அருள்மிகு கைலாசநாதர் கோவில், நார்த்தம்பூண்டி

Kailasanathar Temple Narthampoondi

நாரதர் பூஜித்த தலமாதலால் நாரதர்பூண்டி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி நார்த்தம்பூண்டி என்றானது. முருகன், நாரதர் இருவருக்கும் தோஷ நிவர்த்தி கொடுத்த தலம் என்பது இதன் சிறப்பாகும்.

கோவிலின் சிறப்புகள்:

இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் அம்மன் வழைபந்தல் என்னும் இடத்தில் சிவனின் சரிபாதி வேண்டி சிவலிங்கம் செய்து வழிபட எண்ணினாள். மண்ணால் ஆன சிவலிங்கம் செய்ய தண்ணீர் தேவைப்பட்டது. எனவே முருகனை வரவழைத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும்படி சொன்னாள். முருகன் தனது வேலாயுதத்தை மேல் திசைநோக்கி வீசினார்.

அங்கிருந்த மலைகுன்றுகளை பிளந்த வேல் செந்நீரை கொண்டு வந்தது.  அப்போது வேல் பட்டு மலையில் தவம் செய்துகொண்டிருந்த ஏழு முனிவர்கள் மாண்டனர். ஏழு பேரை கொன்ற பாவம் முருகனை பிடித்தது. இந்த பாவம் தீர அம்பாளின் அறிவுரைப்படி முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் ஏழு கோவில்களையும், தென்கரையில் ஏழு கோவில்களையும் ஏற்படுத்தினார்.

காஞ்சிபுரம், கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகியவை வடகரையில் உள்ள சப்த கரை கண்டங்கள் என அழைக்கப்பட்டன. தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு, நார்த்தம்பூண்டி, தென்பன்றிப்பட்டு, பழங்கோவில், கரப்பூண்டி, மண்டகுளத்தூர் ஆகியவை தென்கரையில் உள்ள சப்த கைலாயங்கள் எனப்பட்டன. சப்த கைலாயங்களில் மூன்றாவதாக திகழ்வது நாரதர் பூஜித்த நார்த்தம் பூண்டி சிவன் கோவிலாகும். கந்தபுராண வரலாற்றில் இந்த தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. தட்சன் தனது மூன்று பிள்ளைகளை தனக்கு சமமாக ஆக்க விரும்பினார்.

ஆனால் நாரதர் அவர்களுக்கு சிவபோதனை செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார். தனது பிள்ளைகளை தன் வழிக்கு வரவிடாமல் தடுத்த நாரதருக்கு, உடல் நிலை கெட தட்சன் சாபம் கொடுத்தான். நாரதர் அந்த சாப நிவர்த்திக்காக நார்த்தம் பூண்டியிலுள்ள கயிலாசநாதரை பூஜித்து 12 ஆண்டு காலம் தவமிருந்தார். இறைவன் பஞ்சமூர்த்திகளோடு ரிஷபவாகனத்தில் நாரதருக்கு காட்சி தந்து சாபத்தை நீக்கினார்.

பின்பு நாரதர் முருகப்பெருமானை வணங்கி சப்தமுனிவர்களின் தலைமைப் பதவியை அடைந்தார். நாரதர் பூஜித்த தலமாதலால் நாரதர்பூண்டி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி நார்த்தம்பூண்டி என்றானது. முருகன், நாரதர் இருவருக்கும் தோஷ நிவர்த்தி கொடுத்த தலம் என்பது இதன் சிறப்பாகும்.

பலன்கள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டி பயனடையலாம் என்பது நம்பிக்கை.

போக்குவரத்து:

போளூரிலிருந்து 19 KM தொலைவில் இக்கோவில் உள்ளது. போளூர் திருவண்ணாமலை சாலையில் உள்ள நாயுடுமங்களம் கூட்டுரோடு சென்று அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று கோவிலை அடையலாம். போளூரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

கோவில் முகவரி:

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,
நார்த்தம்பூண்டி,
திருவண்ணாமலை மாவட்டம்.

Related posts