யூடியூபில் வருமானம் ஈட்ட அடிப்படை விதிமுறைகள் என்னென்ன?

YouTube

யூடியூபில் நாம் பெறக்கூடிய வருமானம் என்பது, நம்முடைய காணொலிகளில் எத்தனை விளம்பரங்கள் இடம்பெறுகின்றன, அந்த விளம்பரத்தை எத்தனை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள், எத்தனை பேர் அந்த விளம்பரத்தை கிளிக் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

“யூடியூப் சேனலில் பணம் கிடைக்க அடிப்படையான விதிமுறைகள் என்னென்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான விடைகளை அளிக்கிறது இந்தக் கட்டுரை.

யூடியூபில் காணொலிகளைப் பதிவிடுவதன் மூலம் குறிப்பிட்ட அளவு வருமானத்தைப் பெற முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை எப்படிச் சம்பாதிக்க வேண்டும், அதற்கான வழிமுறைகள் என்ன, அதற்கான அளவுகோல்கள் என்ன என்பது பற்றிப் பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. யூடியூப் காணொலிகள் மூலம் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு வழி யூடியூபில் மானிடைசேஷன் (Monetization) செய்வது. யூடியூபில் அதை எப்படிச் செய்வது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

யூடியூப் பார்ட்னர் புரோக்ராம் (YouTube Partner Program) என்ற திட்டத்தின் கீழ் பல வசதிகளை யூடியூபில் காணொலிகளைப் பதிவிடுபவர்களுக்கு வழங்கிவருகிறது. அதன் ஒரு பகுதியாக மானிடைசேஷன் என்ற வசதியையும் வழங்கிவருகிறது யூடியூப். YouTube Partner Program-ல் இணைந்து உங்கள் சேனலை மானிடைஸ் செய்வதன் மூலம் நீங்கள் பதிவிடும் காணொலிகளின் மூலம் வருமானத்தைப் பெற முடியும்.

அடிப்படை அளவுகோல்கள் என்ன?

யூடியூபில் மானிடைஸ் செய்வதற்கு உங்களிடம் முதலில் ஒரு யூடியூப் சேனல் இருக்க வேண்டும். அந்த யூடியூப் சேனலில் தொடர்ந்து காணொலிகள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1000 சந்தாதாரர்களும், கடந்த ஒரு வருடத்தில் 4000 மணி நேரம் நீங்கள் பதிவிட்ட காணொலிகளும் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு அளவுகோல்களையும் நீங்கள் அடையும் பட்சத்தில் உங்கள் யூடியூப் சேனலை உங்களால் மானிடைஸ் செய்ய முடியும்.

எப்படி மானிடைஸ் செய்வது?

  • உங்கள் யூடியூப் கணக்கிற்குள் நுழைந்து, பின் வலதுபுறம் மேல் பக்கத்தில் இருக்கும் Accounts-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் YouTube Studio என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு தோன்றும் பக்கத்தில் இடது புறம் Monetization என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும், அதை கிளிக் செய்ய வேண்டும்.
  • (புதிய பயனர் என்றால்) அதன் பின் தோன்றும் பக்கத்தில் கீழே NOTIFY ME WHEM I’M ELIGIBLE என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் யூடியூப் சேனல் 1000 சந்தாதாரர்களைப் பெற்று, 4000 மணி நேரம் வரை உங்கள் காணொலிகள் பார்க்கப்பட்ட பின்பு உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • அதன் பின்னர் புதிதாக ஒரு AdSense கணக்கையோ அல்லது ஏற்கெனவே உங்களிடம் இருக்கும் AdSense கணக்கையோ உங்கள் சேனலுடன் இணைத்து யூடியூபில் மானிடைஸ் செய்து கொள்ளலாம். (யூடியூபில் மானிடைஸ் செய்வதற்கு AdSense கணக்கு முக்கியம்)
YouTube monetization

யூடியூபில் மானிடைஸ் செய்வதன் மூலம் எப்படி நம்மால் வருமானம் ஈட்ட முடிகிறது?

யூடியூபில் நாம் பெறக்கூடிய வருமானம் என்பது, நம்முடைய காணொலிகளில் எத்தனை விளம்பரங்கள் இடம்பெறுகின்றன, அந்த விளம்பரத்தை எத்தனை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள், எத்தனை பேர் அந்த விளம்பரத்தை கிளிக் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால், Cost-per-view, Cost-per-click என்பதன் அடிப்படையிலேயே நமது வருமானம் இருக்கும். நமக்கு அதிகமாகச் சந்தாதாரர்கள் இருந்தால் அதிக வருமானம் என்று சிலர் நினைப்பதுண்டு, ஆனால் நமது சந்தாதாரர்களுக்கும் யூடியூபில் மானிடைஸ் செய்வதன் மூலம் பெறும் வருமானத்திற்கும் தொடர்பில்லை. ஒரு குறிப்பிட்ட காணொலியில் எத்தனை பேர் விளம்பரங்களைப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது அமைகிறது.

மேலும் தொடர்ந்து நமது காணொலிகளில் விளம்பரங்கள் இடம்பெற வேண்டுமானால் அதற்கும் பல விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம். உதாரணமாக நம்முடைய காணொலிகளில் வன்முறை, பாலியல் குறித்த தவறான கருத்துகள், சர்ச்சைக்குரிய கருத்துகள் ஆகியவை இடம்பெற்றிருந்தால் அந்தக் காணொலிகளை மானிடைஸ் செய்ய முடியாது. அவற்றை யூடியூப்பே மானிடைசேஷனில் இருந்து நீக்கிவிடும்.

Adsense In 3 Steps

AdSense என்றால் என்ன?

யூடியூபில் நமது வருமானம் முழுவதும் விளம்பரத்தைச் சார்ந்துள்ளது எனக் கூறியிருந்தோம். நமது காணொலியில் என்ன விதமான விளம்பரங்கள் இடம்பெற வேண்டும் என்பது AdSense மூலம்தான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த AdSense ஆனது யூடியூபுக்கு மட்டுமல்லாமல் கூகுளின் அனைத்து சேவைகளிலும் என்ன விதமான விளம்பரங்கள் பயனர்களுக்குக் காட்டப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே AdSense கணக்கைத் தொடங்குவதன் மூலமே நம்முடைய காணொலிகளில் இடம்பெறுவதற்கான விளம்பரங்களை நாம் பெறமுடியும்.

Related posts