ஒரு முறை நடவு… 30 ஆண்டுகள் அறுவடை! – ஒரு ஏக்கரில் 90 டன் மகசூல்… ரூ.5,60,000 வருமானம்…

Sugarcane

இனிக்கும் இயற்கை கரும்பு!

தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நெல், எலுமிச்சை, கரும்பு… எனப் பல பயிர்களிலும் ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன் பாடில்லாமல் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மகசூலை எடுத்துள்ளார். பசுந்தாள் உரப் பயிர்களைத் தொடர்ந்து மண்ணில் சாகுபடி செய்து, மட்க வைப்பதுதான் இவர் பின்பற்றும் நுட்பம்.

மொத்தம் 28 ஏக்கரில் கரும்புச் சாகுபடி செய்து வருகிறார். இதில், 18 ஏக்கரில் 30-வது மறுதாம்பும், 10 ஏக்கரில் 2-வது மறுதாம்பும் அறுவடை நடந்து வருகிறது.

இந்நிலையில் 18 ஏக்கரில் மறுதாம்பு கரும்பு அறுவடை சமீபத்தில் நடந்தது. இயற்கை முறையிலான கரும்பு (கோ-86032) மறுதாம்புவின் 30-வது அறுவடையைப் பார்வையிட்டு, மகசூலை ஆய்வு செய்திட தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவுப்படி, தென்காசி மாவட்ட வேளாண் துணை இயக்குநர் நல்லமுத்துராஜா, வாசுதேவநல்லூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் இளஞ்செழியன், துணை வேளாண் அலுவலர் வைத்திலிங்கம், உதவி வேளாண் அலுவலர் பார்வதி, மதுரை சேவா அமைப்பை சேர்ந்த விவேகானந்தன் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலர் வந்திருந்தனர். நாமும் அங்கு ஆஜரானோம்.

அனைவரின் முன்பாக ஒரு சென்ட் பரப்பளவில் கரும்பு அறுவடை செய்யப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட கரும்புகள், கட்டுகளாகக் கட்டப்பட்டு அருகிலுள்ள எடை நிலையத்தில் வேளாண் அதிகாரிகளின் முன்பாக எடை பார்க்கப்பட்டது. 930 கிலோ எடை இருந்தது. வரிசை இடைவெளி, பாதைகள் என 30 கிலோ குறைத்து 900 கிலோவாகவும், ஒரு ஏக்கருக்கு 90 டன் கரும்பு (90,000 கிலோ) எனவும் கணக்கிடப்பட்டது. சாதனை அறுவடை குறித்து, முன்னோடி இயற்கை விவசாயி அந்தோணிசாமியிடம் பேசினோம்.

“1991-ல் நடவு செய்த கரும்பு இது. மறுதாம்புல 30-ம் தடவையா இந்த வருஷம் அறுவடை செஞ்சிருக்கேன். இந்த அறுவடையில 90 டன் கிடைச்சுருக்கு. முதல் வருஷம் அறுவடையில் கிடைச்ச 17 டன் மகசூல், இந்த 30-வது வருஷத்துல 90 டன்னா கூடியிருக்குன்னா, அதுக்கு முக்கியக் காரணம் என்னோட மண் வளம்தான். மனுஷனுக்கு உடம்பு நல்லா இருந்தாதானே எந்த வேலையும் செய்ய முடியும்.

Sugarcane farm stock image. Image of leaf, farm, bamboo - 28478061
Sugarcane


அதேபோல, மண்ணு நல்லா இருந்தாலே போதும். மகசூல் குவியும். ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தி இதே கரும்பைச் சாகுபடி செஞ்சா முதல் வருஷம் 40 டன் வரைகூடக் கிடைக்கும். ரெண்டாவது வருஷம் அதுல பாதியாகக் குறைஞ்சுடும். அதுவே, மூணாவது வருஷம் ஒண்ணுமில்லாமப் போயிடுது. ஆனா, இயற்கை முறை விவசாயத்துல ஒவ்வொரு வருஷமும் மண்ணோட வளம் கூடிக்கிட்டே இருக்குது. கரும்புத்தூருல தக்கைப்பூண்டை விதைச்சு பூத்த நிலையில மடக்கி வெச்சும், உரிச்ச கரும்புத்தோகையையும் மண்ணுக்குள்ள மடக்கி வெச்சாலே போதும். கூடவே, கொஞ்சம் கடலைப் பிண்ணாக்கைத் தூவிவிட்டு, ஜீவாமிர்தத்தையும் தெளிச்சு விட்டாலே போதும். மண்ணு வளமாயிடும்.

