அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்

அருள்மிகு மாசாணியம்மன் கோயில்

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கோவை மாநகரில் இருந்து தென்மேற்கு 55 கி.மீ. தொலைவிலும் பொள்ளாச்சி நகரிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ. தொலைவிலும் உப்பாற்றங்கரையில் எழில்மிகு இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது

மாசாணியம்மன் திருக்கோயில்

கோயில்
திருவிழா
சிறப்பு
திறக்கும் நேரம்
பொது தகவல்
பிராத்தனை
நேர்த்திக்கடன்
தலபெருமை

மூலவர் : மாசாணியம்மன் (மயானசயனி )

தீர்த்தம் : கிணற்றுநீர் தீர்த்தம்

ஊர் : பொள்ளாச்சி, ஆனைமலை

மாவட்டம்: கோயம்புத்தூர்

மாநிலம்: தமிழ்நாடு


தை மாதத்தில் 18 நாள் திருவிழா நடைபெறுகிறது. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

அருள்மிகு மாசாணியம்மன் சிறப்புக்குக் காரணம் மூலவுரு அமைப்பின் தனித்தன்மையே ஆகும். பொதுவாக மற்ற எல்லா திருக்கோயில்களிலும் தனி அம்பிகையின் தோற்றம் நின்ற கோலத்தில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். அந்த திருவுருவங்கள் சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்பட்டன. ஆனால் அருள்மிகு மாசாணியம்மன் தோற்றம் அத்தகையதல்ல.

  அம்மன் மயான தேவதையாக 17 அடி நீளத்தில் சயனித்த கோலத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும். மயானத்தில் வீற்றிருக்கும் மகாசக்தியினை வணங்குகிற எவரும் பொய் சொல்லவும், வஞ்சகம் நினைக்கவும் முடியாது. அருள்மிகு மாசாணியம்மன் நீதி தேவதையாக விளங்குவதால் நீதிக்கல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நீதிக்கல்லின் மகிமை என்னவென்றால் பில்லி, சூனியம், எந்திரம், ஏவல் போன்ற பெரும் பகையில் பாதிக்கப்பட்டவர்களும் பொருட்கள் திருட்டு போனவர்களும், மிளகாய் அரைத்து கல்லில் பூசி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர். தங்களது முறையீடு நியாயமானதாக இருந்தால் தவறு செய்தோர் தண்டிக்கப்படுவர் என்று நம்புகின்றனர்.

மிளகாய் அரைத்து நீதி நிறைவேற்றிய பின் தொண்ணூறாவது நாளில் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு நடத்தி மகிழ்வது சிறப்பான காட்சியாகும். இத்திருக்கோயிலில் வேண்டுதல் முறையானது சிறப்பான வழிபாடாகும். பக்தர்களுக்கு தங்கள் வாழ்வில் எந்தெந்த விதமான வேண்டுதல்கள் உள்ளனவோ அதனை ஒரு சீட்டிலே எழுதிக் கொடுத்தால் அதனை அம்மனின் கையிலே கட்டிவிடுவார்கள். அக்கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடத்தி மகிழ்வது திருக்கோயிலின் சிறப்பாகும்.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.

குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க வேண்டிக்கொள்ளலாம்.

அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளைச் சந்தித்து, உடல் உபாதைகளால்அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள். அவளது தரிசனம் பெற ஆனைமலைக்கு செல்ல வேண்டும். சீதையை மீட்கச் சென்ற ஸ்ரீராமர், இந்த அம்மனை வணங்கி அருள்பெற்றுச் சென்றுள்ளது சிறப்பு.

ராமர் வழிபாடு :

சீதையை ராவணன் கவர்ந்து சென்ற போது, அவளை மீட்க ராமர் இவ்வழியே சென்றார். அப்போது, இம்மயானத்தில் பராசக்தியின் வடிவாய் மாசாணியம்மன் இருப்பதை அறிந்து, மயான மண்னைக் கொண்டு அம்பாளை சயன உருவமாக செய்து வழிபட்டுச் சென்றார்.

பெயர்காரணம் :

இங்கு அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் “மயானசயனி’ என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் “மாசாணி ‘என்றழைக்கப்படுகிறாள்.

யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை “உம்பற்காடு’ என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

பெண்களின் அம்மன் :

இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும். செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.

இக்கோயில் வளாகத்தில் உள்ள “நீதிக்கல்லில்’ மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும், “முறையீட்டுச் சீட்டில்’ குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர். அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.

தல வரலாறு:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான். அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும்கட்டளையிட்டிருந்தான். ஓர்நாள், ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்து இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள். இதையறிந்த மன்னன், அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான். ஊர்மக்கள் எதிர்த்தனர். ஆனால், மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான். வருத்தம் கொண்ட மக்கள் மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி, அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர். காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட, மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி வழிபட்டனர்.

சிறப்பம்சம் :

உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி மேலே நோக்கியபடி அருள்பாலிக்கிறாள். சீதையை மீட்கச் சென்ற ஸ்ரீராமர், இந்த அம்மனை வணங்கி அருள்பெற்றுச் சென்றுள்ளது சிறப்பு.

Related posts