ஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்

ஆராய்ச்சி மண் வள அட்டை

மண் வள அட்டை

விவசாயிகளின் நிலங்களை அளவிட்டு, மண்ணை வகைப்படுத்தி, மகசூலை அதிகரிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யும் ஆராய்ச்சி மூலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் வேளாண் துறையும் புதிய மாற்றத்துக்கு வித்திட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக மண் வகையை அறிந்து, மகசூலைப் பெருக்க மண் வள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வரி வசூலிக்கக் கிராமங்கள் வாரியாக நில அளவீடு செய்து, புல எண் வாரியாகக் கிராம வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரைபடங்களைக் கொண்டே நில அளவீடும், புல எண் வாரியாகக் கிராம வரைபடங்களும் கையாளப்பட்டு வருகின்றன.

முதுகெலும்பு

இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் நலனைக் காக்கவும், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான மேம்பாட்டு வசதிகளையும் அறிவியல்பூர்வமாகத் திட்டமிட்டுச் செய்வது கானல் நீராகவே இருந்து வந்தது. இந்நிலையை மாற்றக் கிராமங்களில் புல எண் வாரியாக விவசாய நிலங்களைப் பிரித்து, மண்ணை வகைப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் தற்போது புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் வேளாண் துறையும் இணைந்து, தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களில் 18 ஒன்றியங்களில் கிராமம் வாரியாக, புல எண் வாரியாக மண் வகையீட்டைச் செய்துள்ளன.

முதல்கட்டமாகச் சேலம் மாவட்டம் வீரபாண்டி, வாழப்பாடி மற்றும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆகிய பகுதியில் 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை மண் வள ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியின் முடிவு

ஆராய்ச்சி முடிவில் முன்னோர் கையாண்ட விவசாய முறைகளைப் புறக்கணித்ததே, தரிசு நிலங்கள் அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் என்பது கண்டறியப்பட்டது. தற்போது விவசாய நிலங்களில் மண் வளத்தை அறிந்து, அதற்குத் தகுந்த உரம், பயிர்களைச் சாகுபடி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இதன்படி விவசாய நிலங்கள் புல எண் வாரியாக நிலத்தின் சரிவு, ஆழம், வறட்சி, சரளை கற்கள், கூழாங் கற்கள், மண் நயம், சுண்ணாம்பு சத்துயாக ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்கு மண் எடுக்கப்பட்டது. குழி தோண்டி அடி மண், மேல் மண், பாசன நீர் மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஆய்வின் முடிவில், ஒரே மாதிரியான மண் வகைகள் கொண்ட கிராமங்களைப் பிரித்து, மண் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. கணினி மூலம் புல எண் வாரியாக மண் வள வரைபடங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பட்டியல் தயாரிப்பு

இந்த மண்ணுக்குப் பொருந்தக்கூடிய பயிர்கள், பொருந்தாத பயிர்கள், குறைவாகப் பொருந்தும் பயிர்கள், மண்ணில் உள்ள சத்துகள், தேவையான தழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து, தாமிரம், துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு உள்ளிட்ட சத்துகளின் அளவீடுகள் பதிவு செய்யப்பட்ட மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.

தங்களுடைய விளை நிலங்களுக்குத் தேவையான சத்துள்ள உரங்கள், பயிரிட வேண்டிய பயிர்கள், ஒவ்வாத பயிர்கள், பாசன மாதிரி, உப்பு அளவு, மண் மேலாண்மை, பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் புதிய மண் வள அட்டை மூலம் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் சாகுபடி முறையை மாற்றி அதிக மகசூல் பெற்று, தொழில் முன்னேற்றம் காண முடியும்.

Related posts