அழகியமலையில் வீற்றிருந்தருளும் தம்பிரானே

Lord Murugan Temples

க்ஷேத்ரக் கோவைப் பாடலில் இனி வருவது ‘குன்று தோறாடல்’. இது முருகன் குடிகொண்டிருக்கும் பல மலைகளுக்கும் பொதுவான ஒரு சொல். முருகப் பெருமான் குறிஞ்சி நிலக் கடவுள் ஆதலின், ‘மலைக்கு நாயகன், மலைக் கிழவோன், கிரிராஜன் எனப் பலவாறாக அழைக்கப்படுகிறான். முருகன் குன்று தோறாடும் குமரன்’ எனும் பொருளில் ஐந்து தனிப் பாடல்கள் பாடியுள்ளார், அருணகிரிநாதர்.

‘‘அதிருங் கழல் பணிந்துன் அடியேனுன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந்  தனிலிருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள்  கலங்க அருள்வாயே
எதிரங்கொருவரின்றி  நடமாடும்
இறைவன் தனது பங்கில்  உமைபாலா
பதியெங்கிலுமிருந்து விளையாடிப்
பல குன்றிலுமமர்ந்த பெருமாளே ’’

ஒலிக்கின்ற கழலணிந்த உன் திருவடியைப் பணிந்து, பிறவிக் கடலிலிருந்து பிழைத்தெழும் நிலையைக் காண்பதற்கு நீயே அபயம் என்று கூறி உன்னிடம் சரணடைவது எப்போது?என் உள்ளத்தில் நீ விற்றிருந்து அருள்புரிந்து எனக்கு நேர்கின்ற துன்பங்கள் அஞ்சி என்னை விட்டு அகல அருள் புரிவாயாக,
தனக்கு ஒப்பானவரென யாரும் இல்லாமல் நடனம் புரியும் சிவபெருமானது ஒரு பாகத்தில் உறையும் உமையின் திருக்குழந்தையே! எல்லாத் தலங்களிலும் வீற்றிருந்து விளையாடிப் பல மலைகளிலும் வீற்றிருக்கும் பெருமாளே! என்று பாடுகிறார்.

‘‘சிறை விடா நிசாசரர்  சேனைகள்
மடிய நீல கலாபமதேறிய
திறல் விநோத சமேள தயாபர, அம்புராசித்
திரைகள்போல் அலை மோதிய சீதள
குடக காவிரி நீரலை சூடிய
திரிசிராமலை மேலுறை வீர, குறிஞ்சிவாழம்
மகிழுநாயக, தேவர்கள் நாயக,
கவுரி நாயகனார் குருநாயக,
வடிவதாமலை யாவையு மேவிய தம்பிரானே’’
 – என்பது மற்றொரு பாடல்.

தேவர்கள் விடாமல் சிறை வைத்திருந்த அசுர சேனைகள் மாளும்படி நீலத்தோகை மயில்மீது வரும் சாமர்த்திய விநோதனே! கருணை கலந்த மூர்த்தியே! கடல் அலைகள் போன்ற பெரிய அலைகளை மோதி வருவதும், குளிர்ந்ததும், மேற்கிலிருந்து வருவதுமான காவிரியின் அலைகள் அணைந்துள்ள திரிசிராமலை மேல் வீற்றிருக்கும் வீரனே!

குறிஞ்சி நிலத்தில் வாழும் வேடர்களுக்குத் தலைவனே! ஆதி விநாயகருக்கு தம்பியான நாயகனே! காவிரிக்கு நாயகனே! ஆனை வளர்த்த தேவசேனையின் நாயகனே! மான் போன்ற விழிகளை உடைய எங்கள் வள்ளியிடத்தே மகிழும் நாயகனே! தேவர்களுக்கு நாயகனே! கௌரியின் நாயகனாம் சிவபிரானுக்குக் குரு நாயகனே! அழகிய மலை எல்லாவற்றிலும் வீற்றிருந்தருளும் தம்பிரானே!

