மழைக்கால மின்கசிவு: காலிங் பெல், ஸ்விட்ச் போர்டு, மின்கம்பி, இடி, மின்னல்… இவற்றை செய்யாதீர்கள்!

மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் அவசியம். எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் தரும் அறிவுறுத்தல்கள் இங்கே…

மழை வெள்ளம்

“எக்காரணம் கொண்டும் உடைந்த சுவிட்சுகள், பிளக் பாயிண்ட்களை பயன்படுத்தாதீர்கள். மேலும், உங்கள் கைகள் ஈரமாக இருக்கும்போது ஸ்விட்ச்சை தொட்டால் கையில் உள்ள தண்ணீர் ஸ்விட்ச் போர்டின் உள்ளே உள்ள உலோகத்தாலான மின்சார பாகத்துக்குச் சென்றுவிடும். தண்ணீர் ஒரு சிறந்த மின்சாரக் கடத்தி என்பதால், மின்சாரம் நம் உடம்பில் பாயலாம். உள்ளே செல்லும் நீரின் அளவைப் பொறுத்து மின்சாரம் நம் மீது பாயும் அளவு தீர்மானிக்கப்படும். எனவே, கைகளில் ஈரம் இருந்தால் அதை உலர்த்திய பின்னரே ஸ்விட்ச்சை தொடவும்.

அலங்கார விளக்குகள் பெரும்பாலும் வீடுகளின் வெளிப்புறம் பொருத்தப்படுகின்றன. அலங்கார விளக்குகளைப் பொறுத்தவரை மதில் சுவரிலோ அல்லது, கதவுகளுக்கு மேலாகவோ இருக்கும்போது மழை நேரத்தில் அவை நிச்சயம் மழையில் நனைவதற்கு வாய்ப்பு அதிகம். இவ்வாறு நனைந்த மின்சாதனங்கள் மூலம் நிச்சயம் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படலாம். எனவே மழை நேரத்தில் வீட்டிற்கு வெளிப்புறம் இருக்கும் அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

மின்சாரம் (Representational Image)

அலங்கார விளக்குகள் போன்று தான் வீட்டின் அழைப்பு மணிகளும். பெரும்பாலும் அழைப்பு மணிகளுக்கான சுவிட்ச்சுகள் கதவுகளுக்கு வெளிப்புறம்தான் பதிக்கப்பட்டு இருக்கும். மழைத்தண்ணீர் இறங்கி சுவிட்ச் நனைந்திருக்கிறது எனில் கூடுமானவரை அழைப்பு மணிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

சுவரின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஆணி அடிப்பது, ஈரத்துணிகளைக் காயவைப்பது போன்ற செயல்பாடுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

மழைக்காலம்

மின்கம்பத்திலோ அல்லது இணைப்புக் கம்பத்திலோ கால்நடைகளைக் கட்டுவது, துணிகளைக் காயவைப்பது, சிறுநீர் கழிப்பது, குழந்தைகளை விளையாட அனுமதிப்பது போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.

மின் கம்பத்திற்கு மிக நெருக்கமாகச் செல்லாதீர்கள். உங்கள் பகுதியில் ஏதேனும் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதுடன் சமூக அக்கறையுடன் செயல்படுவதும் அவசியம். எனவே மின்கம்பிகள் அறுந்துள்ள பகுதியில் சிறிய தடுப்பு வைத்து தடுத்துவிட்டு, உடனே மின்சார வாரியத்திற்குத் தெரியப்படுத்துங்கள். அங்கு நடவடிக்கை எடுக்க தாமதமாகும் பட்சத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம்.

மின்கம்பி

மழைக்காலத்தில் மின்னல் அடிக்கும்போது அது மின்சார இணைப்பு மூலம் நம் வீட்டுக்குள் தீ விபத்தை ஏற்படுத்தலாம். வீட்டின் மின்சார இணைப்புகள் மண்ணுக்கு அடியிலும், வீட்டுக்கு மேலும் இருப்பதால், சுற்றுப்புறத்தில் மின்னல் பாய்ந்தால் அந்த இணைப்புகள் மூலம் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக மின்சாரப் பொருள்களின் இணைப்பைத் துண்டித்து வைப்பது பாதுகாப்பானது.

மழைக்காலத்தில் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக மின்சார இணைப்புகளுக்கு அருகில் இருக்கும் ஜன்னல்கள் மூடியே இருக்க வேண்டும். இல்லையென்றால் மழைச் சாரல் மின்சார இணைப்புக்குள் செல்லும் அபாயம் உள்ளது.

மழை

குழந்தைகளுக்கு மின்சாரத்தின் அபாயம் பற்றி எடுத்துரைக்க வேண்டும். மின் வயர்களின் மேல் மரக்கிளைகள் இருந்தால் அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மின்னல், இடி ஜாக்கிரதை!

இடி இடிக்கும்போது மின்சார சாதனங்களை உபயோகிக்க வேண்டாம்.

இடி இடிக்கும்போது மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம்.

மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகேயும் செல்லக் கூடாது.

அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியின் அருகில் செல்லக் கூடாது.

இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் நிற்காமல் உடனடியாக கான்கிரீட் கட்டடத்தில் தஞ்சம் அடைய வேண்டும்.

சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு

குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது.

இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இடம் இல்லாதபட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.”


Source link

Related posts

Leave a Comment