ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்கள்

Temples In Erode District

பாரியூர் அம்மன் கோவில்

இங்கு உள்ள பல முக்கிய கோவில்களில் சிறப்பானது, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் ஆகும். கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் சவண்டப்பூர் மற்றும் கூகலூர் வழியாக அந்தியூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபணீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் விசேஷம் வாய்ந்தவை. மேலும் இது பாரி வள்ளலால் போற்ற பெற்ற தலமாகும். அம்மன் தங்க தேரில் தினமும் உலா வந்து காட்சி அளிப்பார். இங்கு மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். மூன்று வாரங்கள் நடைபெறும் இந்த திரு விழாவில் கலந்து கொள்ள லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம்.

பச்சைமலை மற்றும் பவளமலை

முருகப்பெருமான் கோவில்களான பச்சைமலை மற்றும் பவளமலை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை மற்றும் சாலை வசதிகளும் உண்டு. தைப்பூசத் திருவிழா மற்றும் பங்குனி உத்திரம் இங்கு நடைபெறும் பெரிய திருவிழாக்கள் ஆகும். பச்சைமலையில் தங்க தேர் மற்றும் பெரிய முருகர் சிலை ஆகியவை கவனத்தை ஈர்க்க கூடியவை.

பண்ணாரி

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் துண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தின் அடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.

பவானி முக்கூடல்

காவிரியும், பவானியும் கலக்கும் இடத்திற்கு தட்சிண பிரயாகை (தென்னாட்டு பிரயாகை) என்று பெயர். வடநாட்டில், கங்கையும் யமுனையும் பிரயாகை என்ற இடத்தில் கூடும்போது சரஸ்வதி அடியில் வந்து கலப்பது போல, இங்கு அமுதநதி அடியில் வந்து கலப்பதாக ஐதீகம். இரண்டு நதிகளும் கூடும் இடத்தில் சங்கமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் ஈரோட்டிலிருந்து 12 கி.மீ. துரத்தில் இருக்கிறது. தேவார காலத்தில் இவ்வூரை திருநணா என்றுஅழைக்கப்பட்டிருப்பதை சம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்.இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரேதான் கொடிமரம், பலிபீடம்,விளக்கேற்றும் கற்துண் ஆகியவையெல்லாம் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. கூடுதுறையிலே ஒரு தீர்த்தக் கட்டம் உள்ளது. இதனை ‘காயத்திரிமடு’ என்றும் கூறுகின்றனர். இதன் கரையில் காயத்திரி லிங்கம், அமுதலிங்கம் என்று இருக்கின்றன. திருக்கோவிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது.தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணலாம். இக்கோவில் தற்போது புதிய திருப்பணியைக் கண்டுள்ளது. இங்கு மகாமண்டபம், இப்பகுதிகளை ஆண்ட இம்மடி கெட்டி முதலியார் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்கது.இக்கோவிலுள்ளே பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உண்டு.

சென்னிமலைக் கோவில்

சென்னிமலைக்கு போவதற்கு ஈரோட்டிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னிமலையின் அடிவாரத்தில் ஊர் உள்ளது. ஊரின் பெயரும் சென்னிமலைதான். சென்னிமலை அடுக்கடுக்காக உயர்ந்து செல்கிறது. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை உண்டு. அடிவாரத்தில் காவல் தெய்வமாக இடும்பன் காட்சி யளிக்கின்றார். இம்மலைத் தலத்தில் சில தீர்த்தங்கள் உள்ளன. மலையின் தென்மேற்குச் சரிவில் மாமங்க தீர்த்தம் உள்ளது. மற்றும் காணாச்சுனை என்னும் தீர்த்தமும், சுப்பிரமணிய தீர்த்தமும் உள்ளன. மலையின் வடபக்கத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. சுப்பிரமணிய தீர்த்தத்திலிருந்து குழாய்கள் மூலம் மலையுச்சி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலை கடல் மட்டத்திலிருந்து 1279 அடி உயரத்தில் உள்ளது. எனவே களைப்பாறிச் செல்ல மண்டபங்கள் இருக்கின்றன. திருக்கோபுரவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. முருகக் கடவுளின் பெயர்: சென்னிமலை நாதர்; மூலவருக்கருகிலேயே மார்க்கண்டேசுவரரும், இமயவல்லியும் உள்ளனர். அருகிலேயே வள்ளி, தெய்வானைக்குத் தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை ‘அகத்தியர்’ என்கின்றனர். இக்கோவிலின் மகாமண்டபத் தூண்களில் 7ஆம் நுற்றாண்டில் திருப்பணி செய்த முத்துவசவய்யன் மற்றும் மைசூர்மன்னர் தேவராச உடையார், மனைவி ஆகியோர் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் ஒரு குகை காணப்படுகிறது. அதன் அருகில் சமாதி ஒன்றும் காணப்படுகிறது. இக்குகையை ‘சன்னியாசி குகை’ என்று மக்கள் அழைக்கின்றனர்.

