டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் எப்படி இருக்கும்..? சிகிச்சை முறையும்.. பாதுகாப்பு வழிமுறைகளும்.!

டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவி வருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் இந்த டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்கள் தான் சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டெங்கு வைரஸ் தொற்று சிலருக்கு அறிகுறிகள் இல்லாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் சிலர் கடுமையான காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகிறது. அதாவது டெங்கு பாதித்தால் கடுமையான இரத்தப்போக்கு, பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது, உடல் உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அறிகுறிகள் தோன்றியவுடனேயே மருத்துவரை அணுகுவது நல்லது, தவறும்பட்சத்தில் இறப்புகள் ஏற்படும் அபாயம் கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தில் டெங்கு தொற்றுநோய்களின் போது கடுமையான பாதிப்புகள் முதலில் கண்டறியப்பட்டது. இன்று பெரும்பாலான ஆசிய மற்றும் லத்தீன், அமெரிக்க நாடுகளிலும் டெங்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை உயிரிழப்பு ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமிகள் டெங்கு1, டெங்கு 2, டெங்கு 3, டெங்கு 4 என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த நான்கு வைரஸ்கள் ’செரோடைப்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், வகை ஒவ்வொன்றும் மனித இரத்த சீரம் உள்ள ஆன்டிபாடிகளுடன் வெவ்வேறு தொடர்புகளைக் கொண்டுள்ளன. இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஒவ்வொன்றும் ஒரே வகையான நோய் மற்றும் அறிகுறிகளை தரக்கூடியவை. டெங்கு மனித ஆரோக்கியத்தை மட்டுமின்றி உலகளாவிய மற்றும் தேசிய பொருளாதாரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உலகளாவிய டெங்கு பாதிப்பு :

உலகம் முழுவதும் டெங்கு வைரஸ் பரவல் வியத்தகு அளவில் வளர்ந்துள்ளது. பெரும்பாலான பாதிப்புகள் அறிகுறியற்றவை அல்லது லேசான அறிகுறிகள் உள்ளவை டெங்கு பாதிப்பு என கணக்கில் வரவில்லை. எனவே டெங்கு பாதித்தவர்களின் உண்மையான எண்ணிக்கை குறைவாகவே பதிவாகியுள்ளது. பலருக்கு இது சாதாரண காய்ச்சல் என பதியப்பட்டுள்ளது.

ஆனால் ஆய்வின்படி ஒரு வருடத்திற்கு 390 மில்லியன் மக்கள் டெங்கு வைரசால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 96 மில்லியன் (67-136 மில்லியனாகவும் இருக்கலாம்) மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு பரவல் குறித்த மற்றொரு ஆய்வில் 3.9 பில்லியன் மக்கள் டெங்கு வைரஸ்களால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.

129 நாடுகளில் தொற்றுநோய்க்கான ஆபத்து இருந்தபோதிலும் அதில் 70% வரை ஆசியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு தசாப்தங்களில் WHOல் பதிவான டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 8 மடங்கு அதிகரித்துள்ளது, 2000ல் 505,430 பாதிப்புகள் இருந்த நிலையில் 2010ல் 2.4 மில்லியனாகவும், 2019ல் 5.2 மில்லியனாகவும் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு உலக நாடுகளுக்கு WHO அறிவுறுத்தி வருகிறது.

டெங்கு பரவல் :

1970ம் ஆண்டுக்கு முன்னர் 9 நாடுகள் மட்டுமே கடுமையான டெங்கு தொற்றுநோய் பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது டெங்கு வைரஸ் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவுகிறது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் என பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே கடந்த 2020ம் ஆண்டில் டெங்கு வைரஸ் மேலும் பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பங்களாதேஷ், பிரேசில், குக் தீவுகள், ஈக்வடார், இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, மொரிடானியா, மயோட், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, சூடான், தாய்லாந்து, திமோர்-லெஸ்டே மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் அடங்கும். 2021ம் ஆண்டில் பிரேசில், குக் தீவுகள், கொலம்பியா, பிஜி, கென்யா, பராகுவே, பெரு மற்றும் ரியூனியன் தீவு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவியுள்ளது.

COVID-19 தொற்றுநோய் உலகளாவில் பல்வேறு பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த முக்கியமான காலகட்டத்தில் டெங்கு உள்ளிட்ட பிற வைரஸ் பரவல் தீவிரத்தை அதிகரிக்கிறது. எனவே தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து , வைரஸ் பரவலை தடுப்பதற்கும், கண்டறிந்து கிச்சையளிப்பதன் முக்கியத்துவத்தை WHO வலியுறுத்தியுள்ளது.

டெங்கு பரவும் விதம் :

* கொசு – மனிதன் :

டெங்கு பொதுவாக கொசு மூலமே பரவுகிறது. ”ஏடிஸ் அல்போபிக்டஸ்” வகை கொசுக்கள் மட்டுமே டெங்கு காய்ச்சலை பரப்புவதற்கு முக்கியமான காரணம். இந்த வகையான கொசு கழிவுநீரில் உருவாவதில்லை. மாறாக சுத்தமான நீரிலிருந்து மட்டுமே இவை உருவாகின்றன.

