4 லட்சம் கோடி டாலரை தொட்டது பங்குச் சந்தை! | stock market has touched 4 lakh crores of dollars

மும்பை: இந்திய பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு முதன்முறையாக நேற்று 4 லட்சம் கோடி டாலரை (ரூ.333 லட்சம் கோடி) தொட்டது.

நேற்றைய தினம் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 1.10 சதவீதம், தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 1.04 சதவீதம் உயர்ந்தன. இதையடுத்து மும்பைச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு முதன்முறையாக 4 டிரில்லியன் டாலரைத் தொட்டது. நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 727 புள்ளிகள் உயர்ந்து 66,901 ஆக நிலைகொண்டது. நிஃப்டி 207 புள்ளிகள் உயர்ந்து 20,096 ஆக ஆனது. கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு நிஃப்டி 20,000-ஐ கடந்துள்ளது.

அதிகபட்சமாக ஆக்ஸிஸ் வங்கி 3.8 சதவீதம், ஹீரோ மோட்டோகார்ப் 3.45 சதவீதம், எம்.எம். 3.39 சதவீதம் உயர்வைக் கண்டன.

சர்வதேச அளவில் சந்தை மதிப்பு அடிப்படையில் இந்திய பங்குச் சந்தை 5-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா (47 டிரில்லியன் டாலர்), சீனா (9.7 டிரில்லியன் டாலர்), ஜப்பான் (5.9 டிரில்லியன் டாலர்), ஹாங்காங் (4.8 டிரில்லியன் டாலர்) ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.

2007-ல் இந்தியப் பங்குச் சந்தை நிறுவனங்களின் மதிப்பு 1 டிரில்லியன் டாலராக இருந்தது. 2017-ம் ஆண்டில் அது 2 டிரில்லியன் டாலராகவும் 2021-ல் 3 டிரில்லியன் டாலராகவும் உயர்ந்தது.

இவ்வாண்டில் மட்டும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மதிப்பு 600 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி பொருளாதாரரீதியாக உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்தது. 2027-ம் ஆண்டு இந்தியா மூன்றாம் இடத்துக்கு முன்னேறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
Source link

Related posts

Leave a Comment