பிளாஞ்சேரி காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவில்- கும்பகோணம்

பிளாஞ்சேரி காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டு இருக்கிறார் அருள்மிகு கைலாசநாதர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தி்ல் இருந்து வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிளாஞ்சேரி. இங்கு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டு இருக்கிறார் அருள்மிகு கைலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிகொண்டிருக்கிறாள். இந்த கோவிலின் தலவரலாறு மகத்துவமானது. அதைப்பற்றி இங்கே பார்ப்போம்!.

சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதர்-காமாட்சி அம்மன்.

பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவிலில் தனிக்கோவில் கொண்டு சிம்ம வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.

பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவில் உட்புற முகப்பு தோற்றம்.
பிராச முனிவர் பிரதிஷ்டை செய்த சரபசூலினி பிரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே, சப்த ரிஷிகளை அழைத்து தவம் மேற்கொள்ளும்படி கூறினார். அப்போது, அத்ரி மகரிஷியின் மகனான பிராச முனிவர், தாமும் சப்தரிஷிகளோடு சேர்ந்து தவம் இயற்ற விரும்பினார்.

அதற்கு சிவபெருமானின் அனுமதியை வேண்டினார். ஆனால், அவருடைய முன்வினைகள் முழுவதும் தீரவில்லை என்பதால், அவர் தவம் இயற்றுவதற்கு சிவபெருமான் அனுமதிக்கவில்லை.

இதனால் மனம் வருந்திய பிராச முனிவர், தன்னுடைய முன்வினைகள் தீருவதற்கு ஒரு வழி கூறியருளும்படி சிவனாரைப் பிரார்த்தித்தார்.

சிவனாரும் மனமிரங்கி, அவரைப் `பிராச வனஞ்சேரி’ என்ற பகுதிக்கு சென்று, அந்தத் தலத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கயிலாசநாதரை வழிபடும்படி அருள்பாலித்தார். அத்துடன், அந்தத் தலத்தில் சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து ஆயிரம் பவுர்ணமிகள் ஜயமங்களா யாகம் செய்து முடித்தால், முனிவரின் முன்வினைகள் முழுவதும் நீங்கும்; சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடையலாம் என்றும் அருளினார்.

சிவனாரைப் போற்றித் துதித்த பிராச முனிவர், இறை ஆணைப்படி இந்தத் தலத்துக்கு வந்து, பதினெட்டு திருக்கரங்களுடன் கூடிய சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரம் ஜயமங்களா யாகம் செய்து வழிபட்டார். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராகத் திகழும் பெறும் பேறு கிடைத்தது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பழமையான சிவாலயம் பிளாஞ்சேரி கைலாசநாதர் திருக்கோவில். இங்கு மகாசிவராத்திரி வழிபாடு அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அபிஷேக, ஆராதனை வழிபாடுகள் நடைபெறும். இங்கு மகாசிவராத்திரி நாளில் கைலாச நாதரை வழிபட்டு திருக்கயிலாயம் சென்ற பலனை அடைவோமாக!.

ேவறு எங்குமே காண முடியாத ஐந்தரை அடி உயரத்தில் சிம்மவாராஹி அம்மன் இங்கு தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். சிம்ம வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தினத்தில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெறுவது சிறப்பு.

அதேபோல் இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.

அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இதுவாகும். அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை ஆறு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்’’

அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயில், அருள் வழங்கும் வழிபாடுகள்… இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!

‘காரியத்தை தொடங்க அம்பிகையிடம் உத்தரவு கேட்கும் பக்தர்கள்’
இந்த கோவிலில் பவுர்ணமிதோறும் மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம் அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.

Related posts