வயதானவர்களுக்கான உணவுகள்

வயதானவர்களுக்கான உணவுகள்

வயது கூடக் கூட உணவு அளவு குறைகின்றதே என்று நிறைய பேர் கவலைப்படுவதைப் பார்க்கிறோம்.இதைப் பற்றி கவலைப்படாமல் சத்தான உணவை உண்பதே வயதான காலத்தில் மிகவும் நன்மை பயக்கும். முக்கியமாக நாம் உண்ணும் உணவு சத்துள்ளதாகவும், எளிதில் ஜீரணம் அடைவதாகவும் இருக்க வேண்டும். வயதானவர்கள் கீழ்வரும் உணவு முறைகளைப் பின்பற்றலாம்.

புரதச்சத்து

வயதான காலத்தில் முக்கியமாக ஏற்படும் குறைபாடுகளில் ஒன்று சதைச்சிதைவு. இதற்கு முக்கியமான காரணம் புரதச்சத்து குறைவாக உள்ள உணவுகளை உண்பதாகும்.

இதனால் உடல் மெலிந்து காணப்படும். இதை சரி செய்ய புரதச்சத்துள்ள உணவு வகைகளான பருப்பு வகைகளை உண்ணலாம். உதாரணமாக கொண்டைக்கடலை, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது.

நார்ச்சத்து 

வயதான காலத்தில் ஏற்படும் அடுத்த முக்கிய பிரச்சனை மலச்சிக்கல். இதைத் தடுப்பதற்காக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

நார்ச்சத்து தானியங்களில் அதிகமாக இருக்கின்றது. உதாரணமாக தினை, கம்பு, சோளம், ராகி, கொள்ளு ஆகிய தானியங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. இந்தத் தானியங்களை வாரத்தில் குறைந்தது மூன்று முறை சேர்த்துக்கொள்ளலாம்.

வெந்தயம், மிளகாய், கொத்தமல்லி, மிளகு, கொய்யாப்பழம், அத்திப்பழம், மாம்பழம், பேரீச்சம்பழம், பாகற்காய், புடலங்காய், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைத் தண்டு, கீரை, கோதுமை, கேழ்வரகு ஆகியவற்றிலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

நார்ச்சத்து மட்டுமல்லாமல் சுண்ணாம்புச் சத்தும் அதிகமாக இருப்பதால் பல்லையும், எலும்பையும் வலுப்படுத்த இந்த உணவுகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

இந்த உணவுகளிலிருந்து கலோரி சத்தும் அதிகமாக கிடைக்கிறது. இந்த உணவு வகைகள் குடலிலிருந்து சர்க்கரையை மெதுவாக உறிஞ்சுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.இதன் மூலம் சில வகையான புற்று நோய் வராமல் தடுக்கப்படுகிறது. உதாரணம் : குடல் புற்று நோய்

மாவுச்சத்தும், கொழுப்புச்சத்தும் நம் அன்றாடம் உணவில் இட்லி, தோசை, பொங்கல், சாதம் என காலை, மதியம், இரவு மூன்று வேளைகளும் அரிசியையே அதிகமாக உண்ணுகிறோம். மாவுச்சத்து அதிகம் உள்ள அரிசியை முடிந்த அளவுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள கிழங்கு வகைகளை குறைத்தல் நல்லது. ஏன் என்றால் இது எடையை அதிகரிக்கும். இதைப் போலவே கொழுப்புச்சத்து அதிகம் உள்ள எண்ணெய், நெய், வெண்ணெய் போன்ற வகைகளை குறைப்பதும் நல்லது. இதில் புரதச்சத்தோ, சுண்ணாம்புச்சத்தோ சிறிதும் இல்லை. இதுவும் எடையை அதிகரிப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தையும் அதிகரிக்கும். சீனிச்சர்க்கரையை அறவே தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை பயன்படுத்தலாம்.

உப்பின் அளவு அதிகரித்தால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும். உதாரணம்:- உப்பை அளவுக்கு அதிகமாக உண்ணும் சில முதியவர்களுக்கு உயர்ரத்த அழுத்தம் வர வாய்ப்பு உண்டு. ஆகையால், உடலில் எந்த நோய் இல்லாமல் இருந்தாலும் உப்பின் அளவை சிறிது குறைத்து உண்பது நல்லது. உப்பின் அளவை குறைப்பது எப்படி? சற்று குறைவான உப்பையே சமையலுக்கு உபயோகிக்கலாம். முதியவர்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் மேற்கண்ட ஓரு சில மாற்றங்களை தவறாமல் பின்பற்றினாலே நலமுடன் நீண்ட நாள் வாழ்வது உறுதி.

 

Related posts