“50,000 பேர் வேலையை இழப்போம்” – ஆளுநர் மற்றும் அரசுக்கு பைக் டாக்சி ஓட்டுநர்கள் கடிதம் @ டெல்லி | 50000 people will lose job Bike taxi drivers letter to Governor govt Delhi

புது டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசை தடுக்கும் நோக்கில் பயணிகளுக்கு பைக் டாக்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மாறுவதை கட்டாயமாக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது ஆம் ஆத்மி அரசு. இதற்கு டெல்லி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் பைக் டாக்சி சேவையை நம்பி வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் சுமார் 50,000 பேர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என பைக் டாக்சி ஓட்டுநர்கள் தரப்பில் ஆளுநர் மற்றும் ஆம் ஆத்மி அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

“பெட்ரோல் பைக் ஓட்டி வரும் சாமானிய நபரால் திடீரென எப்படி எலக்ட்ரிக் பைக்குக்கு மாற முடியும்? சந்தையில் எலக்ட்ரிக் பைக்குகள் இல்லை. அதே போல அவற்றை வாங்குவதற்கு எங்களிடம் பணமும் இல்லை” என அந்தக் கடிதத்தில் அப்னா பைக் டாக்சி சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கை தொடர்பாக பலமுறை அரசு தரப்பை அணுகியும் அது கேட்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த மாதம் இருசக்கர வாகனத்தை கொண்டு உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி செய்யும் சேவையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மின்சார இருசக்கர வாகனத்துக்கு மாறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள அதே காலக்கெடுவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என பைக் டாக்சி ஓட்டுநர்கள் தெரிவித்திருந்தனர்.

காற்று மாசை குறைக்கும் அரசின் நோக்கத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பைக் டாக்சி ஓட்டுநர்கள் மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டுமென்ற கடுமையான விதிமுறை, தங்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல் என தெரிவித்துள்ளனர்.

மின்சார இருசக்கர வாகனத்துக்கு பைக் டாக்சி ஓட்டுநர்கள் மாறும் அரசின் கொள்கை அளவிலான முடிவை கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கொண்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி ஆளுநர் இதற்கு அனுமதி வழங்கினார். விரைவில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source link

Related posts

Leave a Comment