இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-தமிழ் ஞானசம்பந்தர்!

ஞானசம்பந்தர்

வைகாசி மூலம் திருஞானசம்பந்தரின் திருநாளாகத் திகழ்கிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் திருநீற்றின் ஒளி விளங்கவும், சைவ சமயம் தழைத்தோங்கவும் உதித்த பெருமக்கள்.பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பாடுகின்றார்.

வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கபூத பரம்பரை பொலியப்புனிதவாய் மலர்ந்து அமுதசீதவள வயற்கலித்திருஞான சம்பந்தர்பாதமலர் தலைக் கொண்டுதிருத்தொண்டு பரவுவாம்.

சோழ வளநாட்டில் சீர்காழித் தலத்தில் சிவபாத இருதயர் – பகவதி தம்பதியர்கட்கு குருமகவாகத் தோன்றியவர் சம்பந்தர்.ஐந்தாம் நூற்றாண்டில் அவதரிக்க இவரை ‘தென்னகத்தின் முதல் தமிழர் தலைவர்’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ் விரகன், அருந்தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன், நல்ல செந்தமிழ் வல்லவன் என்று பாடல்களில் தம்மைப் பெருமிதம் பொங்கப் பேசுகின்றார், சம்பந்தர். தமிழர் வழிபாடு, தமிழ் இசை ஆகியவற்றின் மறுமலர்ச்சிப் பயணமாய் திருஞானசம்பந்தரின் தல யாத்திரைகள் போற்றப்படுகின்றன.

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் முளைக்கத் தொடங்கிய மூன்றாம் ஆண்டிலேயே முதல்வியின் திருமுலைப்பால் உண்டு.

‘தோடுடைய செவியன் விடையேறி தூவெண் மிது சூடிக்
 காடுடைய சுடலைபொடி பூசி என்உள்ளம் கவர் சுன்வன்.
 ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள் செய்த,
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மாள் இவன் அன்றே’

 – என்று அம்மையப்பனையே தந்தைக்குச் சுட்டிக்காட்டிய சுட்டியாகச் சுடர் விட்டார். அம்மையின் திருமுலைப் பால் அருந்திய ஞானக் குழந்தை பதினாறு வயதிற்குள் நிகழ்த்திய அற்புத சாதனைகள் சிவநெறிச் சிறப்பையும், செம்மொழித் தமிழின் திறத்தையும் இவ்விரிந்த வையத்திற்கு விளங்கச் செய்தன. ஐந்தெழுத்து அமையப்பெற்ற பொற்றாளம் பெற்றார். வறண்ட பாலை நிலத்தைத் தன்தேவாரத்தால் வளமான நெய்தலாக மாற்றினார். முத்திச் சிவிகை பெற்றார். முயலக நோயைத் தீர்த்தார். பழக்காசைப் பரமனிடமிருந்து பெற்று பஞ்சத்தை நீக்கினார். சமணர்களால் பாண்டிய மன்னனைப் பற்றிய வெப்பு நோயைத் திருநீற்றுப் பதிகம்பாடி தீர்த்தார். அனல்வாதம், புனல்வாதம் செய்து சைவ சமயத்தை நிலை நாட்டினார். சாம்பலாய் ஆன பூம்பாவைக்கு மீண்டும் வாழ்வு தந்தார்.

சீட்டை எழுதிவை ஆற்றில் எதிர்உற
  ஓட்டி அழல் பசைகாட்டி சமணரை
சீற்றமொடு கமு ஏற்ற அருளிய குருநாதா

 – என்று அருணகிரியார் திருப்புகழில் சம்பந்தரைப் போற்றுகிறார். மேலும் முருகப் பெருமானிடம் அருணகிரியார் கேட்ட வரம் என்ன தெரியுமா?
சம்பந்தரைப் போல் சந்தத் தமிழ்ப்பாடும் திறனை அடியேனுக்கும் அருளி ஆதரிக்க வேண்டும் என்பதுதான்.

பூமியதனித் பிரபுவான
புகலியில் வித்தகர் போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமை தனக்கு அருள்வாயே !

இறைவனாகவே  முருக அவதாரமாகவே திருஞானசம்பந்தரை அருணகிரியார், அருட்பிரகாசர், ஒட்டக்கூத்தர் போற்றி மகிழ்கின்றார்கள். பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் சம்பந்தரின் திருக்கடைக்காப்பு என்பதாக விளங்குகின்றது. இறைவனை தாய் தந்தையாகவும், தம்மைப் புதல்வனாகவும் கொண்டு சக்புத்திரமார்க்கம்- மகன்மை நெறி விளங்கச் செய்த வித்தகர் இவர். வைகாசி மூலத்தில் சிவ
பிரானோடு ஐக்கியம் ஆன ஞானப்பிள்ளை தந்து சென்ற பாடல்கள் பதினாறு ஆயிரம். ஆனால்,

இடைப்பவை குறைவே!
இடரினும் தளரினும்  எனதுவறு னோய்
தொடரினும் உகைழல் தொழுது எழுவேன்!
வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உதைழல் விடுவேன் அல்லேன்!
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடிஅலால் உரையாது என் நா!

பற்றற இறைவனைச் சிக்கெனப் பற்றிக் கொள்வதே மனிதர்களின் மாறாக நிலையாக விளங்க வேண்டும் என்று சம்பந்தர் எடுத்துரைக்கின்றார். அறுபத்துமூன்று நாயன்மார்களின் சரித்திரமான பெரியபுராணத்தில் சம்பந்தரின் வரலாறுதான் சரிபாதியாக உள்ளது. ‘பிள்ளைபாதி புராணம்பாதி’ என்பது வழக்கு.

ஞான சம்பந்தர் இல்லையென்றால் தமிழ் ஏது? திருநீறு ஏது? உருத்திராக்கம் ஏது? சைவம் ஏது? என்று அர்த்தமுள்ள வினாவை எழுப்புகின்றார் அண்மையில் வாழ்ந்த அறுபத்து நான்காவது நாயன்மார் என்று போற்றப்பட்ட திருமுருக வாரியார் சுவாமிகள்.ஞானசம்பந்தரின் அருள்வாழ்வை ‘இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேனாக’ எடுத்து ஓதுகிறது கீழ்க்கண்ட பாடல்.

புனலில் ஏடு எதிர் செல் எனச் செல்லுமே!
புத்தனார் தலைதத்தெனத் தத்துமே!
கனலில் ஏடு இடப் ‘பச்’ சென்று இருக்குமே!
கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே!
பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே!
பழைய என்பு பொற்பாவை யதாக்குமே!
சின அராவிடம் தீர் எனத் தீருமே!

செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே !

Related posts