கம்பு சாகுபடி முறைகள் மற்றும் பயன்கள்

கம்பு சாகுபடி முறைகள்

சிறுதானிய பயிர்களில் மிகவும் அதிக சத்துக்கள் நிறைந்த பயிர் கம்பு பயிர் என்று சொல்லலாம். தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்ததாக பயிரிடப்படும் உணவு பயிர், கம்பு. கம்பு குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. உணவுத் தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப் பொருள்களை பெற்றுள்ளது.

கம்பு தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடைத் தீவனமாகவும் உள்ளது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்துக் குறைபாட்டைப் போக்க கம்பு மிகச் சிறந்த தானியமாகும். எனேவ சந்தையில் அதிக வரவேற்கப்படும் இந்த கம்பினை விவசாயிகள் பயிரிடுவதால் அதிக லாபம் பெறலாம்.

இரகங்கள்:

வீரியம், ஒட்டு ரகங்கள், கம்பு கோ (சியு) 9, கம்பு வீரிய ஒட்டு (சியு) 9 போன்ற இரகங்கள் இந்த கம்பு பயிர் சாகுபடி முறைக்கு பயன்படுத்தப்படுகிறது.

பருவ காலங்கள்:-

கோ (சியு) 9 ரகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வீரிய ஒட்டு கம்பு கோ (சியு) 9 ஆகியவை ஜூன், ஜூலை மாதங்களில் பயிரிடுவதற்கு ஏற்றதாகும். மேலும் இந்த ரகங்கள் மானாவரியில் ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், இறைவையில் மாசிப் பட்டம், சித்திரைப் பட்டங்களிலும் பயிரிடலாம்.

விதையளவு:

ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும். சால் விதைப்பு பரவலாக நடைமுறையில் உள்ளது.

விதை நேர்த்தி:

ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம் கலந்து பின்பு விதைக்க வேண்டும்.

உர அளவு:

மானாவாரியில் 12.5 டன், (ஒரு ஏக்கருக்கு), தழைச்சத்து 40 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, அனைத்தும் அடியுரமாக இட வேண்டும்.

பயிர் களைப்பு:

கம்பு விதைத்த 2-வது வாரத்தில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்குப் பயிர் 15 செ.மீட்டர் இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். பொதுவாக 15-வது, 30-வது நாளில் களை எடுக்க வேண்டும். 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

குருத்து ஈக்களை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும்.

கதிர் நாவாய் பூச்சி:

கதிர் நாவாய் பூச்சிக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க 25 கிலோ கார்பரில், 5 சதவீத மாலத்தியான் ஆகியவற்றை பூவெடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும்.

அறுவடை:

இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும். தானியங்கள் கடினமாகும். அப்போது கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும்.
ஒரு வாரம் கழித்து தட்டையை வெட்டி நன்கு காயவைத்து பின்னர் சேமித்து வைக்க வேண்டும். இந்த முறையில் கம்பை பயிரிட்டால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம்.

பயன்கள்:

உடல் பலம்:

கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்த உணவாகும். இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்கும்.

நீரிழிவு:

நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள அரிசி போன்றவற்றை சாப்பிடமுடியாது. அந்த அரிசிக்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இழந்த உடல்சக்திகளை மீண்டும் தர வல்லது இந்த கம்பு.

நோய் எதிர்ப்பு:

சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.

நார்சத்து:

நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும். கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீக்கும்.

உடல் எடை குறைப்பு:

பசி அதிகம் எடுப்பவர்கள் அடிக்கடி எதையாவது உண்பதால் அவர்களின் உடலில் கட்டுப்பாடில்லாமல் எடை கூடிவிடுகிறது. இவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் பசியை சரியான நேரத்தில் மட்டுமே எடுக்கச்செய்து, இவர்களின் உடல் எடையை குறைக்கும்.

இளமை தோற்றம்:

கம்பு அதிகம் உட்கொள்பவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராணவாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளப்பளபையும் இளமை தோற்றத்தையும் தருகிறது. முதுமை அடைவதை தாமதப்படுத்துகிறது.

தாய்ப்பால் சுரப்பு:

புதிதாக குழந்தை பெற்ற சில தாய்மார்களுக்கு ஒரு சில சமயங்களில் தாய்ப்பால் சுரப்பு குறையும் அல்லது நின்றுவிடும். இந்த தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது களி போன்றவற்றை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

மாதவிடாய்:

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின் போது சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் இளம் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் அருந்த மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.

ரத்தக் கொதிப்பு:

கம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

முடிகொட்டுதல்:

இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தலைமுடி கொட்டுதல் ஆகும். முடி நன்கு தழைத்து வளர “கெராட்டீன்” எனும் புரதம் அவசியம். இது கம்பில் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவாக அதிகம் உண்பவர்களுக்கு முடி கொட்டுவது குறையும்.

உடல் சூடு:

சிலருக்கு சுற்றுப்புற சூழலாலும், உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் உடல் அதிகம் வெப்பமடைந்து, அதனால் சில பாதிப்புகளை சந்திக்கின்றனர். இவர்கள் தினமும் காலை வேளைகளில் கம்பு கூழை பருகி வந்தால் உடல் அதிகம் உஷ்ணமடைவது குறையும்.

Related posts