`தோழிகளுக்குப் பிடிக்கல, எனக்கும் மாப்பிள்ளையப் பிடிக்கல'… திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

“பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு… பூவை தொடுத்து சேலை உடுத்தி பொண்ணும் வந்தாச்சு”… அப்புறம் என்ன கல்யாணம் தான் என்று நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. 

அங்குதான் ட்விஸ்டே இருக்கிறது. பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்களில், திருமணம் செய்து கொள்ளும் ஜோடியைத் தாண்டி அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பிடித்து இருந்தால்தான் திருமணம் நல்லபடியாக நடந்து முடியும்.

நல்ல விஷயத்தை குறித்து பேச்சு எடுத்தாலே அதுவரை இல்லாத சொந்தபந்தங்கள் கூட பத்திரிகை முதல் பந்தி வரை குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். தாலி கட்டும் கடைசி நேரத்தில் கூட `நிறுத்துங்க’ என்று ஸ்லோமோஷனில் யாராவது ஓடிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

marriage call off (Representational image)

`கோபம் அதிகமாக வருகிறது’, `சாப்பாடு சரியில்லை’, `சீர் பத்தவில்லை’, `மாப்பிள்ளை மணமேடையில் குடித்து இருக்கிறார்’ எனப் பல காரணங்களுக்காக இறுதி வரை சென்ற திருமணங்கள் கூட நின்றுள்ளன. 

பல காரணங்களுக்காக திருமணங்கள் நின்றிருந்தாலும், தன்னுடைய `தோழிகளுக்குப் பிடிக்கவில்லை’ என பெண் ஒருவர் தனது திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். 

ராணிப்பேட்டை நெமிலி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த பெயர் குறிப்பிடாத இளம் பெண்ணுக்கும், அவரின் உறவினர் மகனுக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அங்குள்ள கோயிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்க, 27-ம் தேதியன்று கடைக்குச் சென்று வருகிறேன் என்று கூறிச்சென்ற பெண் வீடு திரும்பவே இல்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், மணப்பெண் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். விசாரணையில் தோழிகள் மாப்பிள்ளை சரியில்லை என்று கூறினர். அதனால் எனக்கும் மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

Friends (Representational Image)

குடும்பத்தினரை அழைத்து அப்பெண்ணுடன் பேச்சு வாரத்தை நடத்தியும் திருமணம் செய்து கொள்வதற்கு அப்பெண் உடன்பட மறுத்துவிட்டார். `பெற்றோர் பார்க்கும் வேறொரு மாப்பிள்ளையை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்கிறேன்; இவர் வேண்டாம்’ என்று விடாப்பிடியாக இருந்து விட்டார்.

தோழிகளுக்குப் பிடிக்கவில்லை என்பதால் தனக்கு மணமகனைப் பிடிக்கவில்லை என பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் மக்களிடையே கவனம் பெற்று வருகிறது.

திருமணங்கள் இறுதி வரை சென்று கடைசியில் நின்றுபோவது குறித்து உங்களின் கருத்தென்ன?!… கமென்ட்டில் சொல்லுங்கள்!


Source link

Related posts

Leave a Comment