உஷ்ணத்தைக் குறைக்கும் மண் சிகிச்சை!

Beautiful woman receiving a mud therapy in spa center.

இயற்கை சிகிச்சை முறைகளில், ‘மட் தெரபி’ எனப்படும் மண் சிகிச்சை மிகவும் சிறந்த சிகிச்சை முறைகளில் ஒன்று. பஞ்ச பூதங்களில் நிலத்தைக் குறிப்பதே மண் சிகிச்சை. மண்ணில் நிறைய தாதுக்கள் உள்ளன. உடலில் இதை பூசும் போது, தாதுக்களின் நன்மை முழுமையாக உடலுக்கு கிடைக்கிறது.

குறிப்பாக, உடலில் உள்ள நச்சை வெளியேற்ற, மண் சிகிச்சை உதவும். உடலின் கழுத்து, முதுகு, முகம் என்று எந்த பகுதியில் பூசும் போதும், அந்த இடத்தில் உள்ள தளர்வான தசைகளை இறுக்க உதவுகிறது.

மண் சிகிச்சைக்காக, சிவப்பு நிற மண், கறுப்பு நிற மண், கடல் மண், முல்தானி மண், புற்று மண் என்று பலவகை மண் வகைகள் உள்ளன.

பூமிக்கடியில் 6 – 7 அடி தோண்டி, மண் எடுத்து, பரிசோதனை கூடத்தில், அந்த மண்ணில் எந்த அளவு, என்னென்ன தாதுக்கள் உள்ளன; இது நோயாளிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா என்பதை பரிசோதித்து உறுதி செய்த பின்னரே பயன்படுத்துவோம்.

தேர்வு செய்த மண்ணை, முதல் நாள் நீரில் கலந்து, ஆறு – ஏழு மணி நேரம் ஊற வைத்து, ‘பேஸ்ட்’ போல குழைத்து, அடுத்த நாள் பயன்படுத்துவோம். அரை இஞ்ச் – இரண்டு இஞ்ச் வரை தேவையைப் பொறுத்து, எந்தப் பகுதியில் பிரச்னை உள்ளதோ அங்கு மட்டும் பூசலாம்; உடல் முழுதும் பூசலாம். 20 – 40 நிமிடங்கள் வரை வைக்கலாம்.

குழைத்த மண்ணை, மஸ்லின் துணியில் பரப்பி, கண்கள், வயிறு, கழுத்து என்று ‘மசாஜ்’ செய்வதும் உண்டு. தேவைப்பட்டால், வேம்பு, கற்றாழை, ரோஜா ஊறிய நீர், மூலிகை சாறு கலந்தும் பயன்படுத்தலாம்.

மண் சிகிச்சை செய்யும் போது, ரத்தத்தில் உள்ள ‘கார்ட்டிசால்’ என்ற ஹார்மோனைக் கரைத்து, மன அழுத்தத்தைக் குறைத்து, முழு உடம்பையும், ‘ரிலாக்ஸ்’ செய்கிறது. சர்க்கரை கோளாறு, ஜீரண மண்டல பிரச்னைகள், உடல் பருமன், தோல் வியாதிகள் என்று என்ன மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும், மண் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

Related posts