லாபம் கொழிக்கும் அயிரை மீன் வளர்ப்பு

அயிரை மீன்

நன்னீர் மீன் வளர்ப்பு முறைகளில் புதிய ரக மீன் வளர்ப்பு அயிரை மீன் வளர்ப்பு முறையாகும்.

தென் மாவட்டங்களில் அயிரை மீன் மிகவும் பிரபலமான உணவு. அதற்கு முக்கிய காரணம் அவற்றின் சுவை.

அயிரை மீன் விலை கிலோ ரூ.1,000க்கும் மேல் விற்கப்படுகிறது. இது கடல் மீன்களை விட அதிக விலையாகும்.

அயிரை மீன் மிகவும் சிறியதாக வளரும் தன்மை கொண்டது. அதிகபட்சம் 2-4 கிராம் எடையுடன் இருக்கும். உடலமைப்பு உருண்டு காணப்படும்.

துடுப்புகளில் கறுப்பு நிற புள்ளிகளுடன், நீண்ட மூக்குடனும், சாம்பல் நிறத்தில் இருக்கும்.

வயிற்று பகுதியில் வட்ட வடிவ துடுப்பு காணப்படும். குளத்தில் அடிப்பகுதிகளில் மண்ணுக்குள் புதைந்து வாழும் உயிரினமாகும். வாய்ப்பகுதி கீழ் நோக்கி அமைந்திருக்கும். வாய்ப்பகுதியின் அருகே உணர்வு நீட்டிகள் காணப்படும். மீனின் இனத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது ஐந்து ஜோடிகள் காணப்படும். கண்கள் சிறியதாகவும், தோல் கொண்டு மூடியும் காணப்படும்.

 

 

காற்றே உணவு
பெரும்பாலான அயிரை மீன் வகைகளுக்கு செதில்கள் கிடையாது. அப்படி இருந்தாலும் சிறியதாக தோலுடன் ஒட்டி காணப்படும். இவைகளை கண்டறிவது கடினம்.

இவ்வகை மீன்கள் வளர்ச்சியடையாத காற்றுப்பை கொண்டு இருக்கும். சில வகை அயிரை மீன்கள் காற்றை உட்கொண்டு வாழக்கூடியவை. அயிரை மீன் வளர்ப்பது மிகவும் எளிதாகும். மீன் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் குளங்களை பயன்படுத்தினால் போதுமானது. அயிரை மீன்களை தனியாக வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அயிரை மீன் இளம் குஞ்சுகளை கெண்டை மீன்களுடன் சேர்த்து வளர்க்க வேண்டும்.


அயிரை மீன் குஞ்சு உற்பத்திக்கு கண்ணாடி தொட்டி மற்றும் சிமென்ட் தொட்டிகளை பயன்படுத்தலாம்.

அயிரை மீன்கள் கெண்டை மீன்களுடன் இருப்புக்குளத்திலும் கெண்டை மீன் குஞ்சுகளோடு, மீன் குஞ்சு வளர்ப்பு குளங்களிலும் இணைத்து வளர்க்கலாம். பிற மீன்களை உண்ணும் பகை மீன் இனங்கள் உள்ள குளங்களில் அயிரை மீன்களின் பிழைப்புத்திறன் குறைவாகவே இருக்கும்.

பகை இன மீன்
அயிரை மீன் வளர்ப்பில் பகை இன மீன்கள் அக்குளங்களில் நுழைவதை முழுவதுமாக தடுக்க வேண்டும்.

அயிரை மீன்களை கட்லா, ரோகு, மிர்கால் மீன்களுடன் வளர்ப்பதால் பிழைப்பு திறன், நல்ல வளர்ச்சி அடைகிறது.

இதனால் அயிரை மீன்களை ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் இருப்பு செய்ய வேண்டும். நான்கைந்து மாதத்தில் அயிரை மீன் உற்பத்தி ஏக்கருக்கு 60 கிலோ என்ற அளவில் கிடைக்கிறது.

இது கெண்டை மீன்களிலிருந்து பெறும் வருமானத்திற்கு சமமான வருவாயாகும். சாதா கெண்டை மீன்களுடன் அயிரையை வளர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

Related posts

Leave a Comment