காய்க்காத நெல்லிக்கு நம்மாழ்வார் சொல்லிய தீர்வு!

Amla

‘‘எங்கள் தோட்டத்தில் 5 வருஷம் ஆன நெல்லி மரங்கள் உள்ளன. ஆனால், இவை இன்னும் காய்க்கவில்லை. என்ன காரணம், காய்ப்பதற்கு வழி சொல்லுங்கள்?’’ – டாக்டர் டி.அருள்மொழிவர்மன், முசிறி.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி மனோகரன் பதில் சொல்கிறார்.

‘‘உங்களைப் போலவே என் தோட்டத் திலிருந்த நெல்லி மரங்களும் காய்க்காமலிருந்தன. 2012-ம் வருஷம் ஜூன் மாசம் 3-ம் தேதி என் வாழ்கையில் மறக்க முடியாத நாள். என்னுடைய நீண்ட நாள் வேண்டு கோளுக்கு இணங்க பண்ணைக்கு வந்தார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா. என் ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அங்குலம் அங்குலமாக நடந்து நின்று நிதானித்துச் சுற்றிப் பார்த்தார். ‘நெல்லிக்காய் ஆயுளைக் கூட்டும் அற்புதக்கனி. மலைப்பிரதேசத்தில் நன்றாக வளரக்கூடிய மரம். இங்கு அந்த அளவுக்குச் சிறப்பாக வளராது. இருந்தாலும் நான் சொல்லுற விஷயத்தை நடைமுறைப்படுத்திப் பாருங்க…

மலைப்பயிர்கள் இயற்கையாக வளரக்கூடியவை. உரம், தண்ணீர் தேவையில்லை. காய்ச்சலும் பாய்ச்சலுமான பாசனம்தான் அதற்கான தொழில்நுட்பம். அதோடு மழைக்காலத்துக்கு முன்பாக ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் 25 கிலோ ஆட்டு எருவைக் கொட்டி, அது மேல வளமான செம் மண்ணைக் கொட்டி மூடி விடணும். 2 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மரத்தைச் சுற்றிலும் நேரடியாக ஊற்றணும். வருஷத்துக்கு இரண்டு முறை இதைச் செய்து பார்த்துட்டு என்கிட்ட சொல்லுங்க’னு சொன்னார். அதே போல செய்தேன் நெல்லிக்காய் காய்த்து, குலுங்கியது. இப்போதும் அந்த நெல்லி மரங்கள் நன்றாகக் காய்த்து வருகின்றன. தற்போது கூடுதலாக இன்னொரு தொழில் நுட்பத்தையும் பின்பற்றி வருகிறேன். பூ எடுப்பதற்கு முன்பு 10 லிட்டர் நீரில் 300 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்கிறேன். இதன் மூலம் நெல்லி மரங்களில் காய்ப்புத்திறன் கூடி வருகிறது. பொதுவாக நெல்லி காய்க்காமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கும். ஒன்று சத்துப் பற்றாக்குறை. இரண்டாவது, ஒரே ரகத்தைச் சாகுபடி செய்தால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்படாது. எனவே, மூன்று ரகங்களைக் கலந்து நடவு செய்ய வேண்டும்.

நன்றாகப் பராமரிப்பு செய்தால் 3-ம் ஆண்டிலிருந்து பூ எடுக்க ஆரம்பிக்கும். நெல்லிக்குப் பட்டம், பருவம் இல்லை. ஆண்டு முழுக்கவே காய்க்கும். பருவமழை முடிந்தவுடன் அதிகமா பூ எடுக்கும். அந்தச் சமயத்தில் நீர்ப் பாசனம் செய்வதை நிறுத்தி விட வேண்டும். இந்தத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றினாலே, உங்கள் நெல்லி மரங்கள் காய்க்கத் தொடங்கிவிடும்.’’

தொடர்புக்கு,

மனோகரன், செல்போன்: 94430 08689.

Related posts