ஆம்ரவனேஸ்வரர் கோவில், திருமாந்துறை

ஆம்ரவனேஸ்வரர் கோவில், திருமாந்துறை

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 58-வது தலமாக இருப்பது திருமாந்துறை. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

இறைவன் பெயர்: ஆம்ரவனேஸ்வரர்

இறைவி பெயர்: பாலாம்பிகை

எப்படிப் போவது :

திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில், திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், லால்குடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. 

ஆலய முகவரி

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்
மாந்துறை அஞ்சல்
லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621 703.

இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆம்ரம் என்றால் மாமரம். இத்தலத்தில் மாமரங்கள் அதிகமாக இருந்ததால் மாந்துறை என்று பெயர் பெற்றது. இந்த தலம் வடகரை மாந்துறை என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் – மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள ஆடுதுறை என்ற ஊரில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் உள்ள மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை எனப்படுகிறது. தென்கரை மாந்துறை ஒரு தேவார வைப்புத்தலம்.

கோவில் ஒரு கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால், இறைவனை மிருகண்டு முனிவர் வழிடும் சித்திரங்களைக் கண்டு மகிழலாம். 

பிராகாரத்தில் தலமரம், விநாயகர், முருகன், கஜலட்சுமி, நவக்கிரகங்கள், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் காட்சி தருகின்றன. நால்வருள், சுந்தரர் கைத்தடியேந்தி நிற்கின்றார். நவக்கிரக சந்நிதியில் இங்கு சூரியன் தனது இரு மனைவிகளுடன் இருப்பதுபோல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே, சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கின்றன.

இறைவன் ஆம்ரவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது. அந்த நாள்களில் இவ்வாலத்தில் சூரிய பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அம்பாள் பாலாம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோமவாரங்கள், திருவாதிரை, சிவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.

திருப்புகழ் தலம் : 

மேற்குப் பிராகாரத்தில், வள்ளி, தெய்வானையுடன் தனி சந்திதியில் சுப்பிரமணியர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமான் சுமார் 5 அடி உயர கம்பீரமான தோற்றப் பொலிவுடன் உள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

தலச் சிறப்பு :

திருவண்ணாமலையில், சிவபெருமான் முடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரம்மா, தான் பெற்ற சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக்கொண்டார். சூரியனுடைய மனைவி சம்யாதேவி, தன் கணவனின் உக்கிரமான ஒளியைப் பெறுத்துக்கொள்ள முடியாமல், இத்தலத்தில் தவம் இருந்து சூரிய ஒளியைத் தாங்கிக்கொள்ளும் சக்தியைப் பெற்றாள். கெளதம முனிவரின் மனைவி அகலிகையை தகாத எண்ணத்துடன் தீண்டியதால், இந்திரனை கெளதம முனிவர் சாபமிட்டார். இந்திரன் தன்னுடைய சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக்கொண்டதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. தட்சனின் யாகத்தில் கலந்துகொண்டதால் உண்டான தோஷம் நீங்க, சூரியன் வழிபட்டு பயன் அடைந்த தலம் இதுவாகும்.

ஆம்ரவனேஸ்வரர் கோவில்

தல வரலாறு :

முன்னொரு காலத்தில், மாமரங்கள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபசாரம் செய்ததால், மானாகப் பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாகப் பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்குப் பிறந்தார். ஒருநாள், குட்டி மானை விட்டுவிட்டு தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரை தேடச் சென்ற இடத்தில், வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும் பார்வதியும், அவற்றை அம்பால் வீழ்த்தி சாப விமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மற்றும் தந்தை மான்கள் இருப்பிடத்துக்குத் திரும்பாததால் கலங்கிய குட்டிமான், கண்ணீருடன் காத்துக்கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்குப் பசியெடுக்கவே அது அலறியது.

சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான்கள் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்குப் பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான், தன் சாபத்துக்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக, சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதி தேவியும் இங்கேயே தங்கினாள். இறைவன் சந்நிதி கருவறை நுழைவு வாயிலில் மேலே, இறைவனும் இறைவியும் தந்தை மற்றும் தாய் மான்களாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது. மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் மாந்துறை என வழங்கப்படுகிறது.

மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில், இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில், இறைவன் ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால், சகல தோஷவகளும் நீங்கி குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் இதை உறுதிப்படுத்துகிறார்.

இவ்வாலயம், மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. அவர்கள் இத்தலத்தில் இறைவனையும் இறைவியையும் வழிபட்டு அர்ச்சனை செய்து வந்தால், அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். இக்கோவிலில் மாதந்தோறும் மூல நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருமணத் தடை நீங்கவும், கல்வியில் மேன்மை பெறவும், வாழ்க்கையில் உள்ள தீராத இன்னல்கள் தீங்கவும், செய்யும் தொழில் மேன்மை அடையவும், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் அனைத்து மற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு இறையருள் பெற, ஒரு முறை இத்தலம் சென்று வழிபட்டு வரவும்.

Related posts