“இது பேய் நோய்… 5 வயசுல செத்துருவான்னு நினைச்சோம்… ஆனா…!'' நம்பிக்கை அளித்த நல்நிகழ்வு!

ஹெச்.ஐ.வி தொற்று மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருப்பதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இயல்பாக வாழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான நிலை இல்லை. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் சொந்த குடும்பத்தாலேயே ஒதுக்கிவைக்கப்பட்டனர். குறிப்பாக ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. அப்படியான குழந்தைகளின் நல வாழ்வுக்காக 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது மருத்துவர் மனோரமா சென்னையில் நிர்வகித்து வரும் கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டி Community Health Education Society (CHES) என்கிற அமைப்பு. இந்த அமைப்பின் முன்னாள் மாணவர்களின் முதல் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

ஹெச்.ஐ.வி

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தையாக இந்த அமைப்புக்குள் வந்த பலர், அந்த நோயை எதிர்த்துப் போராடி இன்று நல்ல நிலையில் இருப்பதை அங்கு காண முடிந்தது. பலருக்கும் நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கக்கூடிய வகையில் இருந்த அந்த நிகழ்வில் பேசிய செஸ் (CHES) அமைப்பின் நிறுவனரான டாக்டர் மனோரமா, “1993-ம் ஆண்டு நான் சென்னையில், சிறுவர் நலன் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அப்போது ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 4 வயது பெண் குழந்தையும், 3 வயது ஆண் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். விசாரித்தபோதுதான் அந்தக் குழந்தைகள் ஆதரவற்ற இல்லத்திலிருந்து வந்திருப்பது தெரிந்தது. அது, ஹெச்.ஐ.வி பற்றி பல தவறான நம்பிக்கைகள் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்த காலம். பலரும் அதை ‘பேய் நோய்’ என்று கருதினார்கள். ஆகையால், பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தைகளின் அதிகபட்ச ஆயுட்காலம் 5 ஆண்டுகள்தான் என்று பலரும் நினைத்தனர்.

இரு குழந்தைகளும் மனதளவிலும் உடலளவிலும் பெரிய பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். 3 வயது ஆண் குழந்தையின் தாய் வாய் பேச முடியாத, காது கேளாத சூழலில், கூட்டுப் பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துவிட்டார். அதனால், அச்சிறுவனும் காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் இருக்கிறான் என்று நினைத்தோம். பெண் குழந்தைக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.

அவ்விரு குழந்தைகளையும் மருத்துவமனையில் அனுமதித்த சம்பந்தப்பட்ட ஆதரவற்றோர் இல்லம், அவர்களை அதற்கடுத்து பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு யாரும் இல்லாத சூழலில், அவர்கள் எங்கே போவார்கள்? யார் அவர்களைப் பராமரிப்பார்கள் என்பது விடைதெரியாத கேள்வியாக இருந்தது. அப்போதுதான் நாம் ஏன் அதைச் செய்யக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.

என் முடிவுக்கு குடும்பத்திலிருந்தும், சுற்றுவட்டாரத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், என் முடிவிலிருந்து நான் பின்வாங்கவில்லை. அக்குழந்தைகள் உயிருடன் இருக்கும் வரை நாமே பராமரித்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். முதலில் இந்தக் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு சற்று சிரமமாக இருந்தது. அதற்கு உதவியவர் ராஜம்மா என்பவர்தான். அவர்தான் இக்குழந்தைகளுக்கு முதல் ஆயாவாக பராமரித்துக்கொண்டார். இந்தத் தருணத்தில் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

ஹெச்.ஐ.வி

குழந்தைகளை தொடுவதற்குகே நாங்கள் பயந்துகொண்டிருந்த நிலையில், `அதெல்லாம் ஒண்ணும் செய்யாது’ என்று தைரியத்துடன் ராஜம்மாதான் அவர்களை கவனித்துக்கொண்டார். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டாலோ அல்லது அவர்களுடன் சேர்ந்திருந்தாலோ, அத்தொற்று நமக்கும் பரவிவிடும் என்பது பொய் என்பதை எங்களுக்குப் புரிய வைத்தவர் ராஜம்மாதான்.

