கிணற்றில் படரும் பாசியை தடுக்கும் வயர் மெஷ் மற்றும் மரங்கள்

கிணற்றில் படரும் பாசி

விவசாய சாகுபடியில் கிணற்றுப்பாசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்தகைய கிணறுகளில் பாசி படிவதும், அதை அப்புறப்படுத்துவதும் விவசாயிகளின் தீராத தலைவலியாகவே உள்ளது.

கிணற்றில் மிகுதியான சூரிய ஒளி படர்வதால் எளிதில் பாசி படிகிறது. இதனால் புழுக்கள் உருவாகவும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் கிணற்று மேட்டில் சூரிய ஒளி படாத வகையில் நிழல் தரும் பூவரசு, அகத்தி, செடி முருங்கை உள்ளிட்ட மரங்களை அடர்த்தியாக நட்டு வளர்க்கலாம்.

தற்போது ‘வயர் மெஷ்’ என்ற யுக்தியை பயன்படுத்துவதால் குறைவான சூரிய ஒளியை மட்டுமே உட்புக செய்யலாம்.

கிணற்று விட்டத்துக்கு கம்பிவேலி அமைத்து வயர் மெஷ் பயன்படுத்தி பூட்டுவதால் கிணற்றில் உள்ள மீன் மற்றும் தண்ணீர் திருடு போவதையும் தடுக்கலாம். கிணறுகளை சீரமைக்காமல் விடுவதால் சொட்டுநீர் பாசன முறையும் பாதிக்கப்படுகிறது.

பயிரின் வேர் பகுதிக்கு நீரைக் கொண்டு சேர்க்கும் நுண்ணீர் பாசன முறையில் மட்டுமே உவர்ப்புத் தன்மை உடைய தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்.

பயிர் சாகுபடிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் தண்ணீர் உள்ள கிணற்றில் பாசியை மயில் துத்தம் பூச்சிக் கொல்லியை பயன்படுத்தி முழுமையாக அழித்த பின்பு அந்த கிணற்றில் சூரியஒளி அதிகமாக படராத வகையில் தடுப்பு பணிகளை செய்ய வேண்டும்.

கிணற்றில் எவ்வளவு அளவு நீர் உள்ளது என்பதற்கேற்ப நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் சரியான அளவில் மயில் துத்தத்தை பயன்படுத்த வேண்டும்.

பெரும்பான்மையாக கிணறுகளில் மேல் பரப்பில் மட்டுமே பாசிகள் படரும். அத்தகைய கிணறுகளில் சிறு பைகளில் மயில் துத்தத்தை நிரப்பி மிதக்க செய்து பயன்பெறலாம்.

Related posts