இப்பாடலில் ‘‘ஓரிடத்தில் தங்காது பறவை போலத் திரிந்துலவும் மெய் ஞானிகளும், மவுனிகளும், அணுகரிய ரகசியமாய் விளங்குவதும், பிராணாயாமத்தால் ஒன்றுபடக் கூடிய சிவதத்துவ ஒலியாய் விளங்குவதும் சொல்லவொணாததும், சேரவொண்ணாததும், நினைக்க வொண்ணாததுமான கிருபைப் பரம்பொருளாய், பதிப்பொருளான சமாதி நிலை எனும் மனம் ஒடுங்கும் பேற்றை நீ வந்து தருவாயாக’’ என்று முருகனிடம் வேண்டுகிறார்.

குன்று தோறாடும் முருகப் பெருமானிடம் மேலும் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன் வைக்கிறார்.
‘‘குஞ்சரம் யாளி  மேவு  பைம்புன   மீதுலாவு
குன்றவர் சாதி கூடி வெறியாடிக்
 கும்பிட நாடி  வாழ்வு  தந்தவரொடு  வீறு
குன்று  தொறாடல் மேவு  பெருமாளே ’’
‘‘ செஞ்சரண் நாத கீத  கிண்கிணி  நீப மாலை
திண்டிறல்  வேல் மயூர  முகம்  ஆறும்
  செந்தமிழ் நாளும்   ஓதி  உயந்திட நானமூறு
செங்கனி  வாயில் ஓர்  சொல் அருள்வாயே ’’
 – என்கிறார்.

‘‘செம்மையான திருவடியையும், ஒலி இசை செயும் கிண்கிணியையும், கடப்ப மாலையையும் வலிய திறமை வாய்ந்த வேலையும், மயிலையும் முகங்கள் ஆறினையும் செந்தமிழால் நாள்தோறும் ஓதி நான் உய்ந்திட, உன்னுடைய ஞானம் ஊறுகின்ற செம்மையான கனி போன்ற திருவாக்கினால் ஒப்பற்ற உபதேசச் சொல்லைப் போதித்து அருள்வாயாக’’ என்று வேண்டுகிறார். இதையே ஒரு கந்தர் அலங்காரச் செய்யுளில் ‘‘சிகராத்ரி கூறிட்ட வேலும், செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ’’ என்று கூறியுள்ளார்.

மற்றுமொரு  பாடலில்,
‘‘கொஞ்சும் சதங்கைகள் ஒலிக்க நடனம்
செய்த கொன்றை சூடியாம் சிவபெருமான் நாள்தோறும்
  மகிழ்கின்ற புதல்வனே! பூங்கொத்துக்கள்  சேர்ந்த
  சோலைகள் நிரம்பிய குன்றுகளின் சூழல்
  உள்ள மலைகளில் எல்லாம் விளையாடும் பெருமாளே’’

 – என்று விளித்து, ‘பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே என்று வேண்டுகிறார்.க்ஷேத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரிநாதர் குறிப்பிட்டிருக்கும் தலம் மூதூர் என்றும் விருத்தபுரி என்றும் அழைக்கப்படும் ‘திருப்புனவாயில்’ என்ற திருத்தலமே. திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற திருத்தலம். அருணகியார் இங்கு பாடிய ‘உரையும் சென்றது’ எனத் துவங்கும் திருப்புகழ் மட்டுமே நமக்குக் கிட்டியுள்ளது.  இன்று மக்களால் ‘திருப்புனவாசல்’ என்றே அழைக்கப்படுகிறது. ஆவுடையார் கோயிலிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ளது.

