Doctor Vikatan: உப்பு வைத்துப் பல் துலக்கினால் மஞ்சள் கறை நீங்குமா?

Doctor Vikatan: பற்களில் உள்ள கறையைப் போக்க, உப்பு கொண்டு பல் துலக்கலாமா… டூத்பேஸ்ட்டிலும் உப்பு இருப்பதாகத் தானே விளம்பரப்படுத்துகிறார்கள்… பற்களின் மஞ்சள் கறையைப் போக்க என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக்  

பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் | சென்னை

பற்களின் இடுக்குகளில், ஈறுகளுக்கும் பற்களுக்கும் பின்னால் உள்ள பகுதிகளில் வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் சேர்கிற படிமத்தை பற்காரை என்கிறோம். இதை ஆங்கிலத்தில் ‘ப்ளாக்’ ( Plaque  ) என்று சொல்கிறோம். இது மிருதுவாக இருக்கும்போது ப்ளாக் எனப்படும். அதாவது ஒருநாள் பல் துலக்கவில்லை, அதனால் பற்களில் வெள்ளையாகவோ, மஞ்சளாகவோ ஒரு படிமம் படிகிறது என்றால் அது ப்ளாக் எனப்படும். 

அதுவே ஒரு வாரம், அதைத் தாண்டி பற்களைச் சுத்தப்படுத்தாததால் காரை சேர்ந்து நம் உமிழ்நீரில் உள்ள கால்சியம், தாதுக்கள் போன்றவையும் அத்துடன் சேர்ந்து அது கடினமாக, சிமென்ட் மாதிரி மாறும். அதற்கு  ‘கால்குலஸ்’ (Calculus ) அல்லது ‘டார்ட்டர்’ (Tartar) என்று பெயர். வாய் துர்நாற்றம், பல் துலக்கும்போது ரத்தம் கசிவது போன்றவற்ற்றுக்கும்  கடினமான இந்தக் காரைதான் காரணம். 

பற்களில் கறை படிய பல காரணங்கள் இருக்கலாம். காபி, டீ அதிகம் குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவற்றால் உருவாகும் கறை ஒரு வகை. காரை படிவதால் ஏற்படும் கறை இன்னொரு ரகம். 

உப்பு நீர்

உப்பு என்பது இயற்கையான கிருமிநாசினி. அதற்காக சாதாரண உப்பை பயன்படுத்தி கறை மற்றும் காரைகளைப் போக்க முடியாது. நாள்பட்ட கறை, காரையை உப்பால் நீக்க முடியாது. சாப்பிட்ட பிறகு மவுத்வாஷ்  உபயோகிக்கிறோம். அதிலுள்ள அதே தன்மை கடல் உப்பில் இருக்கும். காரை இருக்கும்போது வாயில் உள்ள பிஹெச் அளவு குறையும். அதனால் வாயிலுள்ள  கிருமிகள் அதிகமாக வேலைசெய்து சொத்தைப் பற்கள் உருவாகும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும். 

உப்பு வைத்து வாய்க் கொப்பளிக்கும்போது பிஹெச் அளவின் சமநிலையைத் தக்கவைத்து, சொத்தை உருவாகும் வாய்ப்பைத் தவிர்க்கும். இந்த வகையில்தான் உப்பு பயன்படும்.  உப்பை பயன்படுத்தி பல் துலக்கும்போது பற்களின் எனாமல் தேய்ந்துபோகும். எனாமல் தேய்ந்துபோனால் உள்ளே உள்ள டென்ட்டின் என்ற லேயர் வெளியே வரும். அப்படி வந்தால் பற்களில் கூச்சம் அதிகரிக்கும்.  பற்களை பாதிக்கும்.  உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய்க் கொப்பளிப்பதால் ஒருநாள் பல் துலக்காததால் உருவான மென்மையான படிமம் சுத்தமாகும்.

த் பேஸ்ட்

உப்பு என்பது டூத் பேஸ்ட்டுக்கு மாற்றே இல்லை. பேஸ்ட்டிலும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் சுத்தத்துக்கும் உதவக்கூடிய தாதுச்சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக ஃப்ளூரைடு என்ற சத்து சொத்தை வராமல் தடுக்கும்.  உப்பு சேர்த்துத் தயாரிக்கப்படுகிற டூத் பேஸ்ட்டில் உப்பு மிக மிக சன்னமாகப் பொடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும். அதை வைத்து பல் துலக்கும்போது பற்களின் எனாமல் பாதிக்கப்படாது. ஆனால் வீட்டில் நாம் பயன்படுத்தும் டேபிள் சால்ட்கூட பற்களைப் பெரிய அளவில் பாதிக்கும்.  உப்பு வைத்து பல் துலக்குவது வாயை வறட்சியாக்கி, கிருமிகள் பெருக வழிசெய்து, சொத்தையை அதிகரிக்கும்.

கடினமான காரையை பல் மருத்துவரிடம் முறையாக அகற்றிக் கொள்ள வேண்டும். ஸ்கேலிங் என்ற முறையில் இதைச் சுத்தப்படுத்தி நீக்குவார்கள். இந்தச் சிகிச்சையில் பற்கள் தேயாது. ஸ்கேலிங் செய்ததும் பற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதாகத் தெரியும். ஆனால் உண்மையில் காரையை அகற்றியதால் ஏற்பட்ட இடைவெளிதான் அது. தானாகச் சரியாகிவிடும். மீண்டும் மீண்டும் காரை படியாமலிருக்க  வருடம் ஒருமுறை ஸ்கேலிங் செய்து கொள்ளலாம். ஈறுகளின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

பல் சார்ந்த பிரச்னைகள்

அடுத்ததாக ஏர் பாலிஷிங் என்ற முறையில் பற்களின் காரை நீக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. ஸ்கேலிங்கைவிட இந்த முறையை வசதியானதாக உணர்வதாக மக்கள் சொல்கிறார்கள். கறை அதிகமுள்ள பற்களை சுத்தப்படுத்த இது சிறந்த முறை.  எனவே வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய்க் கொப்பளிக்கலாமே தவிர, பல் தேய்க்க உப்பு பயன்படுத்துவது மிகவும் தவறானது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Source link

Related posts

Leave a Comment