சிவன் மலைக் கோவில்

காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் சிவன்மலை அமைந்துள்ளது. இம்மலையைப் பொதுமக்கள் வலம் வருவது உண்டு. பாதி வழியில் பரமேஸ்வரன் கோவிலும் உண்டு. இங்கு அனுமார் சந்நிதியும் உண்டு. மலையில் படிக்கட்டுகள் உண்டு. இளைப்பாறும் மண்டபமும் காணப்படுகிறது. மலைமீது குமரனுக்கும் தனிக் கோவில் காணப்படுகிறது. தொட்டில் மரம் அருகே நஞ்சுண்டேசுவரரும், பர்வதவர்த்தியும் காட்சி தருகின்றனர். திருச்சந்நிதியில் முருகப்பெருமான், வள்ளி நாச்சியாரோடு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளார். தைப்பூசத் திருவிழா – இங்கு நடைபெறும் பெரிய திருவிழா ஆகும். இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 04-07-2014 அன்று நடைபெற்றது. இதற்கு ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன.

தொண்டீசுவரக் கோவில்

ஈரோடு நகரத்திலே உள்ளது. மூலவர் திருநாமம் ஈரோடையப்பர். இறைவி: வாரணியம்மை. 12-ஆம் நுற்றாண்டில் கொங்குச் சோழன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூவர் நாயன் மார்களுக்கும் மண்டபம் அமைந்துள்ளது. 63க்கும் சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய குலம், நட்சத்திரம், காலம், ஊர், பெயர் விவரங்களில் தனித்தனியே எழுதப்பட்டுள்ளன. தட்சிணா மூர்த்தி சிலை காணத்தக்கது. பஞ்சபூத தலங்களின் சித்திரங்கள் அழகு மிளிர வரையப் பெற்றுள்ளன. இதில் தெய்வயானையுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார். கருவறையிலுள்ள சிவலிங்கத்தை, கதிரவன் மாசி மாதத்தில் 25,26,27 நாட்களில் தன் ஒளிக்கரத்தால் திருமேனியைத் தொட்டுப் பார்க்கிறான். வன்னிமரத்தின் அடியில் வாரணியம்மையின் பழைய உரு காணப்படுகிறது. வைகாசி விசாகத்தில் இறைவனுக்கு பத்து நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவில் திருமுறை விழா, திருவாசக விழாவும் நடைபெறுகின்றன.

மகிமாலீசுவரர் கோவில்

பல்லவர் காலக் கோவில். மகிமாலீசுவரர் கோவில். இது நகரின் நடுவேயுள்ள பழைய மருத்துவமனையையொட்டி உள்ளது. ஆறடி விட்டமுள்ள ஆவுடையாரில் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கம் பெரிய அளவில் காட்சியளிக்கிறது. வாயிற்காப்போர் சிலையும், கோபுரமும் பல்லவர் காலத்தவையேயாகும். துண் ஒன்றில் சுந்தரர் தாடியுடன் பரவை, சங்கிலியாருடன் காட்சியளிக்கிறார். இவருக்குச் சேரமான் கவரி வீசுகிறார். அருகில் மெய்க்காவலர் வில்லேந்தி நிற்கிறான்.

கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோவில்

ஈரோட்டிலே கஸ்தூரி ரங்கப்பெருமாள் கோவில் உள்ளது. கோபுரம் இல்லை. திருமாலின் பள்ளி கொண்ட கோலத்தை சிற்ப உருவில் வடித்துள்ளனர். இங்கு திருவேங்கடமுடையான் திருச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி நிலைப்படியில் தயாகு சாத்தன் சேவித்த நினைவு எனப் பொறிக்கப்பட்டுள்ளது. தாயாரின் திருநாமமே கமலவல்லி நாச்சியார். மூலவரும், உச்சவரும் அருகருகே உள்ளனர். இந்த திருக்கோலத்தில் நாற்கரங்களுடன் உள்ளது. பிரகாரத்தில் விஸ்வத்சேனர் திருப்பாதம் உள்ளது. ஆழ்வார்கள் மண்டபம் காணப்படுகிறது. அனுமார் சந்நிதி உள்ளது. 4 அடி குங்கிலியத்தால் அழகு செய்யப்பட்டுள்ளது. மூலவர் 14 அடி இருப்பார். பள்ளி கொண்ட நாதர்தான் கஸ்தூரி ரங்கப் பெருமாள். வைகாசி விசாகத்தையொட்டி பிரம்மோச்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோவில் மண்டபங்களை 150 ஆண்டுக்கு முன்பு திருப்பணி செய்தோர்: கொண்டமல்லி சங்கய்யா நாயக்கர் மகன் சின்ன முராரி நாயக்கர், லக்காபுரம் முத்துக் குமரக் கவுண்டர். இக்கோவிலில் இன்னொரு சிறு திருப்பணியை செய்தவர்: பெரியார் ஈ.வே.ரா.வின் தாயார். வெளிப்பிரகாரத்தில் உள்ள குத்துக்கல் தெரிவிக்கும் செய்தி: “ஈ வேங்கடாசல நாயக்கர் மனைவியார் சின்னத்தாயம்மாள் தன் சிறுவாட்டுப் பணத்தால் கடப்பைக் கல் பாவிய” செய்தி வெட்டப்பட்டுள்ளது.

Related posts