ஒருகட்டத்தில் இதுபோன்று இன்னும் பல குழந்தைகள் இருப்பார்கள் அல்லவா… அவர்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. அப்போது எனக்கு உதவியாக இருந்த தோழி சொன்ன ஆலோசனையில்தான் இந்த CHES அமைப்பு உருவானது.” என்கிறார் டாக்டர் மனோரமா.

3 வயதில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தை, வளர்ந்து தற்போது 32 வயதில், தன் மனைவி மற்றும் குழந்தையுடன் நலமாக இருக்கிறார் என்று சொல்லும்போது அனைவர் முகத்திலும் நம்பிக்கை சுடர்விட்டது. 5 வயதுக்கு மேல் வாழ வாய்ப்பில்லை என்று நம்பப்பட்ட அந்தக் குழந்தை மட்டுமல்ல, அதுபோல பல குழந்தைகளை அரவணைத்து படிக்க வைத்து ஆளாக்கியிருக்கின்றனர். அவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

கல்வி குறித்து டாக்டர் மனோரமா பேசியபோது “என்னுடைய 3 வயது மகன் பள்ளிக்குச் செல்லும்போது, அதே வயதுடைய சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. மேலும், இவர்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயன்றபோது, இவர்கள் பள்ளிகளில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டனர். அதனால் நாங்கள் எங்கள் அமைப்பிலேயே இவர்களுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினோம்.

ஆரம்பத்தில், பள்ளி பாடப் புத்தகங்களை வாங்கி இந்த அமைப்பில் இருக்கக்கூடிய ஊழியர்களே பாடம் கற்பிக்க ஆரம்பித்தோம். இப்போது CHES அமைப்பில் இருக்கக் கூடிய பள்ளியை சர்வ சிக்க்ஷா அபியான் (SSA) எனப்படும் மத்திய நிறுவனத்தால் ‘சிறப்பு பள்ளி’ (Special School) என்று அங்கீகரித்துள்ளது. 8- ஆம் வகுப்பு வரை இங்கு கற்பிக்கப்படுகிறது” என்று சொன்ன டாக்டர் மனோரமா, அங்கு முதலில் படித்த மாணவர்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

டாக்டர் மனோரமா

முக்கியமாக CHES அமைப்பில் வளர்ந்தவர்களுக்கு தற்போது ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்பது குறித்தும் அதனை சரிசெய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அரசு போட்டித் தேர்வுகளுக்காக முயலும் ஒருவர், தமிழ்வழிக் கல்வி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருக்கிறது என்றார் பொறியியல் படித்து முடித்த ஒருவர் தன் பிறப்புச் சான்றிதழ் வாங்க முடியவில்லை. அதனால் மேற்கொண்டு வேலைகளுக்கு தன்னால் பதிவு செய்ய இயலவில்லை என்றார்.

கல்லூரி படிப்பை முடித்துள்ள 20- வயது பெண், என் தந்தையின் பெயர் பள்ளிச் சான்றிதழில் தவறாகப் பதிவாகியுள்ளது. சாதி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்றார். இந்தப் பிரச்னைகளை சரிசெய்ய உதவுவதாக அந்த அமைப்பினர் நம்பிக்கை அளித்தனர்.

இறுதியாக இந்நிகழ்வில் தனது கோரிக்கை ஒன்றை முன்வைத்தார் டாக்டர் மனோரமா “இவர்கள் அனைவரையும் நாங்கள் பள்ளிப் படிப்பை முடித்து மீண்டும் உறவினர்களிடம் சேர்க்கும்போது, இவர்களின் பெயரையும் தங்களது குடும்ப அட்டையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களை தனி நபராகப் பார்க்காமல், தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருத வேண்டும்” என்றவர், அரசு பல சலுகைகள் வழங்கினாலும், இவர்களில் சிலருக்கு அவை முழுமையாகக் கிடைப்பதில்லை. எனவே இவர்களுக்கான சலுகைகள் சரியாகக் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.


Source link

Related posts

Leave a Comment