முதல்முறை மட்டும்தான் ஓரளவு செலவாகும். மறுதாம்புல ஒவ்வொரு வருஷமும் பராமரிப்புச் செலவு பாதியாயிடும். தோட்டத்துக்கு வெளியில உள்ள வெப்ப நிலைக்கும், கரும்புத் தோட்டத்துக்குள்ள உள்ள வெப்பநிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ‘சுக்ரோஸ்’ அளவும் இந்தக் கரும்புல அதிகமா இருக்குது. விவசாயி, விவசாயியா மட்டும் இருக்கக் கூடாது. மதிப்புக் கூட்டுபவராகவும் விற்பனையாளராகவும் மாறணும்னு நம்மாழ்வார் சொன்னதுபோல, அறுவடை செஞ்ச கரும்பிலிருந்து சாறெடுத்துக் காய்ச்சி, நாட்டுச் சர்க்கரைத் தூளாகவும், உருண்டை வெல்லமாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். என்னைப் போல இயற்கை விவசாயத்துல மறுதாம்புல தொடர் மகசூல் எடுக்கணும்னா மண்ணை வளப்படுத்தினா மட்டும் போதும்.

வேளாண் பல்கலைக்கழகமே ஒரு ஏக்கருக்குக் கரும்புச் சாகுபடியில் அதிகபட்ச மாக 40 முதல் 45 டன் வரைதான் கிடைக்கும்னு சொல்லியிருக்குது. ஆனா, நான் அதுல ரெண்டு மடங்கு எடுத்திருக்கேன். இதுக்கு காரணம் என்னோட மண் வளம்தான். மண்ணுதான் எல்லா விவசாயத்துக்கும் அடிப்படை. மண் வளத்தைவிட விவசாயத் துக்கு வேற எந்த வளமும் முக்கியமில்ல. மண்ணை வளப்படுத்தினாலே விவசாயத்துல ஜெயிச்சிடலாம்.

இந்தியாவுல உள்ள விவசாய நிலப் பரப்புகள்ல மண்ணை இயற்கை முறையில வளப்படுத்தினாலே உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதோடு பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம். இந்தியா வல்லரசு நாடா மாறணும்னா மண்ணை வளப்படுத்தணும். இயற்கை விவசாயத்துல ஜெயிச்சிட்டதுனால இதைச் சொல்லுற தகுதி எனக்கு இருக்கு” என்றார் மகிழ்ச்சி பொங்க.

Visit A Sugarcane Farm! | LBB

இந்த அளவு மகசூலைப் பார்த்ததில்ல

தென்காசி மாவட்ட வேளாண் துணை இயக்குநர் நல்லமுத்துராஜா, “ ‘புளியங்குடி’ன்னு ஊர் பேரைச் சொன்னாலே இயற்கை முறையில் விவசாயம் செஞ்சுட்டு வர்ற முதுபெரும் விவசாயி அந்தோணிசாமி யைத்தான் அடையாளமாச் சொல்றாங்க. அவரோட நெல், எலுமிச்சை, கரும்புத் தோட்டங்களைப் பார்வையிட்டோம். ‘இது 30-வது மறுதாம்புக் கரும்பு’ என அந்தோணிசாமி காட்டிய கரும்புகளைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

அதிகாரிகள் முன்னிலையில், ஒரு சென்ட் பரப்பளவுக்கு அளவீடு செய்து, அதிலுள்ள கரும்புகளை அறுவடை செய்து எடை போட்டுப் பார்த்ததில் 900 கிலோ இருந்தது. இதையே ஒரு ஏக்கருக்கு எனக் கணக்கிட்டால் 90 டன் ஆகிறது. ஒரு கரும்பு குறைந்தபட்சம் 6 அடியும் அதிகபட்சமாக 10 அடி உயரம் வரையும் உள்ளது. என் அனுபவத்தில் ஒரு ஏக்கர் கரும்பு அறுவடையில் இத்தனை டன் மகசூல் எடுத்த விவசாயியைப் பார்த்ததில்லை. இதற்கு அவர்கூறும் இயற்கை விவசாய முறையும், மண்ணின் வளமுமே காரணமாக இருக்கலாம்” என்றார்.

