ஏற்றம் தரும் ஏலகிரி வேங்கடரமணர்

Yelagiri-Venkataramanar

திருமலையில் அருளும் அந்த வேங்கடேச பெருமாள், வேறு பல மலைகளிலும் கோயில்கொண்டு அருள்புரிவதைப் போலவே, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள ஏலகிரி மலையிலும் கல்யாண வேங்கடரமணனாகத் திருக்கோயில் கொண்டு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்டான் போலும்! சென்னையில் முதலீடு மற்றும் நிதி ஆலோசகராக இருக்கும் ஈஸ்வரபிரசாத், ஓய்வுநேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். அவர்தான் அந்தக் கோயிலைக் கட்டியுள்ளார்.

அவருக்கு அப்படி ஓர் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

”ஒருமுறை நான் என்னுடைய நண்பரும், பெருமாளின் தீவிரமான பக்தருமான கார்த்திகேயனுடன் ஏலகிரிக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு மலை உச்சியில் ஒரு ஜோதி தோன்றி மறைந்ததுபோல் இருந்ததாகச் சொன்னார். அது அவருடைய மன பிரமையாக இருக்கும் என்று நினைத்து, அப்போதே மறந்துவிட்டேன். பிறகு, ஏலகிரி மலையில் இருந்த அத்தனாவூர்ங்கற கிராமத்தில் மனைகளைப் பார்வையிடப் போயிருந்தபோது, ஒரு பாறையில் சங்கு சக்கரம் போன்ற உருவங்கள் இருந்ததையும், அதன் கீழே யாரோ அகல் விளக்கு ஏற்றி வைத்திருந்ததையும் பார்த்தோம். இதைத்தான் பெருமாள் குறிப்பால் உணர்த்தினார்போலும் என்று மெய்சிலிர்த்துப் போனோம். ‘ஏற்கெனவே பெருமாள் வழிபாடு நடக்கும் இந்த இடத்தில் நாம சின்னதா ஒரு கோயில் கட்டலாமே!’ன்னு ரெண்டு பேருமே எங்களுக்குள் பேசிக்கொண்டு, தீபம் ஏற்றப் பட்டிருந்த அந்த இடத்தையே விலைக்கு வாங்கி, அங்கேயே கோயில் கட்டலாம்னு முடிவு பண்ணோம். அந்த நிமிஷத்துல இருந்து நடந்தது எல்லாமே அவன் செயல்தான்!” என்று ஈஸ்வரபிரசாத் சொல்லிக் கொண்டிருந்தபோதே, குறுக்கிட்டார் அவருடைய மனைவி டாக்டர் ஸ்ரீ கலா பிரசாத்,

”ஏலகிரியில் ரியல் எஸ்டேட் பண்றேன்னு போனவர், திடீர்னு வந்து பெருமாள் கோயில் கட்டப்போறேன்னு சொன்னதும், எனக்கு ஒண்ணுமே புரியல. கோயில் கட்டறதெல்லாம் விளையாட்டான காரியமா? ஏதோ சும்மா சொல்றார்னுதான் நினைச்சேன். ஆனா, அவங்க இறங்கின வேகத்தையும், செயல்ல காட்டிய தீவிரத்தையும்விட, அந்த வேங்கடேசப் பெருமாள் காட்டின வேகம் அசாத்தியமா இருந்தது. பெருமாள் கோயில் கட்டுவதற்கு ஏலகிரியில் இடம் வாங்கப் பணம் திரட்டுறதுக்காகப் பெரிய செல்வந்தர்களைத் தேடிப் போகலாம்னு நினைச்சப்போ, விஷயத்தைக் கேள்விப்பட்ட எங்க நண்பர்கள், ‘கோயில் கட்டுற முயற்சியில் எங்களையும் இணைச்சுக்குங்க. பகவான் கைங்கர்யம் செய்ய நாங்களும் கொடுத்து வெச்சிருக்கணுமே!’ன்னு சந்தோஷமா முன்வந்தாங்க. இறைவன் திருவருளால், ‘ஏலகிரி தாயார் சமேத கல்யாணவேங்கடரமணன்’னு பகவானுக்கு அழகிய திருநாமம் சூட்டினோம். அதுக்கப்புறம் எல்லாமே ராக்கெட் வேகம்தான்! நண்பர்கள் நாங்க ஒன்பது பேர் செர்ந்து, ‘ஏலகிரி தாயார் அறக்கட்டளை’யை உருவாக்கினோம். ஒன்பது பேர் கௌரவ தாளாளர்களாகவும், 40 பேர் நிர்வாக உறுப்பினர்களாகவும் நியமனம் செய்து, நாங்களே எங்களுக்குள் வேலைகளைப் பிரிச்சுக்கிட்டு, பரபரன்னு செயல்ல இறங்கிட்டோம்.

வாணியம்பாடியில் மகளிர் மருத்துவராக இருக்கிற டாக்டர் ஸ்வதந்த்ரா கோவிந்தராஜன், சித்த மருத்துவர் சரோஜா என்று சில நல்ல உள்ளங்களின் அறிமுகமும் நட்பும் கிடைச்சுது. அவங்களும் பல உதவிகள் செய்தாங்க. பூமி பூஜை போட்டு, மளமளன்னு கட்டுமான வேலைகளை ஆரம்பிச்சோம்!” என்று நெகிழ்கிறார் ஸ்ரீ கலா.

