Doctor Vikatan: நடிகர் விஜய்காந்த்துக்கு `ட்ரக்கியாஸ்டமி' சிகிச்சை… யாருக்கு, எப்போது தேவைப்படும்?

Doctor Vikatan: நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்காந்துக்கு சுவாசப் பிரச்னை இருப்பதாகவும் அதை குணப்படுத்த ட்ரக்கியாஸ்டமி என்ற சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம். ட்ராக்கியாஸ்டமி என்பது என்ன மாதிரியான சிகிச்சை…. அது யாருக்கு, எப்போது செய்யப்படும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்   

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

‘ட்ரக்கியா’ என்றால் காற்றுக் குழாய், அதாவது சுவாசக்குழாய்…இந்தக் குழாயில் சிறிய துளை போட்டு, ஒரு டியூபை செருகி, சுவாசத்தை முறைப்படுத்தச் செய்வார்கள். சில நோயாளிகளை வென்டிலேட்டர் சிகிச்சைக்கு உட்படுத்துவார்கள். அப்படிச் செய்தபிறகு அதிலிருந்து அவர்களை எடுக்க முடியாது. அந்த நிலையில் ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை தேவைப்படும். 

நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குக்கூட ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இந்தச் சிகிச்சையை நரம்பியல் தொடர்பான  ‘நியூரோ மஸ்குலர்’ பிரச்னைகளுக்கும் பயன்படுத்துவார்கள். அதாவது இந்த நிலையில் தசைகள் சரியாக வேலை செய்யாது. இது நம்முடைய சுவாசத்தையும் பாதிக்கலாம். சுவாசப்பாதையின் தசைகளை பாதிக்கும்போது நம்முடைய சுவாசமானது ஒழுங்காக இருக்காது. 

ஜெயலலிதா

அதன் விளைவாக இவர்களுக்கு உணவு விழுங்குவதில் சிக்கல் ஏற்படலாம். அதாவது உணவை விழுங்கும்போது உணவானது உணவுக்குழாய்க்குள் செல்வதற்கு பதில், சுவாசக்குழாய்க்குள் போய், அங்கிருந்து நுரையீரலுக்குள் போய்விடும். 

இதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமம் உண்டாவதுடன், நுரையீரலில் தொற்றும் ஏற்படும். சிலருக்கு சுவாசப் பகுதியின் தசைகள் கட்டுப்பாட்டில் இல்லாதநிலையிலோ, உணவுக்குழாயின் தசைகள் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையிலோ பிரச்னைகள் வரும். இவர்களுக்கும் ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

நுரையீரல்

ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை என்பது நிரந்தரமானதாகவோ தற்காலிகமானதாகவோ எப்படியும் இருக்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்கு நிரந்தரமாக அது தேவைப்படும். சிலருக்கு  சில நாள்கள் முதல் சில மாதங்கள் வரை இந்தச் சிகிச்சையைத் தொடரச் செய்துவிட்டு, நோய் குணமானதும் அதை நீக்கிவிடுவார்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Source link

Related posts

Leave a Comment