தன்னம்பிக்கையே காரணம்!

மதுரை சேவா அமைப்பின் செயலாளர் விவேகானந்தன், “ரசாயன விவசாயத்தில் லட்சக்கணக்கில் கடனாளியாகி, விவசாயத் தின் மீது வெறுப்பில் இருந்தார் அந்தோணிசாமி. குஜராத் மாநில இயற்கை விவசாயி பாஸ்கர் சாவே போன்ற முன்னோடி இயற்கை விவசாயிகளின் பண்ணைகளைப் பார்வையிட்ட பிறகே, முழு மூச்சாக இயற்கை விவசாயத்தில் இறங்கி, மனம் தளராமல் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

தென் மாவட்டங்களில் ரசாயன விவசாயத்தை மட்டுமே மலையாக நம்பி விவசாயம் செய்து வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்தின் பக்கம் மாற்றியவர். எலுமிச்சையில் புதிய ரகத்தைக் கண்டுபிடித்து மகசூலைப் பெருக்கியதுபோல, கரும்பு மறுதாம்பு அறுவடையிலும் சாதனை படைத்துள்ளார். இயற்கை விவசாயத்தை நம்பினால் ஜெயிக்கலாம் என்பதற்கு இந்த மகசூலே பெரிய உதாரணம். அவரது கரும்புத் தோட்டத்து மண் வளத்தையும், ஒவ்வொரு கரும்பின் எடையையும் பார்த்து வியந்து போனேன். இந்தச் சாதனைக்கு அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே காரணம்” என்றார்.

தொடர்புக்கு,

அந்தோணிசாமி,

செல்போன்: 99429 79141

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

கரும்புச் சாகுபடி குறித்து அந்தோணிசாமி கூறியவை இங்கே…

கரும்புச் சாகுபடி செய்ய இரண்டடி பாத்தி, அடுத்து 6 அடிப்பாத்தி என்று மாற்றி மாற்றி அமைக்க வேண்டும். 6 அடி இடைவெளி பாத்தி அமைக்கப்பட்ட நிலத்தில் தக்கைப்பூண்டை விதைக்க வேண்டும். இரண்டு அடி பாத்தி நிலத்தில் இரண்டு வரிசையாகக் கரும்பு நட வேண்டும். 45-ம் நாளில் தக்கைப்பூண்டு பூத்த நிலையில் செடிகளைப் பிடுங்கி, கரும்புக்கு நடுவில் மூடாக்காகப் போட வேண்டும். இதற்குப் பிறகு, வேறு உரம் ஏதும் தேவையில்லை. மீண்டும் தக்கைப்பூண்டு விதையை விதைக்க வேண்டும். அது வளர்ந்ததும் பிடுங்கி, அடுத்த மூடாக்குப் போட வேண்டும். இவ்வாறு 45 நாள்களுக்கு ஒரு முறை மூடாக்குப் போடலாம். கரும்பு நடவு செய்த 90-ம் நாள், பயிர் வளர்ச்சி ஊக்கியான மீன் அமினோ அமிலம் ஒரு லிட்டர் எடுத்து 100 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

120-ம் நாள் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 160-ம் நாள் கரும்பின் தோகையை உரித்து விட வேண்டும். உரித்த தோகையைக் கரும்பின் அடியிலேயே மண்ணைப்போட்டு மூடிவிட வேண்டும். அதன் மீது ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். இதேபோல, 200-ம் நாள் மற்றும் 240-ம் நாள் என, தோகையை உரித்து மண்ணில் போட்டு ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். 11-ம் மாதத்தில் அறுவடை செய்யலாம். பாத்திகள் அமைப்பதால் கரும்புகளுக்கு இடையே அதிக அளவு இடைவெளி கிடைக்கிறது. இதன் மூலம் காற்றையும் சூரிய ஒளியையும் அறுவடை செய்துகொண்டு நன்றாக வளர்கிறது கரும்பு. இதுதான் என் வெற்றியின் ரகசியம். அறுவடைக்குப் பிறகு, அப்படியே மறுதாம்பு விடலாம். மீண்டும் தக்கைப்பூண்டு விதைத்து 45-ம் நாள் தூரில் மடக்கி வைக்க வேண்டும். குறிப்பிட்ட நாள் இடைவெளியில் தோகையைத் தூரில் வைத்து மண் அணைக்க வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் ஏக்கருக்கு 40 டன் நிச்சயம். மண் வளத்தைப் பொறுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மகசூல் அதிகரிக்கும்.

