துணிவே துணை சந்திரபாகா தேவி கோயில்

சந்திரபாகா தேவி

மனிதனை அதிகமாக ஆட்டிப் படைப்பது பயம். இதுவே நோய்களுக்கு காரணம். குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள சந்திரபாகா தேவி கோயிலை இப்படிப்பட்டவர்கள் தரிசித்தால் ‘துணிவே துணை’ என்ற எண்ணம் வரும்.


முதல் யுகமான சத்திய யுகத்தில் உருவான கோயில் இது. சரஸ்வதி, கபிலா, ஹிரண்யா என்னும் ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்தில் கோயில் உள்ளது. சந்திரனின் பிறை போல கடல் இங்கு இருப்பதால் சந்திரபாகா எனப்படுகிறது.
தாட்சாயிணி சிவபெருமானை திருமணம் செய்தாள். இதனால் அவளின் தந்தை தட்சன் கோபம் கொண்டு தான் நடத்திய யாகத்திற்கு மருமகனை அழைக்கவில்லை. தாட்சாயிணி நியாயம் கேட்க, அவளை தட்சனோ அவமானப்படுத்தினான். அவள் யாக குண்டத்தில் குதித்து உயிர் விட்டாள். மனைவியின் உடலைத் தோளில் தாங்கியபடி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். இதையறிந்த தாட்சாயிணியின் சகோதரரான மகாவிஷ்ணு சக்கரத்தால் அவளது உடலை 51 கூறுகளாக வெட்டி சிதற விட்டார். அவளது தோள்பட்டை இத்தலத்தில் விழுந்தது. அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. அம்மனுக்கு சந்திரபாகா தேவி எனப் பெயர் சூட்டப்பட்டது.


மூன்று வாசல்கள் கொண்டது இக்கோயில். நடுவாசல் வழியாக நுழைந்தால் கருவறையில் சந்திரபாகா தேவி உக்கிரமாக காட்சியளிக்கிறாள். வழிபடுவோருக்கு கருணையுடன் வரம் தருகிறாள். அம்மனின் அம்சமாக பிண்டக்கல் ஒன்றில் செந்துாரம் பூசியபடி தனியாகவும் பிரதிஷ்டை செய்துள்ளனர்


வக்ர துண்டு என்னும் கால பைரவர், கார்த்திகேயர், கணேஷ், குரு தத்தாத்ரேயர் சன்னதிகள் இங்குள்ளன. குஜராத்திய பாணியில் விமானம், குழி மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கூடலில் நீராடி அம்மனை தரிசித்தால் முன்வினை பாவம் பறந்தோடும். கார்த்திகை மாத பவுர்ணமியில் திருவிழா நடக்கிறது.


கோயிலுக்கு பின்புறத்தில் ராமர் கோயில் உள்ளது. இத்தலத்தில் இருந்து கிருஷ்ணர் இறுதி மூச்சை விட்டு வைகுண்டம் புறப்பட்டார். சந்திரபாகா தேவி கோயிலில் இருந்து 3 கி.மீ., தொலைவில் சோமநாத் சிவன் கோயில் உள்ளது. இங்கு வழிபட்ட சந்திரனுக்கு சாபம் நீங்கியது.

எப்படி செல்வது: விராவலில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாள்: நாகபஞ்சமி, நவராத்திரி, கார்த்திக் பூர்ணிமா, மகாசிவராத்திரி
நேரம்: அதிகாலை 5:00 – 12:00 மணி; மாலை 4:00 – 9:00 மணி
தொடர்புக்கு: 02871 – 233 391
அருகிலுள்ள தலம்: சோமநாத் ஜோதிர்லிங்க கோயில் 4 கி.மீ.
நேரம் : காலை 7:30 – 11:00 மணி; மதியம் 12:30 – 6:30 மணி; இரவு 7:30 – 10:00 மணி
தொடர்புக்கு: 094282 – 14823

Related posts