உளுந்து சாகுபடி முறை

உளுந்து சாகுபடி முறை

இயற்கை விவசாயத்தில் இன்று அதிக வருமானம் தரும் உளுந்து சாகுபடி முறை, பருவகாலம், இரகங்கள், களை மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, நீர் நிர்வாகம் ஆகிய முழு விவரங்களையும் இந்தத் தொகுப்பில் காண்போம்.

பருவகாலம்:

ஆடி, மாசி ஆகிய பருவகாலங்கள் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற பருவகாலங்கள் ஆகும்.

தட்ப வெப்பநிலை:

வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் உளுந்து பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

மண் வளம்:

நல்ல வடிகால் வசதி கொண்ட வளமான மண் உளுந்து சாகுபடிக்கு ஏற்றது. அதேபோல் உளுந்து எல்லா வகை மண்ணிலும் சாகுபடி செய்தாலும் வண்டல் மண், உளுந்து சாகுபடிக்கு மிகவும் சிறந்தது.

உளுந்து சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள்:

டிஎம்வி 1, டி 9 மற்றும் கோ 9 ஆகிய இரகங்கள் உளுந்து சாகுபடிக்கு மிகவும் ஏற்ற இரகங்கள் ஆகும்.

விதையளவு:

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் உளுந்து சாகுபடிக்கு போதுமானது.

விதை நேர்த்தி:

ஆறிய அரிசி வடிகஞ்சியுடன் 250 கிராம் அளவு அடுப்பு சாம்பலை நன்றாக கலந்து இவற்றை 8 கிலோ விதையுடன் கலந்து கொள்ளவும். உயிர் உரவிதை, நேர்த்திசெய்ய ரைசோபியம் 250 கிராம், பாஸ்போபாக்டிரியா 250 கிராம் ஆகியவற்றை ஆறிய வடிகஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து, நிழலில் உலர்த்தி விதை நேர்த்தி செய்யவேண்டும்.

நிலம் தயாரிக்கும் முறை:

இரண்டு முதல் மூன்று முறை நிலத்தை புழுதிப்பட உழுது நிலம் தயார் செய்ய வேண்டும். செடிக்குச் செடி ஒரு செ.மி இடைவெளியும், வரிசைக்கு வரிசை 15 செ.மி இடைவெளியும் விட வேண்டும்.

உரங்கள்:

விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் ஏக்கருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் ஏக்கருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும்.

மானாவாரி மற்றும் இறவைப் பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

அடியுரம்:

உயிர் உரமாக ரைசோபியம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரிய 2 கிலோ ஆகிய உயிர் உரத்துடன், 50 கிலோ ஈரப்பதம் உள்ள மக்கிய தொழு உரத்துடன் கலந்து அடியுரமாக இடவேண்டும்.

களை நிர்வாகம்:

நடவு செய்த 15-ம் நாள் ஒரு முறையும், பின்பு 30-ம் நாள் ஒரு முறையும் களை நிர்வாகம் கண்டிப்பாக செய்ய வேண்டும். பயிர் சாகுபடியில் சரியான தருணத்தில் களை நிர்வாகம் செய்யாமல் இருந்தால், கண்டிப்பாக பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விடும். எனவே சரியான தருணத்தில் களை நிர்வாகம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

நீர் நிர்வாகம்:

விதை முளைக்கும் பருவம், பூ பூக்கும் பருவம், காய் வளர்ச்சி பருவம் ஆகிய பருவங்களில் கண்டிப்பாக பயிர்களுக்கு நீர் நிர்வாகம் செய்ய வேண்டியது அவசியம்.

அறுவடை:

முதிர்ந்த காய்களைப் பறித்து உலர்த்த வேண்டும். அறுவடை செய்யும்போது பயிர்களை வேரோடு பிடுங்க வேண்டும். இல்லையெனில் முழு தாவரத்தையும் வெட்டி எடுக்க வேண்டும். பின்னர் குவித்து வைத்து உலர்த்தி பயிர்களை பிரிக்க வேண்டும்.

லாபம் கொழிக்கும் சீரக சம்பா சாகுபடி முறை

உளுந்தின் — பயன்கள்:

உடல் வலு பெற:

கடும் நோயில் இருந்து மீண்டவர்களும் , உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து ஒரு வர பிரசாதம். இவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும். எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வச்சிரமாகும்.

உடல் சூடு தணிய:

உடலின் பாதிக்கு மேற்பட்ட நோய்க்கு உடல் சூடு காரணமாக இருக்கின்றது. மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு அதிகமாகிறது. சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக:

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும்.

விழுந்தால் உளுந்து உண்:

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற:

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும். உக்காந்து கொண்டே அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வாரம் ஒரு முறையாவது உளுந்து கஞ்சி/களி சாப்பிடுங்கள்.

குழந்தைகளுக்கு:

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

உளுந்து வடை:

உளுந்து வடையை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம். அதனுடன் ஏதாவது தேங்காய் சட்னியோ, தக்காளி சட்னியோ இருந்தால் சொல்லவே வேண்டாம். சுட சுட சாப்பிட்டு கொண்டே இருக்கலாம்.

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

Related posts