துணைவேந்தருக்கு விடுத்த சவால்!

கடந்த 10.02.19 தேதியிட்ட பசுமை விகடன் இதழில், ‘இயற்கை விவசாயத்தால் உணவு உற்பத்தி அதிகரிக்காது! தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ‘பளீர்’ பதில்!’ என்ற தலைப்பில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் என்.குமார், நமக்கு அளித்த பேட்டிக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதில், “இயற்கை விவசாயத்துக்கான ஆர்வம் தற்போது அதிகரித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, ‘‘இயற்கை விவசாயம் என்பது மாட்டுச்சாணத்தைப் பயன்படுத்திதான் செய்ய வேண்டும் என்று நம் விவசாயிகள் நினைக்கிறார்கள். வீட்டுத் தோட்டத்துக்கு வேண்டுமானால் அது சாத்தியம். அதில் அதிகப்படியான விளைச்சல் பெற முடியாது. இயற்கை விவசாயம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமில்லை’’ எனத் துணைவேந்தர் குமார் பதில் கூறியிருந்தார். இதைப் படித்த அந்தோணிசாமி, “விவசாயத்தை அதிக விளைச்சல் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார் துணைவேந்தர். விளைச்சலின் அடிப்படையிலான அவரது அந்தப் பார்வையே முதலில் தவறானது. அதிக விளைச்சல் என்பது நீடித்த நிலைத்த வருமானம் அல்ல. ரசாயன உரத்தை முழுமையாக உபயோகித்துத் தோற்றுப் போனவர்கள் நாங்கள். அதனால், தொடர்ந்து விவசாயமே செய்ய முடியாமல் நோயாளியாகவும் கடனாளியாகவும் மாறியதுதான் மிச்சம்.

ஆனால், இன்று இயற்கை விவசாயத்துல நாங்க ஜெயிச்சிருக்கோம். 30 வருஷம் ரசாயன விவசாயத்தில் தோற்ற எனக்கு, ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைத் துணைவேந்தர் அடையாளம் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் அவர் தனது பேச்சை வாபஸ் வாங்க வேண்டும். ஜெயித்தவர்களை அடையாளம் காட்ட ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வுக் குழுவுக்கான முழுச்செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். அத்துடன் துணைவேந்தருக்கு ரூ.2 லட்சம் பரிசும் தருகிறேன்” எனச் சவால் விட்டார். ‘‘அந்தச் சவாலுக்கும் இதுவரை துணைவேந்தர் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை’’ என்கிறார் அந்தோணிசாமி.

“என் சவாலைச் சமாளிக்க
யாரும் முன்வரல!”

