பிரசவ வலி பின்னே வளையல் வலி முன்னே

வளைகாப்பு

சுகப்பிரசவத்தை எதிர்கொள்வதற்காக கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரம்பரியமான விஷயங்களில் அடங்கியுள்ள அர்த்தங்களையும் அவை உடலுக்கும் உள்ளத்துக்கும் உயிரூட்டும் அழகியலையும் இந்த தொகுப்பில் ரசிப்போம்.

“வயித்துப் புள்ளைக்காரிக்கு, இதெல்லாம் கொடுக்கிறது ரொம்ப நல்லது” என்றபடி நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கும் நல் உணவுகளின் பட்டியல் ரொம்பவே நீளம். வாய் அதிகமாக எதிர்பார்க்கும் புளிப்புச் சுவைக்காக, மாங்காய்; குழந்தை நல்ல நிறத்தில் பிறக்கவேண்டும் என்பதற்காக ரோஜா மற்றும் குங்குமப்பூ; உஷ்ணதற்கு இளநீர், பதநீர், சாதம் வடிக்கும்போது கிடைக்கும் கொதிநீரில் சிறிது வெண்ணெய் சேர்த்துக் குடிப்பது; வாயுத்தொல்லை வராமலிருக்க ஒரு ஸ்பூன் அரிசி, சிறிதளவு வெந்தயத்தை அரைத்து வாரத்தில் இரண்டு, மூன்று வேளை குடிப்பது; அஜீரணத்தைப் போக்க பெருஞ்சீரகத்தை வறுத்து , தண்ணீரில் கொதிக்க வைத்து நன்றாக சுண்டியபின் குடிப்பது… இப்படிச் சொல்லிக்கொன்டே போகலாம்.

உணவு விஷயம் மட்டுமல்ல; மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன.

“அம்மா தலையை வலிக்கிற மாதிரி இருக்குது” என்று மகள் சொன்னால் “உடனே போய் குளியல் போடு” என்பார்கள். “முதுகு வலிக்குதும்மா என்று சொன்னால் அப்படித்தாமா இருக்கும் கொஞ்சம் பொறுத்துக்க. வெந்நீர் வைக்கிறேன். முதுகிலேயும், இடுப்பிலேயும் ஊத்திவிட்டு வந்து படு என்பாள் தாய்.

ராத்திரி தூக்கம் வரலைம்மா என்றால் உன் வீட்டுக்காரர் ஆசையாக குங்குமப்பூ வாங்கி வந்திருக்கிறார் இல்லே பால்ல போடு குடி என்பார்கள். இந்தக் குங்குமப்பூ – பால் விஷயம் குழந்தையை சிவப்பாக பிறக்க வைக்கிறதோ , இல்லையோ அஜீரணத்தை போக்கி நல்ல தூக்கத்தை வரவழைக்கும் என்பது உண்மை.

‘கர்ப்பிணி பெண்ணான நீ , அதிக அன்புக்கும், அக்கறைக்கும், கவனுத்துக்குமுரியவள். அழகாகவும் , ஆரோக்கியமாகவும் உன் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும். பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி .. அதை உன் உடல் வலுவுடன் தாங்க வேண்டும்’என்றெல்லாம் மறைமுகமாக அறிவுறுத்தி, சுகப் பிரசவத்துக்கு வழி வகுக்கத்தான் இதயெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்கள். “நல்ல வாரிசை எங்களுக்கு பெற்றுக்கொடு” என்ற அவர்களின் மறைமுக வேண்டுகோளும் அதில் அடக்கம்.

முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம்.

வளைகாப்பு :

வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், “எங்களையெல்லாம் பார்… நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்… தைரியமாக இரு!” என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.

வளைகாப்பு

இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ளே செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே பொறுத்துக் கொண்டால்.. அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு; நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது.பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து போகும்போது அந்த வளையல் சப்தம் அந்தப் பெண் எங்கே செல்கிறாள் என்பதை சுட்டிக்காட்டும். “ஏம்மா என்னை எழுப்பக்கூடாதா .. இரு நானும் வரேன்” என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட கையோடு, கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கியிருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அதை பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்… பிரசவமாகும் பெண்ணின் உடல் நலம் மட்டுமல்ல; மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

இனியெல்லாம் சுகப்பிரசவமே !

Related posts