கோடையை சமாளிக்க

summer-tips

கொளுத்தும் வெயில், ஒவ்வொரு நாளும் உஷ்ணம் தாங்க முடியாமல், நம்மில் பலருக்கு சோர்வு, எரிச்சல், தலைவலி, மயக்கம், தசைபிடிப்பு, சிறுநீரக தொற்று போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு, ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வந்து, பாடாய் படுத்தும். வெயில் காலத்திற்கே உரிய இந்த கொடும் பிரச்னைகள் நம்மை தாக்காமல் இருக்க, சில எளிய வழிகளை சொல்கின்றனர், இயற்கை நல மருத்துவர்கள்.(summer tips)


கோடையில், காலையில் எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். இதனால், உடல் உஷ்ணம் குறையும். உடனே, வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். உடம்பும் சூடு தணிந்து, குளிர்ச்சியாக துவங்கும்.
மற்ற பருவத்தில், நாள் ஒன்றுக்கு, எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால், கோடையில், 12 டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். உடல் ஈரப்பதம் குறைந்து, வறண்டு போகாமல் இருக்கும்.

இயல்பாகவே உடல் சூடு அதிகமுள்ளோர், மோரில் அரை தேக்கரண்டி வெந்தயத்தை இரவே ஊற வைத்து, காலையில் பருகலாம்.
இந்த பருவத்தில் ஒருநாளைக்கு, இரண்டு முறை, ‘ஷவர் பாத்’ எடுக்கலாம். மொத்த உடம்பும் குளிர்ச்சி அடையும். தலைவலி பிரச்னை இருப்போர், உடல் உஷ்ணத்திற்காக இருமுறை குளிக்கலாம்;

பருத்தி ஆடைகளையே அணியலாம். முடிந்த அளவு வெளியில் சுற்றுவதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாமல், வெளியில் செல்லும்போது, தொப்பி, ‘சன் கிளாஸ், ஸ்கார்ப்’ என்று, பாதுகாப்பாக போகலாம்.

கோடையில், ‘பெர்பியூமை’ உபயோகிக்காதீர். ஜவ்வாது, பன்னீர் மாதிரியான இயற்கை வாசனை பொருட்களுக்கு மாறி விடுங்கள். சருமத்தில், ‘பெர்பியூம்’ பட்டால், தோல் கறுத்து விடும்.

சர்க்கரை போடாத, ‘ப்ரெஷ் ஜூஸ்‘ அல்லது தினம் ஒரு இளநீர் குடிக்கலாம்; சூடு தணியும். பாட்டில் குளிர்பானங்கள் வேண்டவே வேண்டாம். அதிலுள்ள அதிகப்படியான சர்க்கரை, உடம்பு சூட்டை இன்னும் அதிகரிக்கும்.

முடிந்த வரை, அசைவ உணவை தவிர்க்கலாம்; மசாலா பொருட்களுக்கு நாக்கு ஆசைப்பட்டால், மிளகு, சீரகம் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன், ‘ப்ரிஜ்’ஜில் வைத்த குடிநீரை தேடாதீர். அதற்கு பதிலாக, எலுமிச்சை சாறு குடித்தால், வியர்வையால் இழந்த தாது உப்புகளை மீண்டும் பெற்று விடலாம்.

கோடையில், மதிய உணவில், கட்டாயம் மோர் இருக்கட்டும். இது, வியர்வையால் இழந்த தாது உப்புகளை மீட்டு தரும்.

தினமும் தலைக்கு எண்ணெய் தேயுங்கள். ‘அய்யோ, முகத்தில் எண்ணெய் வழியுமே…’ என்பவர்கள், இரவே, ஒரு தேக்கரண்டி எண்ணெயை உச்சந்தலையில் வைத்து, படுத்து விடுங்கள். உச்சந்தலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இதுவும் முடியாது என்பவர்கள், ஒருநாள் விட்டு ஒருநாளாவது, தலைக்கு, நல்லெண்ணை வைத்து குளியுங்கள்.

உச்சந்தலை போலவே, பாதமும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அதனால், ‘லெதர்’ மற்றும் ‘பைபர்’ செருப்புகளை, ‘ஷெல்பில்’ பத்திரப்படுத்தி, தரமான ரப்பர் செருப்புகளுக்கு மாறுங்கள்.

சூட்டினால் வயிற்று வலி வந்தால், சிறிதளவு புளியை கரைத்து, அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து குடித்தால், சூட்டு வலி உடனே சரியாகும்.

Related posts