நுழைவாயிலில் வல்லபை கணேசர் தண்டாயுதபாணி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர், விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர்; அம்பிகை பெரியநாயகி, பிரஹந்நாயகி. இங்கு மூலவராக விளங்கும் லிங்கம், தஞ்சை பிரஹதீஸ்வரருக்கு அடுத்தபடியான பெரிய லிங்கமாகக் கருதப்படுகிறது. சுவாமிகள் 3 முழம் ஆடையும், ஆவுடையாருக்கு 30 முழம் ஆடையும் தேவைப்படுகிறது. இதனை ஒட்டியே ‘‘மூன்று முழமும் ஒரு சற்று, முப்பது முழமும் ஒரு சுற்று’’ என்ற பழமொழி எழுந்தது. நந்தியும் அளவில் பெரியதே. மகாமண்டபத்தில் வடபுறம் நடராஜர் உற்சவ மூர்த்தியும் தென்புறம் சோமாஸ்கந்தர், நால்வர், சேக்கிழார் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

கோயிலில் நுழைந்து இடப்புறம் திரும்பினால் ஐந்து விநாயகர்கள், சதுர்முக லிங்கம், பெரிய நந்தி, கபில முனிவரின் ஒன்பது புத்திரர்கள் ஆதிசைவ  சிவனடியார்கள்  இவர்களைத் தரிசிக்கலாம். இந்திரன் வழிபட்ட ‘ஆகண்டல’ விநாயகரைத் தரிசிக்கலாம். ஆகண்டலன் என்பது இந்திரனைக் குறிக்கும் பெயர். [திருவானைக்கா ‘திருப்புகழில் ‘‘கமலனும் ஆகண்டலாதி அண்டரும் எமது பிரான் என்று தான் வணங்கிய….’’ எனும் குறிப்பு வருகிறது].

பிராகாரத்தைச் சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி, அறுபத்து மூவர், ஆஞ்சநேயர், மஹாவிஷ்ணு, முருகப் பெருமான் ஆகியோரைத் தரிசிக்கிறோம். அருணகிரியார் இத்தலத்திற்கெனப் பாடிய ஒரு திருப்புகழ் மட்டும் கிடைத்துள்ளது. விருத்தபுரி என்பதனாலோ என்னவோ, முதுமைப் பருவம் பற்றிய நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளார், தன் பாடலில்!

  ‘‘உரையும் சென்றது, நாவும் உலர்ந்தது
  விழியும் பஞ்சுபோல் ஆனது கண்டயல்
  உழலும் சிந்துறு பால்கடை நின்று, கடை வாயால்
  ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்ததும்,
  முறிமுண் கண்டு கைகால்கள் நிமிர்ந்தது
  உடலும் தொந்தியும் ஓடி வடிந்தது பரிகாரி
  வர, ஒன்றும்  பலியாதினி என்றன் பின்
  உறவும் பெண்டிரும் மோதி விழுந்தழ
  மறல்வந்திங்கு எனதாவி  கொளுந்தினம்
                இயல் தோகை
  மயிலுஞ் செங்கைகள் ஆறிரு திண்புய
  வரை துன்றும் கடிமாயையும் இங்கித
  வனமின் குஞ்சரிமாருடன் என்றன்முன் வருவாயே’’

இந்த யாக்கை நிலையற்றது. இப்பிறவி நிலையாத சமுத்திரம் என்றுணர்ந்து, உயிர் பிரியும் தருணத்தில் நீ வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்னதாகவே இறைவனிடம் வைத்துவிட வேண்டும் என்று நம்மை உணரும்படிச் செய்கிறது இப்பாடல்.
பாடலின் பிற்பகுதியில் ராமாயணம் பற்றிய சிறந்து குறிப்பை அளித்துள்ளார்.

‘‘அரிமைந்தன்  புகழ்  மாருதி என்றுள
கவியின் சங்கமிராகவ  புங்கவன்
அறிவுங் கண்டருள்வாயென அன்பொடு  தரவேறுன்
அருளுங் கண்ட  தராபதி  வன்புறு
விஜயங் கொண்டெழு போது புலம்பிய
அகமும் பைந்தொடி சீதை மறைந்திட  வழிதோறும்
மருவுங் குண்டலம் ஆழி சிலம்புகள்
கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி
மணியின் பந்தெறிவாயிது பந்தென   முதலான
மலையுஞ் சங்கிலி போல மருங்குவிண்
முழுதுங் கண்ட நராயணன் அன்புறு
மருகன் தென்புனவாயிலமர்ந்தருள் பெருமாளே’’

