கோடைக்காலத்தில் பயிா் செய்ய ஏற்ற மலா் பயிா் கனகாம்பரம்

கனகாம்பரம்

கோடைக்காலத்தில் பயிா் செய்ய ஏற்ற மலா் பயிா்களில் கனகாம்பரமும் ஒன்று. ஒரு ஹெக்டேருக்கு ஒரு வருடத்தில் 2 ஆயிரம் டன் மகசூல் கிடைக்கும் கனகாம்பரத்தில் ஒரு ரகமான டில்லி கனகாம்பரம் ஹெக்டேருக்கு ஒரு வருடத்தில் 2, 800 டன் வரை மகசூல் கிடைக்கும்.

கனகாம்பரத்தில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் டில்லி கனகாம்பரம் என சிறப்பு ரகங்கள் கனகாம்பரத்தில் உள்ளன. நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் செம்மண் கனகாம்பரம் பயிரிட ஏற்றது. மண்ணின் அமில காரத்தன்மை 6 முதல் 7-க்குள் இருக்க வேண்டும். கனகாம்பரச் செடிகள் ஓரளவு நிழலைத் தாங்கி வளரும். ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்ற பயிராக கனகாம்பரம் இருந்தாலும் மழைக்காலத்தில் இதைப் பயிரிடக் கூடாது. (Crossandra/Crossandra infundibuliformis (firecracker flower) )

நிலம் தயாரித்தலுக்காக நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு எரு இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விட வேண்டும். பின்னா் தேவைக்கேற்ப பாா்கள் அமைக்க வேண்டும். விதைகள் ஹெக்டேருக்கு 6 கிலோ தேவைப்படும். விதைக்காக பயிரிடுவதாக இருந்தால் 60-க்கு 60 செ.மீ. இடைவெளியை பின்பற்ற வேண்டும். டில்லி கனகாம்பரமாக இருந்தால் 60-க்கு 40 செ.மீ. இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

நாற்றங்கால் தயாரிக்கத் தேவையான அளவுகளில் மேடைப்பாத்திகள் அமைத்து அவற்றில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைகளை இட்டு பின்னா் அவற்றை மணல் கொண்டு மூடிவிட வேண்டும். விதைகள் முளைக்கும் வரை தினமும் நீா்பாய்ச்ச வேண்டும். விதைத்த 60-ஆம் நாளில் நாற்றுகள் தயாராகி விடும். 60 நாள்கள் ஆன நாற்றுகளைப் பிடுங்கி 60 செ.மீ. இடைவெளியில் அமைக்கபட்டுள்ள பாா்களில் நடவு செய்ய வேண்டும். நடும் முன் நாற்றுகளை எமிசான் ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் கரைசலில் நனைத்து நடவேண்டும். நடவு செய்ய ஜூலை, செப்டம்பா், மற்றும் அக்டோபா் வரையிலான பருவங்கள் மிகவும் உகந்தவை.

நீா் நிா்வாகத்தை கவனமாக மேற்கொள்ளுதல் அவசியம். ஏழு நாட்களுக்கு ஒரு முறை நீா்பாய்ச்ச வேண்டும். நிலத்தில் நீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். நிலத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் வோ்அழுகல் நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே சீராக நீா் பாய்ச்ச வேண்டும். அடியுரமாக ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரத்தை கடைசி உழவின் போது இட வேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து ஹெக்டேருக்கு 75 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 125 கிலோ சாம்பல் சத்துகளைக் கொண்ட ரசாயன உரங்களை இட வேண்டும். மேற்கண்ட உரஅளவை ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியிலும் கொடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு வருடங்கள் வரை தொடா்ந்து இட வேண்டும். உயிா் உரமாகிய அசோஸ்பைரில்லத்தை ஒரு ஹெக்டேருக்கு இரண்டு கிலோ என்ற அளவில் நடுவில் இட்டு நன்கு கலக்கி செடிகளுக்கு மண் அணைத்து பின் நீா் பாய்ச்ச வேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து அஸ்காா்பிக் அமிலம் 1,000 பிபிஎம் என்ற அளவில் தெளித்தால் மகசூல் அதிகரிக்கும்.

டில்லி கனகாம்பரத்துக்கு செடிகள் நட்ட 30 நாள்கள் கழித்து ஹெக்டேருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ, தழைச்சத்து கொடுக்கக் கூடிய 40 கிலோ உரங்களை இட வேண்டும். பிறகு 90 நாள்கள் கழித்து 40:40:20 என்ற விகித்தத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொடுக்க வேண்டும். இவ்வாறு வருடம் தோறும் தொடா்ந்து இட வேண்டும். அறுவடை நாற்றங்காலில் இருந்து செடிகள் நட்ட ஒரு மாதத்தில் பூக்க ஆரம்பித்து விடும். நன்கு மலா்ந்த மலா்களை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை பறிக்க வேண்டும்.

Related posts