புதுச்சேரி: “கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்!” – அதிகரிக்கும் காய்ச்சலால் சுகாதாரத்துறை அறிவுரை

காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே அருகிலுள்ள சுகாதார மையத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறது, புதுச்சேரி சுகாதாரத்துறை.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், `கடந்த சில நாள்களாக வட சீனாவிலுள்ள குழந்தைகளிடையே சுவாச நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்திய அரசும் சுவாச நோய் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. புதுச்சேரியில் சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு ஏற்ப, தயார் நிலையில் மருத்துவ வசதிகளை அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. புதுச்சேரியில் பருவகால காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்தாலும், சுவாச நோய்களில் அசாதாரண அதிகரிப்பு இல்லை. பருவகால காய்ச்சல் என்பது பெரும்பாலும் காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இல்லாமலேயே வரும் லேசான சுவாச நோயாகும். நாள்பட்ட நோய் உள்ளவர்கள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், சுவாசத்தில் சிரமம் போன்றவற்றின் அறிகுறிகளால் பாதிக்கப்படுபவர்கள், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தை அணுக வேண்டும். பொதுமக்கள் மத்தியில் தும்மல் மற்றும் இருமல் இருப்பதினால், நெரிசலான இடங்களுக்குச் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணியவதை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு

நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தால், காய்ச்சலைத் தடுக்க முடியும். அரசு பொது மருத்துவமனை, கோரிமேடு சுவாச மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் நோயாளிகளுக்குப் போதுமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. முறையான கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவை தொற்றுநோயைத் தடுக்க உதவும்.

முகக்கவசம்

மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இது போன்ற அறிகுறிகளோடு வருபவர்களுக்கு, சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இயக்குநரகம் செய்திருக்கிறது. இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. பருவகால சுவாச நோய்த்தொற்றுகளைக் கையாள புதுச்சேரி பிராந்தியம் போதுமான அளவு தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Source link

Related posts

Leave a Comment