* மனிதன் – கொசு :

டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடிக்கும் கொசு, மற்றொருவரை கடிப்பதால் அவருக்கும் டெங்கு பரவுகிறது. குறிப்பாக டெங்கு கொசு பகலில் தான் மனிதர்களை கடிக்கும் என்பதால் கொசுக்கள் கடிக்காதவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

* பிற வகை பரவல் :

கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் அது பிறக்கும் குழந்தைக்கும் வர வாய்ப்புகள் உள்ளது. ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும்போது DENV நோய்த்தொற்று ஏற்பட்டால், குழந்தைகள் முன்கூட்டிய பிறப்பு, எடை குறைவாக பிறப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

டெங்கு அறிகுறிகள் :

டெங்கு கடுமையான காய்ச்சல் போன்ற நோயாகும். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கிறது, மேலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்சத்தில் உயிரிழப்புகளை கூட ஏற்படுத்துகிறது. டெங்கு அறிகுறிகள் பொதுவாக 2-7 நாட்கள் நீடிக்கும், 4-10 நாட்களுக்கு பிறகு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Also Read | கோடைக்காலத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க சிரமாமக உள்ளதா..? இதை ஃபாலோ பண்ணி பாருங்க..!

டெங்குவின் அறிகுறிகள் லேசான மற்றும் கடுமையான அறிகுறிகள் என வகைப்படுத்தப்படுகிறது. இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது டெங்கு நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கும், நெருக்கமான கண்காணிப்பை உறுதி செய்வதற்கும், மேலும் கடுமையான டெங்குவை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதற்கும் உதவும்.

லேசான அறிகுறிகள் :

* அதிக காய்ச்சல் (40 ° C/104 ° F)

* கடுமையான தலைவலி

* கண்களுக்கு பின்னால் வலி

* தசை மற்றும் மூட்டு வலிகள்

* குமட்டல்

* வாந்தி

* சொறி

கடுமையான டெங்கு அறிகுறிகள் :

நோய் தொற்று உருவாகிய 3-7 நாட்களுக்கு பிறகு நோயாளி முக்கிய கட்டத்தை நெருங்குகிறார். இந்த நேரத்தில் நோயாளிக்கு காய்ச்சல் குறைந்து கடுமையான டெங்குவோடு தொடர்புடைய எச்சரிக்கை அறிகுறிகள் வெளிப்படும். பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது, சுவாசக் கோளாறு, கடுமையான இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் :

*கடுமையான வயிற்று வலி

*தொடர்ச்சியான வாந்தி

* மூச்சு திணறல்

* ஈறுகளில் இரத்தப்போக்கு

* சோர்வு

* வாந்தியில் இரத்தம்

முக்கியமான கட்டத்தில் நோயாளிகள் இந்த அறிகுறிகளை வெளிப்படுத்தினால், அடுத்த 24-48 மணிநேரங்களுக்கு மிகவும் அதிகமான கண்காணிப்பு அவசியம், மேலும் உயிரிழப்பு அபாயத்தை தவிர்ப்பதற்கு முறையான மருத்துவ பராமரிப்பு வழங்க வேண்டியதும் அவசியம்.

டெங்கு பரிசோதனைகள் :

DENV நோய்த்தொற்றை கண்டறிய பல முறைகள் பயன்படுத்தப்படலாம். இவற்றில் வைராலஜிக்கல் சோதனைகள் மற்றும் செரோலாஜிக்கல் சோதனைகள் ஆகியவை அடங்கும். ஆரம்ப அறிகுறிகள் அனைத்தும் வைரஸ் காய்ச்சல்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால் உடனே நோயை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2 அல்லது 3 நாள்கள் தொடர்ந்து செய்து கொள்ளவேண்டும்.

சிகிச்சை :

டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த அசெட்டமினோபன் அல்லது பாராசிட்டமால் (Paracetomol) மாத்திரையும், உடல் வலியைப் போக்க உதவும் வலி நிவாரணி மாத்திரைகளும் தரப்படும். இப்யூபுரூஃபன் மற்றும் ஆஸ்பிரின் போன்ற NSAID-கள் (ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்) தவிர்க்கப்பட வேண்டும். சிலருக்கு மட்டுமே `அதிர்ச்சி நிலை’ (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும்.

Also Read | Autoimmune disorder : ஆட்டோ இம்யூன் கோளாறு என்றால் என்ன..? அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

வைரஸ் பாதிப்பால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவரும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்பட வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலைப் பாதுகாப்புக்குள் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகிவிட்டதா என்று அறியலாம். கடுமையான டெங்கு சிகிச்சைக்கு நோயாளியின் உடல் திரவ அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். டெங்கு நோயாளிகள் எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தால் விரைவில் சரியாகும்.

டெங்கு தடுப்பூசி :

கடந்த 2015ம் ஆண்டு சனோஃபி எனும் மருந்து நிறுவனத்தின் தடுப்பூசி பிரிவான “சனோஃபிபாஸ்டியர்”, டெங்கு நோய்க்கு தீர்வு கண்டுள்ளது. இந்நிறுவனம் “டெங்வேக்ஸியா” எனும் தடுப்பூசியை கண்டுபிடித்து, அதனை முதன்முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. 9 முதல் 45 வயது வரையுள்ள அனைத்து வயதுடையோரை தாக்கும் 4 வகையான டெங்கு நோய்களுக்கும் இந்த தடுப்பூசி மூலம் தீர்வு காணலாம் என அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment