொலைபேசி எண்: 04343 290600

4. தீவனப் பயிர்கள்

தீவனச் சோளம், தீவன மக்காச்சோளம் தீவனத் தட்டைப்பயறு…

பேராசிரியர் மற்றும் தலைவர், தீவனப்பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641003. தொலைபேசி எண்: 0422 6611228

நெல், பயறு வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், தீவனத் தட்டைப்பயறு… போன்றவை ஆராய்ச்சி நிலையங்களில் இருப்புக்குத் தக்கபடி விவசாயிகளுக்கு விலைக்கு வழங்கி வருகிறார்கள். முன்பதிவு செய்தும் விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் பகுதிக்கு ஏற்ற பயிர்கள், ரகங்கள் குறித்தும் இங்குள்ள விஞ்ஞானிகள் பரிந்துரை செய்வார்கள்.’

‘‘காளான் வளர்க்க விரும்புகிறேன். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’

சுசிக், விளாச்சேரி.

‘‘கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பயிர் நோயியல் துறை மூலம் மாதம்தோறும் 5-ம் தேதி காளான் வளர்ப்பு சம்பந்தமான கட்டணப் பயிற்சியை நடத்தி வருகிறார்கள். இந்தப் பயிற்சியில் சிப்பிக் காளான், பால் காளான் மட்டுமல்ல, இன்னும் பலவகையான காளான் வளர்ப்பு குறித்தும் கற்றுக் கொடுக்கிறார்கள். காளான் விதைகளும் இங்கு கிடைக்கும்.’’


தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

பயிர் நோயியல் துறை,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் – 641003.

தொலைபேசி: 0422 6611336.

Related posts