‘இயற்கை விவசாயத்துல மகசூல் எடுக்க முடியாது’ எனச் சொல்பவருக்கு 10.7.2007 பசுமை விகடன் இதழில் சவால் விடுத்தார் அந்தோணிசாமி. அதில், “என்னோட நிலத்துல ரெண்டு ஏக்கரை ஒதுக்கித் தருகிறேன். அதுல ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தி 5 வருஷம் பயிர் செய்யணும். அதுல விளையறதையே அவரோட குடும்பம் சாப்பிட்டுகிட்டு, மீதியை வித்து வருமானம் பார்க்கலாம். அதேபோல ரெண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி நான் இயற்கை விவசாயம் செய்றேன். அதுல விளையறதையே சாப்பிட்டு, மீதியை வித்து வருமானம் பார்ப்பேன். அத்தனை கணக்கு வழக்கையும் முழுமையா பதிவு பண்ணிக்கணும். ஆரம்பத்துலயே ரெண்டு நிலத்தோட மண்வளம், ரெண்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை எல்லாத்தையும் பரிசோதனை செஞ்சிக்கணும். 5 வருஷத்தோட முடிவுல கிடைச்ச மொத்த லாபம், மண்ணோட தன்மை, குடும்ப உறுப்பினர்களோட உடல்நலம் இதையெல்லாம் பரிசோதிச்சு பார்ப்போம். ரசாயன உரம் போட்ட நிலத்தோட வளம், இயற்கை உரம்போட்ட நிலத்தைவிட வளம் கூடியிருந்தா, லாபம் அதிகமா கொடுத்திருந்தா, குடும்பத்துல உள்ளவங்களுக்கு எந்த நோயும் வராம இருந்தா ஒரு லட்ச ரூபாய் பரிசும், ‘வேளாண் செம்மல்’னு பட்டமும் தரத் தயாரா இருக்கேன்’னு பசுமை விகடன் மூலமா சவால் விட்டேன். இந்தச் சவாலை விட்டு 14 வருஷம் ஆகுது. இன்னும் ஒருத்தர்கூட முன் வரலை” என்றார்.

‘சிருஷ்டி சம்மான்’ விருது

சில விவசாயிகள் தங்களின் அனுபவத்தை வைத்தே புதுப்புது ரகங்களை உருவாக்கி விடுவதுண்டு. இத்தகைய ரகங்களுக்கு முன்பாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ரகங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போவதுண்டு. அந்த வகையில் அந்தோணிசாமி கண்டுபிடித்த புதிய ரக எலுமிச்சை, நடவு செய்த இரண்டாவது ஆண்டில் இருந்தே நிறைவான மகசூலை அள்ளித்தருகிறது.

இதனால், விவசாயிகள் இந்த ரகத்தைப் பரவலாகச் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ரகத்தைக் கண்டுபிடித்ததற்காக 2004-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிடம், ‘சிருஷ்டி சம்மான்’ விருது பெற்றுள்ளார். பெயர் வைக்காத அந்த எலுமிச்சை ரகம்தான் அந்தோணிசாமிக்குப் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

8 டன் வெல்லம், ரூ.5,60,000 வருமானம்!

அறுவடை செய்த கரும்பை வெல்லமாக்கி விற்பது குறித்துப் பேசிய அந்தோணிசாமி,

“30-வது மறுதாம்பு அறுவடையில் கிடைத்துள்ள 90 டன் கரும்பை, சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்திருந்தால் ஒரு டன்னுக்கு ரூ.2,800 கிடைத்திருக்கும். இதில், வெட்டுக்கூலி, போக்குவரத்துச் செலவு ரூ.800 போய்விடும். அந்த வகையில் 90 டன் கரும்புக்கு ரூ.1,80,000 மட்டும்தான் லாபமாக் கிடைச்சிருக்கும்.

ஆனால், இதே 90 டன் கரும்பைப் பிழிந்துச் சாறெடுத்துக் காய்ச்சி வெல்லமாக்கினால், 8 டன் உருண்டை வெல்லம் கிடைக்கும். ஒரு கிலோ வெல்லத்தை ரூ.70-க்கு விற்பனை செய்கிறேன். அந்த வகையில் 8 டன் வெல்லம் விற்பனை மூலம் ரூ.5,60,000 வருமானமாகக் கிடைக்கும். இதில் பராமரிப்புச் செலவுகள், அறுவடைச் செலவுகள், கரும்பு சாறெடுத்து வெல்லமாக மதிப்புக்கூட்டுதல், உருண்டை பிடித்தல் என செலவுகள் ரூ.3 லட்சம் வரை ஆகிறது. மீதமுள்ள ரூ.2,60,000 நிகர லாபமாகக் கிடைக்கும். என்னோட இயற்கை முறையிலான உருண்டை வெல்லம் தயாரிப்புக்குச் சந்தையில் எப்போதும் தேவை இருந்துகிட்டே இருக்கு. என்னாலதான் கொடுக்க முடியலை. இந்த வருஷம் கூடுதலாவே கிடைச்சிருக்கிறதுனால கேட்டவங்களுக்கு வெல்லம் கிடைக்கும்” என்கிறார்.

Related posts