கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில்

கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில்

கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது.

சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கொடுமுடி.

பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறப்பானதாகும்.

மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி உள்ள சிவபெருமானை மகுடேசுவரர் என்று அழைக்கிறார்கள். மகுடேசுவரரின் திருமணத்தை காண திருமாலும், பிரம்மனும் இங்கு வந்தார்கள் என்பது ஐதீகம். கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது.

கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நாக தோஷம் நீங்குவதற்கு, ஒருவருக்கு எத்தனை வயது ஆகிறதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்ததாக வன்னி மரத்திற்கு அடியில், கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நாக தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறது வரலாறு.

கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது.

கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையமும் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் வந்து சாமியை தரிசித்து செல்கிறார்கள். பழனி கோவில் திருவிழா என்றாலும், கொடுமுடியின் சுற்றுவட்டார கோவில்கள் திருவிழா என்றாலும் கொடுமுடி காவிரி கூடுதுறையில் இருந்துதான் தீர்த்தம் எடுத்துச்செல்லப்படும். இதனால் எப்போதும் கொடுமுடி திருவிழா கோலம் பூண்டு இருக்கும்.

செல்லும் வழி

ஈரோட்டில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவிலும் கொடுமுடி உள்ளது.

முகவரி:

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பாண்டிக் கொடுமுடி-638 151,
ஈரோடு மாவட்டம்.

Related posts