”பெருமாள் விக்கிரகத்தை எங்கே உருவாக்கலாம்னு பலரிடம் விசாரிச்சப்போ, தேனியில் இருக்கும் ஸ்தபதி செல்வம், தானே பெருமாளின் திருமேனியை வடிச்சுத் தர்றதா ஏத்துக்கிட்டார். சிரித்த முகத்துடன், சதுர் புஜங்களுடன், ராஜ கம்பீரம் பொருந்திய வேங்கடரமணன் 8 அடி உயரத்தில் உருவானது அடுத்த அற்புதம்! அதைத் தேனியில் இருந்து ஏலகிரிக்குக் கொண்டு வரும்போது, தமிழ்நாட்டின் பல நகரங்கள் வழியாகவும் கொண்டு வந்து, எல்லா ஊர்களிலும் பக்தர்கள் சேவிக்கிற மாதிரி ஏற்பாடு செய்திருந்தோம். உடன் தாயார், ஆண்டாள் திருவுருவங்களும், உற்சவரும் உருவாக்கி எடுத்துட்டு வந்தோம். மூவருக்கும் சந்நிதிகள் அமைச்சு, விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து முடிச்சு, 2011 பிப்ரவரியில் சிறப்பாக சம்ப்ரோக்ஷணமும் செய்தோம்” என்று தொடர்ந்த ஈஸ்வரபிரசாத் இப்போது வசந்த மண்டபம் மற்றும் பக்தர்கள் வந்தால் தங்குவதற்கு விடுதிகள் போன்ற பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அத்தனாவூர் கிராமத்தின் மலை முகடுகள், யூகலிப்டஸ் மரங்கள், குன்றுகள் என்று கடந்துபோனால், திவ்ய தரிசனம் தருகிறது ஏலகிரி தாயார் கோயில் விமானம். சிறிய பள்ளத்தாக்கில் இருப்பதால், 20 படிகள் இறங்கிச் செல்ல வேண்டியுள்ளது. மூன்று சந்நிதிகளுடன் கட்டப்பட்ட அந்தக் கோயில் இப்போது கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார், ஆஞ்சநேயர், உடையவர், சுற்றிலும் நந்தவனம் என முழுமையான கோயிலாகப் பரிமளிக்கிறது. கர்ப்பகிரஹத்தில் எட்டு அடி உயரத்தில், விஸ்வரூபம் எடுத்துக் காட்சி தரும் கல்யாண வேங்கடரமணனுக்கு ஏழுமலை வேங்கடேசப் பெருமாளுக்குச் செய்வது போன்ற அலங்காரம்… அப்படியே திருப்பதியில் இருப்பது போன்ற உணர்வு! அங்கேயே பட்டரை நியமித்து ஆறு கால பூஜைகள், திருமஞ்சனம் போன்றவை நடைபெறுகின்றன. அது மட்டுமல்ல, மாத ஏகாதசி தொடங்கி, புரட்டாசி பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், வைகுண்ட ஏகாதசி, வருஷாபிஷேகம் என எந்தத் திருநாளும் விட்டுப்போகாமல் எல்லாமே மிகச் சிறப்பாக சம்பிரதாயப்படி நடைபெறுகின்றன.

கோயிலில் இருந்து படி ஏறி வந்தால், மேலே இருக்கும் சமதளத்தில் ஒரு கூடம் நிர்மாணிக்கப்பட்டு, தினசரி அன்னதானமும் நடக்கிறது. தரிசனம், தீபாராதனையைச் சேவித்து முடித்து, தாயார், ஆண்டாளைச் சேவித்து, பிராகாரம் வந்தால், சிறிது உயரத்தில் இருக்கிறார் உடையவர். அவரையும் வணங்கினோம். பிராகாரத்தில் துளசி மாடம்… அது மட்டுமின்றி, சுற்றிலும் வாழை, நெல்லி, செம்பருத்தி, நந்தியாவட்டை, அரளி என்று பச்சைப்பசேல் நந்தவனம். கொடிமரத்தின் அருகே நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்து சுற்றிலும் பார்த்தால், இயற்கை அன்னையின் எழில் காட்சி! கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் குன்றுகள், மலைப் பிரதேசங்களில் மட்டுமே தென்படக்கூடிய சில வகை மரங்கள், அடர்நிறப் பூக்கள் என ஏலகிரியின் மொத்த அழகையும் அள்ளிப் பருக முடிகிறது.

குறை ஒன்றும் இல்லாமல் மனதை நிறையச் செய்யும் மலையப்பனின் தரிசனத்தால் மனசெல்லாம் பூரித்திருக்க, பிரசாதம் பெற்றுக் கிளம்பினோம். காக்கும் கடவுளைக் கண்ணாரக் கண்டு வணங்கிய பரவசத்தோடு, கலப்படம், மாசு இல்லாத இயற்கையை தரிசித்த பேரானந்தமும் போனஸாகக் கிடைப்பது, ஏலகிரி பெருமாள் ஆலயத்தின் தனிச்சிறப்பு!

எப்படி செல்வது
* திருப்பத்துாரில் இருந்து 22 கி.மீ.,
* ஜோலார் பேட்டையில் இருந்து 18 கி.மீ.,
விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி பிரம்மோற்ஸவம், தனுர்மாத பூஜை, பங்குனி உத்திரம்
நேரம்: காலை 7:00 – 11:00 மணி; மாலை 4:00 – 7:00 மணி
தொடர்புக்கு: 98402 62578
அருகிலுள்ள தலம்: அத்தினாவூர் பாலமுருகன் கோயில் 5 கி.மீ.,
நேரம்: காலை 8:00 – 1:00 மணி; மாலை 4:00 – 6:00 மணி

Related posts