ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் கதை

ஆண்டாள்

அன்று கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம்
சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள். பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கொத்திக்கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி “கோதை” என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை, நாய்ச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும் அழைக்கப்பட்ட ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

விஷ்ணு சித்தர் கோதைக்கு வட பெருங் கோயிலுடையான் பெருமையும் வைணவ தர்ம சாராம்சமும் சொல்லி வளர்த்தார். ஆண்டாளும் , துளசி இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார் எம்பெருமானுக்குக் கட்டிய மாலையைச் சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய தோற்றம் கண்டு “நான் அவனுக்கு இணையோ? இல்லையோ?” என்று
எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று தோன்றினால் தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும் முன் மாலையைக் கழற்றி மீண்டும் பந்தாகச் சுருட்டி வைப்பாள். இப்படிப் பல நாள் நடந்தது.

ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதையை சூடிய மாலையோடு பார்க்க
நேர்ந்தது. அவர் மிகவும் மனம் வருந்தி “இப்படிச் செய்யலாமா?
எம்பிரான் மாலையை நீ சூடலாமா?” என்று கோபத்துடன் கேட்டார். அவர் அன்று அம்மாலையை எம்பிரானுக்குச் சாத்தவில்லை. அன்றிரவு எம்பெருமான் ஆழ்வார் கனவில் தோன்றி “இன்று நமக்கு மாலை சாத்தாதது ஏன்?” என்றார். ஆழ்வார் தன் மகள் அதைச் சூடிய தவறைச் சொல்லி மன்னிக்க வேண்டினார். இறைவனோ “அவள் சூடிய மாலையே நல்ல மணமுடையதும் நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்” என அறிவித்தார். பெரியாழ்வார் அன்று முதல் ஆண்டாளைப் பூமிப் பிராட்டியாகவே கருதலானார். சூடிக் கொடுத்த நாய்ச்சியாரும் மார்கழி நீராடி, மாதவனை எண்ணி நோன்பு நோற்று, திருப்பாவை, நாய்ச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாடி அருளினார்.

மணப்பருவம் எய்திய ஆண்டாள் ”மானிடவர்க் கென்றுப் பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன் மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறுவதைக் கேட்டு மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு “நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார். அவர்கள் குண நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்கு இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கிப் பாண்டி மண்டலம், தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத் திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர்,
திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார். இவற்றுள் அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக் காணலானாள்.

ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார்.
அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி “கவலை வேண்டாம் .கோதையை திருவரங்கத்துத் திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவளையே கைத்தலம் பற்றுவோம்.” என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.

ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரத்தினர் அனைவரும் , எம்பிரானின் சத்திரம் சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப் பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச் சொன்னார்கள். ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில் உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார். ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் , ஆண்டாளைப் பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள், சுரும்பார்க் குழற்கோதை வந்தாள், திருப்பாவை பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.”
ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை
அடைந்தனர்.

அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற்  பரிவாரமும் பார்த்திருக்கப் பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.
ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால் சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீது கால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள். அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப் பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில் உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

Related posts