ராவணன் சீதையை நய வஞ்சசுகமாகக் கடத்திச் சென்றான். அவனுடன் ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருக்கும்போது, ஒருவேளை தன்னைத் தேடி ராமபிரான் வருவாரேயானால் அவருக்கு உதவியாக இருக்குமே என்றெண்ணிய சீதை, தான் அணிந்திருந்த குண்டலம், மோதிரம், சிலம்புகள், கடகம், தண்டை, பொன்னாலான பாத கிண்கிணிச் சலங்கை கொத்து இவற்றை சிறுசிறு முடிச்சுக்களாகக் கட்டி, சங்கிலிபோல் இணைந்திருந்த மலைத்தொடர்களின் கீழேயும் பக்கங்களிலும் மற்றும் இடைவெளிகளிலும் வீசி எறிந்து கொண்டே சென்றாள். அவள் கடத்திச் செல்லப்பட்ட வழிகளை ராமபிரான் சுலபமாகக் கண்டுகொள்ள முடிந்தது. அப்பெருமானது மருகோனோ என்று பாடலை நிறைவு செய்கிறார்.  

சதுர்தச  லிங்கங்கள் [14] பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த காட்சி சற்று வித்தியாசமாக இருந்தது. நின்ற சீர் நெடுமாற நாயனார் எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்ட கூன் பாண்டியன், பாண்டிய நாட்டைச் சேர்ந்த மற்ற பதின்மூன்று சிவத் தலங்களுக்கான லிங்கங்களை இங்கு ஒரே இடத்தில், ஞானசம்பந்தப் பெருமான் கூறியபடி பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

மதுரை சுந்தரேஸ்வர லிங்கம், குற்றாலம் அகஸ்தீஸ்வர லிங்கம், ஆப்பனூர் சங்கபுரீஸ்வர லிங்கம், திருஏடகம் பத்ரிகேஸ்வர லிங்கம், திருநெல்வேலி சாலிவனேஸ்வர லிங்கம், இராமேஸ்வரம் இராமலிங்கம், காளையார் கோயில் சொர்ணகாளீஸ்வர லிங்கம், திருப்புத்தூர் திருத்தளிநாத லிங்கம், திருப்பரங்குன்றம் பரங்கீஸ்வர லிங்கம், பிரான்மலை உமாலிங்கம், திருவாடானை ஆதிரத்னேஸ்வர லிங்கம், திருச்சுழியல் பூமி நாதலிங்கம், திருப்பூவனம் புஷ்பவனேஸ்வர லிங்கம் ஆகிய  பதின்மூன்று லிங்கங்களையும் இங்கு நிறுவினான் என்று விருத்தபுரி மகாத்மியம் கூறுகிறது.

பெரியநாயகி அம்மை தனிக்கோயிலில் வீற்றிருக்கிறாள். நேர் எதிரே உள்ள குடவரைக் காளியம்மன் கோயில் மொட்டைக் கோபுர வாயிலில் உள்ளது. உக்ர காளி என்பதால் யாரும் உள்ளே சென்று தரிசிக்க அனுமதி இல்லை. கோயிலில் குருந்த  மரம் ஒன்று உள்ளது. சண்டிகேசரை வணங்கி வந்தபோது பூஜை மணி சப்தம் கேட்க, மீண்டும் மூலவரைத் தரிசிக்கச் சென்றோம். காணக் கண்கொள்ளாக் காட்சியாகப் பால் அபிஷேகம் கண்டு மகிழ்ந்தோம். இத்தலத்தின் புராணம் திருவாரூர் தியாகராஜ கவிராயரால் பாடப்பட்டுள்ளது.

‘‘மின்னியல்  செஞ்சடை வெண்பிறையன்  விரி நூலினன்
 பன்னிய நான்மறை பாடியாடிப் பல வூர்கள் போய்
 அன்னம் அன்ன  நடையாளோடும் அமரும் இடம்
 புன்னை நன்மாமலர் பொன்னுதிர்க்கும்  புனவாயிலே’’

– சம்பந்தர் தேவாரம்.

Related posts