Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் கணையத்தில் கல் உருவாகுமா?

Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு அதிகம் சாப்பிட்டால் கணையத்தில் கல் உருவாகும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

கணையத்தில் உருவாகும் கற்கள் (பான்க்ரியாட்டிக் ஸ்டோன்ஸ்) என்பவை குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் உருவாவதில்லை. உண்மையில் மரவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச் சத்து அதிகமுள்ளது.  எனவே அது கணையத்தில் கற்கள் உருவாக்க வாய்ப்பில்லை. 

சிலருக்கு பித்தப்பையில் கற்கள் இருக்கும். அவை பித்தப்பையின் கிளைகளில் மாட்டிக்கொள்ளும். அதன் காரணமாகவே அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். சிலருக்கு தீவிர கணைய பாதிப்பு ஏற்படலாம்.  அதாவது அடிக்கடி கணையத்தில் வீக்கம் வரும். அதனால் கணைய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதனாலும் கணையத்தில் கற்கள் வரலாம். அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகள் செய்து பார்ப்போர், ரத்தச் சர்க்கரை அளவுகளோடு கொழுப்பு அளவுகளையும் டெஸ்ட் செய்து பார்ப்பார்கள். 

பித்தப்பை

லிப்பிட் புரொஃபைல் எனப்படும் அந்தப் பரிசோதனையில் ஹெடிஎல், எல்டிஎல், ட்ரைகிளிசரைடு என வேறு வேறு கொழுப்புகளின் அளவுகளைக் குறிப்பிட்டிருப்பார்கள். இவற்றில் ட்ரைகிளிசரைடு என்பதுதான் ரத்தக் குழாய்களில் படிந்து, அடைப்பை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது. இந்த ட்ரைகிளிசரைடு அளவானது மிகவும் அதிகமாக இருப்பதும் கணையத்தில் கற்கள் உருவாகக் காரணமாகலாம். அதே போல ரத்தத்தில் கால்சியம் அதிகமிருப்பதும் ஒரு காரணமாகலாம். 

எனவே கணையத்தில் உருவாகும் கற்களுக்கும் உணவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஓட்டப் பந்தயத்தில் ஓடுவோர் போன்றோர், அதீத எனர்ஜி வேண்டும் என்பதற்காக மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட நிறைய கிழங்கு வகைகள் சாப்பிடுவதுண்டு.  

ஓட்டம்

அந்த வகையில் மரவள்ளிக் கிழங்கு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய உணவுதான். பயமின்றி சாப்பிடலாம். அதைப் பொரித்தோ, எண்ணெய் நிறைய சேர்த்துச் சமைத்தோ சாப்பிடுவதை மட்டும் தவிர்க்கவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Source link

Related posts

Leave a Comment