ஆனந்த வாழ்வருளும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மூலவர்: வடபத்ரசாயி, ரெங்கமன்னார்

தாயார்:ஆண்டாள், கோதைநாச்சி

தீர்த்தம்: திருமுக்குளம், கண்ணாடி தீர்த்தம்

* ரெங்கமன்னார் இங்கு சுயம்புவாக இருக்கிறார். வலது கையில் தற்காப்பு கோல், இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள், காலில் செருப்பு அணிந்து ராஜகோலத்தில் அருள்கிறார்.

* ஆண்டாளின் அவதாரத் தலம் இது. ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் மகளாக இத்தலத்தில் ஆண்டாள் அவதரித்தார்.

* புரட்டாசியில் நடைபெறும் பிரமோற்சவத்திற்கு, ஆண்டாள் மாலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அனுப்பப்படும்.

* ஆண்டாள் திருக்கல்யாணத்திற்கு, திருப்பதியில் இருந்து பட்டுப்புடவை கொண்டுவரப்படும்.

* மதுரை சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிவார்.

* மார்கழியில் தன்னுடைய பிறந்த வீட்டுக்கு ஆண்டாள் செல்வார். அப்போது கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் சேர்த்து திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியம் படைக்கப்படும்.

* விருதுநகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சிவகாசியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும், மதுரையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, ஸ்ரீவில்லிபுத்தூர்.

உற்சவங்கள்

10 நாட்கள் ஆடிப்பூரம், புரட்டாசியில் பெரிய பெருமாள் உற்சவம் 10 நாட்கள், பங்குனியில் 10 நாள் திருக்கல்யாண உற்சவம், மார்கழியில் எண்ணெய் காப்பு, கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.
108 கம்பளி

கார்த்திகை மாதம் வரும் கவுசிக ஏகாதசி அன்று, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடன் ஆகியோருக்கு 108 கம்பளிகள் போர்த்தப்படுகிறது. குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்வதாக சொல்கின்றனர்.
தட்டொளி

அந்தக் காலத்தில் கண்ணாடியை ‘தட்டொளி’ என்று அழைத்துள்ளனர். ஆண்டாள் சன்னிதிக்கு எதிரே வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி உள்ளது. இதில்தான் ஆண்டாள், தன்னுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டாராம்.
மஞ்சள் கயிறு

திருமணம் ஆகாத பெண்கள், இங்குள்ள கண்ணாடி தீர்த்த கிணற்றை சுற்றி வந்து, ஆண்டாளை வணங்கி வழிபடுகிறார்கள். அவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த வழிபாட்டால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

Related posts