புதுமையான பழங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா..

Rare Fruits

பழ மார்க்கெட்டுகளில் புதிய ரக பழங்களை நிறைய பார்க்க முடிகிறது. இவையெல்லாம் என்ன பழங்கள், எங்கிருந்து வருகின்றன, என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன போன்றவற்றை அலசும் சின்ன ஆராய்ச்சி கட்டுரைதான் இது!

டிராகன் ப்ரூட் (Dragon Fruit)

சிவப்பு நிறத்தில் இருக்கும் டிராகன் பழத்தின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. இனிப்பு சுவைகொண்ட இந்தப்பழம் மேற்புறம் கரடு முரடாக பார்ப்பதற்கு அன்னாசிப்பழம் போல் இருந்தாலும் உள்ளே மிருதுவாக சதைப்பற்று மிகுந்து இருக்கும். அதிகமான நீர்ச்சத்துடைய இந்த பழம் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. கொழுப்பைக் குறைக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடல்பருமனை குறைக்க விரும்புபவர் களுக்கு டிராகன் ப்ரூட் ஏற்றது.

ரம்பூட்டான் ப்ரூட் (Rambutan fruit)

வைட்டமின் பி-3 சத்து அதிகம் உள்ள பழம் இது. உடலில் கொழுப்பு அளவைக் குறைத்து, இதயக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கிறது. தலைமுடி, நகம் மற்றும் சருமத்துக்கு மினுமினுப்பைக் கொடுக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடென்டுகளும் மிகுந்துள்ளது. உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் ரம்பூட்டான் பழத்தை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, ஆஸ்துமா நோயையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஜபூடிகாபா ப்ரூட்(Jabuticaba Fruit)

பார்ப்பதற்கு கருப்பு திராட்சையைப் போலவே இருக்கும் இந்தப் பழத்தின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. இதை பிரேசிலியன் திராட்சை என்றும் சொல்வார்கள். வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த பழம், புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கக்கூடியது. புற்றுநோய்க்கு எதிரான மருந்தாக இந்தப்பழத்தின் சாற்றையும் உபயோகிக்கிறார்கள். இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் வயதான தோற்றத்தை தாமதப்படுத்துகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது.

மங்குஸ்தான் ப்ரூட் (Mangosteen fruit)

மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளில் அதிகம் விளையும் பழம் இது. மங்குஸ்தான் பழத்தின் தோல் தடிமனாக இருக்கும். இதை உடைத்தால் சுளைகள் மென்மையாக இருக்கும். மங்குஸ்தான் பழம் வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைப் போக்கும் தன்மை உடையது. வாய் துர்நாற்றத்தை நீக்கவும் சிறந்த மருந்து. உடல் சூட்டைத் தணித்து உடலின் சூட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. இந்த பழத்தின் தோல் பல் வலிக்கும் மருந்தாவதுடன் தொற்று நோய் கிருமிகளையும், பூஞ்சைத் தொற்று களையும் அழிக்கிறது. மனநோய்க்கான மருந்தாகவே சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகிறது.

பெப்பினோ மெலன் (Pepino melon)

இது பார்ப்பதற்கு தர்ப்பூசணி பழத்தைப் போல மேலே கோடுகளோடு, மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். கொலம்பியா, பெரு, சிலி நாடுகளில் அதிகமாக விளைகிறது. இனிப்பு சுவையுடைய பெப்பினோ மெலன் வைட்டமின் ஏ, சி, கே, பி மற்றும் புரதச்சத்துகள் நிறைந்தது. இதில் இருக்கும் கால்சியம் எலும்பு உறுதிக்கும், பொட்டாசியம் ரத்த அழுத்தம் குறைவுக்கும் பயன்படுகிறது. கல்லீரல் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய வெளிநாடுகளில் இந்த பழத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாகவோ, என்னவோ இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது சூப்பர் ப்ரூட்!

ஸ்டார் ப்ரூட் (Star Fruit)

கோல்டன் கிரீன் நிறத்தில் இருக்கும் இந்தப்பழம் இலங்கையில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. திராட்சை மற்றும் ஆப்பிள் போன்று புளிப்பு, இனிப்பு கலந்த சுவையுடையது. ஜெல்லி போன்று வழுவழுப்பாக இருப்பதால் சாலட், ஸ்மூத்தி, ஜூஸ், ஃபலூடா போன்றவற்றில் பயன்படுத்துகிறார்கள். நார்ச்சத்து மிகுந்த இந்தப்பழம் உணவில் உள்ள கெட்ட கொழுப்பு குடலில் சேராமல் தடுக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத் துடிப்பை சீராக்குகிறது. இப்பழத்தின் சாறினை இருமலுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

Related posts